சேத்துப்பட்டு அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது

சேத்துப்பட்டு அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது
X
மகளிடம் பாலியல் வன்கொடுமை செயலில் ஈடுபட்ட தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஐம்பது வயதுடைய கூலி தொழிலாளி குடிபோதைக்கு அடிமையானதால் அவருடைய மனைவி தொடர்ந்து அவரை கண்டித்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி இவர்களுக்குள் தகராறு நடந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து தகராறு நீடித்து வந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் மனைவி கணவனை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார்.

மனைவி பிரிந்து சென்ற நிலையில், தனது 10 மற்றும் 7 வயதுகளுடைய இரண்டு பெண் குழந்தைகளையும் கணவரான கூலி தொழிலாளி தனியே வளர்த்து வந்தார். திண்டிவனத்தில் உள்ள விடுதியில் மகள்கள் இருவரும் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி பாண்டியன் தனது இரண்டு மகள்களையும் விடுதியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பொங்கல் விடுமுறை காலங்கள் முடிந்த பிறகும் மகள்களை மீண்டும் விடுதிக்கு கொண்டு சேர்க்காமல், வீட்டிலேயே தங்க வைத்துள்ளார்.

பொங்கல் விடுமுறையில் வீட்டில் இருந்த போது, மகள் என்றும் பாராமல் தனது மூத்த மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து இரண்டு சிறுமிகளும் செஞ்சியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். பாட்டியிடம் தங்கள் தந்தை தகாத முறையில் நடந்து கொண்டதைக் கூறி சிறுமி கதறி அழுது உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகளின் பாட்டி சிறுமிகளின் தாய்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்ட தாய் சற்றும் தாமதிக்காமல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் சென்று நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்து இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி போளூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் பிரபாவதி மற்றும் காவல்துறையினர் உடனடியாக குற்றச்சாட்டு கூறப்பட்ட தந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் 10 வயது சிறுமி அரசு மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

அதனையடுத்து தந்தை மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு அவரை காவல்துறையினர் கைது செய்து நேற்று வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். பெற்ற மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்