பொன்னேரி அருகே மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

பொன்னேரி அருகே மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
X
சிசிடி கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையனின் உருவம்.
பொன்னேரி அருகே மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொன்னேரி அருகே மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் திருட்டு போனது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு மர்ம நபர்கள் இருவரை போலீஸ் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் தசரத நகரில் வசித்து வருபவர் மூதாட்டி சரஸ்வதி ( வயது 72). இவர் இன்று அதிகாலை சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதால் நேற்றிரவு தமது வீட்டை பூட்டி கொண்டு அருகில் உள்ள மகன் வீட்டில் தங்கினார். நள்ளிரவு இவரது வீட்டில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டதால் எதிர்வீட்டில் வசித்தவர் கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து மர்ம நபர்கள் இருவர் அங்கிருந்து குதித்து தப்பி சென்றுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த மூதாட்டி சரஸ்வதி வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கடப்பாரையை கொண்டு வீட்டின் கதவை உடைக்க முயன்றுள்ளது தெரிய வந்தது. அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டதால் கொள்ளையர்கள் தப்பி சென்றதால் வீட்டில் இருந்த நகை, பணம், தப்பியது.

இதே போல பொன்னியம்மன் நகரில் வசித்து வரும் தனியார் நிறுவன ஓட்டுநர் பழனி என்பவர் தமது வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த இரு சம்பவங்கள் குறித்து பொன்னேரி போலீசார் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் மர்ம நபர்கள் இருவர் தலையில் துணியினை சுற்றிக்கொண்டு தசரத நகர் பகுதியில் நள்ளிரவில் சுமார் 2மணி நேரம் நோட்டமிட்டது தெரிய வந்துள்ளது. கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். மூதாட்டி ஒருவரது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!