விஜய், சூர்யாவை கைத் தூக்கி விட்ட விஜயகாந்த்!

விஜய், சூர்யாவை கைத் தூக்கி விட்ட விஜயகாந்த்!
X
விஜயகாந்த்தின் நினைவிடத்திற்கு சிவகுமார் தன் மகன் கார்த்தியோடு வந்து சென்றிருக்கிறார்.

காலத்தை தான் பழி சொல்ல வேண்டி இருக்கிறது. விஜயகாந்த் வரும் முன்பே சிவக்குமார் நாயகனாக இருந்தவர். இருவருக்குமான நிலை மாற்றங்களை காலம் முன்பே நிச்சயித்து வைத்திருக்க வேண்டும். விஜயகாந்த் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த நேரம். அதாவது சட்டம் ஒரு இருட்டறைக்கு முன் விஜயராஜ் நாராயணன் அப்போது அவர் பெயர்.

அந்த காலகட்டங்களில் சிவகுமார் பீக் ஹீரோ. வருடத்துக்கு பத்து படங்களுக்கு மேல் நடிக்கும் சிறு தயாரிப்பாளர்களின் ஆதர்சநாயகன். கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கிய விஜயகாந்த்தை எம்.ஏ.காஜா இனிக்கும் இளமை படத்தில் வில்லனாக்கினார். விஜயராஜ் விஜயகாந்தானார். ஆனாலும் பெரிய வாய்ப்புகள் வரவில்லை. பொண்ணு ஊருக்கு புதுசு படம் திரைக்கதாசிரியர் ஆர்.செல்வராஜ் இயக்கத்தில் ஹிட்டடித்த நேரம். அடுத்து அகல்விளக்கு படத்தில் கோபக்கார கம்யூனிஸ்ட் சித்தாந்த ஈர்ப்புடைய இளைஞனாக நாயகனாக அழைத்தார் ஆர்.செல்வராஜ். இடையில் பத்மப்ரியா, அலெக்ஸ் பாண்டியன் நடித்த 'நீரோட்டம்' படத்திலும் நடித்துக்கொண்டிருந்த போது 'சாமந்திப்பூ' என்கிற படத்தில் விஜயகாந்துக்கு 1980ல் ஒரு சிறு வேடம் கிடைத்தது. நாயகன் சிவகுமார், நாயகி ஷோபா. ஷோபாவை காதலிக்கும் இரண்டாவது நாயகன் விஜயகாந்த். அது தான் விஜயகாந்த்- சிவகுமார் நடித்த முதல் படம். விஜயகாந்துக்கு அதிக காட்சிகள் கிடையாது. இரு லெஜண்ட்கள் சிவகுமார்-ஷோபாவுக்கிடைய விஜயகாந்தும் வந்து போனார். இதே படத்தில் சத்யராஜும் சிறு வேடத்தில் வந்து போனார். டைட்டில் சத்யராஜ் பெயர் ஐந்து பேரில் ஒரு ஆளாக இருக்கும். விஜயகாந்தின் பெயர் பத்து பேர் பெயர்கள் லிஸ்ட்டில் கிடக்கும். அதில் கூட முதல் பெயர் எஸ்.எஸ்.சந்திரன் பெயர் தான். ஷோபாவின் மரணத்தால் ஏற்பட்ட டென்ஷனால் விஜயகாந்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் எடுக்காமலே கிடப்பில் போனது.

விஜயகாந்துக்கு என்றாவது தான் பெரிய ஆளாகி விடுவோம் என நம்பிக்கை இருந்தது. ஆனால் சிவக்குமார் செய்யும் நடிப்பு வித்தையெல்லாம் செய்ய முடியுமா, கிடைக்குமா என ஏங்கிய நேரம். அட்லீஸ்ட் அவருக்கு இணையான நாயகனாகவாவது கிடைக்குமா?.. கிடைத்தது.

அதற்கு ஐந்து வருடம் உழைப்பைக்கொட்ட வேண்டி இருந்தது. 1985ல் விஜயகாந்த்- சந்திரசேகர் கூட்டணி புகுந்து விளையாடிக்கொண்டிருந்த நேரம். ஏழைகளின் ரஜினி விஜயகாந்தும், ஏழைகளின் எஸ்.பி.எம் எஸ்.ஏ.சியும் வெளியிட்ட படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன. எஸ்.ஏ.சி என்றால் உடனே கால்ஷீட் கொடுக்கும் விஜயகாந்துக்கு எஸ்.ஏ.சியின் அடுத்த படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை. சட்டத்தை பிரித்து மேய்ந்து கொண்டிருந்த எஸ்.ஏ.சி தனது 'புதுயுகம்' படத்தில் விஜயகாந்தின் கால்ஷீட் பிரச்சினையால் சிவக்குமாரை நடிக்க வைத்தார். சிவக்குமாருக்கு தனி மார்க்கெட் இருந்தாலும் விஜயகாந்த் வந்தால் தன் படத்துக்கு 'C' சென்டர்களில் வரவேற்பு எகிறும் என்பதை உணர்ந்த எஸ்.ஏ.சி சிவகுமாரின் நண்பனாக விஜயகாந்தை நடிக்க வைத்தார். ஐந்து வருடத்துக்கு முன் சிறு கதாபாத்திரத்தில் தோன்றிய சிவகுமாரின் படத்தை தூக்கி நிறுத்த விஜயகாந்த் தேவைப்படும் அளவுக்கு வளர ஐந்து வருடம் தேவைப்பட்டது.

அடுத்த வருடம் ஆபாவாணன் குழுவினர் ஊமைவிழிகள் படத்துக்கு கதை விவாதம் செய்து பாத்திரத்தேர்வு செய்த போது டி.எஸ்.பி தீனதயாள் பாத்திரத்துக்கு ஆபாவாணன் பரிந்துரை செய்தது சிவகுமாரைத் தான். காரணம் திரையுலகின் பட்ஜெட் சார்ந்த சம்பளம் அவருக்கிருந்தது. ஆனால் திரைப்படக்கல்லூரி மாணவர்கள் என்றாலே வேப்பங்காயாக சிவகுமாருக்கு கசந்தது. விஜயகாந்த் ஆபாவாணன் டீமுக்குள் வர தமிழ் திரையுலகின் ஒட்டு மொத்த முகமே மாறியது.

1985க்கு பிறகு இணைந்து நடித்த சிவகுமார்-விஜய்காந்தின் 'புதுயுகம்' படத்துக்குப்பின் சிவகுமாரின் கண்முன்னே விஜயகாந்த் வாமணாவதாரம் எடுத்தார். பதினான்கு வருடங்களுக்குப்பின் விஜயகாந்த் சிவகுமாரின் மகனுக்கும் உதவும் அளவுக்கு உயர்ந்தார்.

விஜயகாந்தின் பல வருட உதவியாளர் எஸ்.கே.சுப்பையா. தன்னுடன் பலகாலம் உதவியாளராக இருந்த எஸ்.கே.சுப்பையா என்கிற ஏழையை உயர்த்த நினைத்த விஜயகாந்த் அவரை தயாரிப்பாளராக்கி ஒரு படம் நடிக்க விரும்பினார். தனது குரு எஸ்.ஏ.சியிடம் சொல்ல அவரும் அப்போது தான் வளர்ந்து தன் மகன் விஜய்யையும் சேர்த்து நடிக்கும் விதத்தில் 'பெரியண்ணா' கதையை உருவாக்கினார். இளசுகளின் துள்ளலுக்காக விஜய் பாத்திரத்துக்கான பாடல்களை புதிய இசையமைப்பாளர் பரணியின் எழுத்திலும், இசையிலும் விஜய்யே பாடினார். 'நான் தம்மடிக்கிற ஸ்டைலைப்பாத்து' பாடல் செம ஹிட்டானது.

படப்பிடிப்பு துவங்கும் போது விஜய் தொடர் ஹிட்டுகளால் பெரிய தனி நாயகனாக மாறி இருந்தார். அவரால் பெரியண்ணாவில் நடிக்க முடியவில்லை. விஜய்யின் ரோலை செய்ய இளம் நாயகன் யாரைப் போடலாம் என விவாதம் ஓடிக்கொண்டிருக்க தயாரிப்பாளர் விஜய்காந்த் தன் ஆதர்ச நாயகன் சிவகுமாரின் மகன் சூர்யா அறிமுகமாகி படங்களின்றி தடுமாறிக்கொண்டிருந்ததை அறிந்து சூர்யாவின் பெயரை பரிந்துரைத்தார். விஜய்காந்தோடு நடித்து வெற்றி நாயகனாக விஜய் வந்தது போல் சூர்யாவும் வர வேண்டுமென விஜயகாந்த் விரும்பி பெரியண்ணாவில் சூர்யாவை அழைத்தார். அவர் ராசி பொய்க்கவில்லை. சூர்யா இன்று பெரிய நாயகனாகி விட்டார்.

அடுத்த விஜய்காந்த் படமான 'கண்ணுப்பட போகுதைய்யா' படத்தில் சிவகுமாரை விஜய்காந்தின் தந்தை ரோலில் நடிக்க ஒப்புதலளித்தார் விஜயகாந்த். விஜயகாந்த்தை மனதார புகழும் வசனத்தை சிவகுமாரும் அந்தப்படத்தில் பேசி நடிக்கும் வாய்ப்பும் வர சிவகுமாரும் அழகாக பேசினார்.

காலம் தான் எப்படி இருவரின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது பாருங்கள். வாழ்க்கை ஒரு சக்கரம் மாதிரி எனச் சொல்வது மிகச்சரியே... சக்கரம் விஜய்காந்த் வாழ்வில் ஓடி நின்று விட்டது.....

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil