கமல் ரசிகர்களுக்கு திருநாள்... வியக்க வைத்த 'விக்ரம்' வியாபாரம்
விக்ரம் படக்காட்சி
பண்டிகைக்கால கொண்டாட்டம் போலவே திரைப்படங்களின் வெளியீடும். படத்தின் முதல்நாள் முதல் காட்சி என்பது, ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்குக் கொண்டுபோய் நிறுத்தும். அவ்வகையில், இன்றைய நாள் (3, ஜூன் 2022) நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்களுக்கு கொண்டாட்ட தினமாகும். இன்னமும் இந்த நாயகன் திரை ரசிகர்களின் காதல் இளவரசனாகவே காட்சி தருகிறார் என்பதே குறையாத கொண்டாட்டத்தின் சூட்சுமம். இதனை, அண்மையில் நிகழ்ந்த, 'விக்ரம்' படத்தின் அத்தனை புரமோஷன்களின்போதும் அறிய முடிந்தது.
இந்த நிலையில், படத்தின் வியாபாரம் குறித்த தகவல் அண்மையில் வெளியாகி கோலிவுட்டை மட்டும் இன்றி அனைவரையுமே வியப்பில் புருவம் உயர்த்த வைத்தது. நடிகர் கமல்ஹாசனுடன் மலையாள நடிகரான ஃபகத் ஃபாசில், நடிகர் விஜய்சேதுபதி ஆகியோருடன் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் தோன்றும் இப்படம் ரிலீஸுக்கு முன்பாகவே, சாட்டிலைட் உரிமம், டிஜிட்டல் ஓடிடி என படத்தின் மொத்த பிஸினஸும் 200 கோடி ரூபாயைத்தாண்டியதுதான் அந்த வியப்புக்குக் காரணம். படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் தொலைக்காட்சியும் ஓடிடி உரிமத்தை ஹாட்ஸ்டார் நிறுவனமும் பெற்றுள்ளது.
அண்மையில், படத்தின் புரமோஷன் றெக்கைகட்டி பறந்தது. தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றோடு இந்தியிலும் இன்று வெளியான 'விக்ரம்'. இரண்டு மணி நேரம் முப்பது நிமிடங்கள் ஓடக்கூடிய 'விக்ரம்' படம் தணிக்கைக் குழுவின் யுஏ சான்றிதழ் கிடைக்கப்பெற்றது. உள்ளத்துள்ளல் உற்சாகத்தோடு வெள்ளிக்கிழமை வெளியீடாக 'விக்ரம்' படம் வெளியான இன்றைய நாள் கமல்ஹாசன் ரசிகர்களின் தித்திப்புத் திருநாள் என்பதில் சந்தேகம் இல்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu