“இந்த குடிகாரனுக்கு இதே வேலையா போச்சு”…

“இந்த குடிகாரனுக்கு இதே வேலையா போச்சு”…
X

கவிஞர் கண்ணதாசன்.

கவிஞர் கண்ணதாசன் பற்றி இசையமைப்பாளர் எம்.எஸ்.வி., அடித்த கமெண்ட் தான் மேற்கண்ட தலைப்பில் படித்த வார்த்தை.

அது 1961 ஆம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் “பழனி” என்ற படம். சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர்., முத்துராமன் நடித்த படம். ஆரம்பத்தில் அண்ணன் தம்பிகள் மிகவும் பாசமாக இருப்பார்கள். கதையில் ட்விஸ்ட் வேண்டுமே, போகப் போக அவர்களுக்குள் சிறு பிரிவினை ஏற்படும். ஒரு கஷ்டமான சூழ்நிலையில் சிவாஜிக்கு பணம் தேவைப்படும். தம்பிகள் உதவ மறுத்து விடுவார்கள். அந்த சூழ்நிலைக்கு மெல்லிசை மன்னர்கள் இசையில் பாடல் எழுதவேண்டும் கண்ணதாசனுக்கு.

அது என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியவில்லை? கண்ணதாசன் பாட்டு எழுதும் போதெல்லாம் அவருடைய சொந்த வாழ்க்கையிலும் அதேபோல் ஒரு சூழ்நிலை அமைந்து விடும், இல்லை சூழ்நிலை அமையும் போதெல்லாம் அதை போல் ஒரு பாட்டு எழுத வேண்டி வந்திருக்கும்.

இந்த காலகட்டத்தில் கண்ணதாசன் சிறிது நொடித்துப் போயிருந்தார். அவருக்கு பண உதவி தேவைப்பட்டது. தன் சகோதரர்களிடம் கேட்டுப் பார்க்கிறார். லௌகீகமாக வாழ்ந்து சொந்தப்படம் எடுத்து பணத்தை இழந்த கண்ணதாசனுக்கு அவர்கள் யாரும் உதவ முன்வரவில்லை.

பணம் வரவில்லை ஆனால் பாடல் வந்தது. வெறுத்துப்போன கண்ணதாசன், தன் வெறுப்பை எல்லாம் இந்த பாடலில் கொட்டியிருப்பார், படித்துப் பாருங்கள். பாடல் வரிகளை.

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே.. தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும்வயிறும் வேறடா சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில் சொந்தம் என்பதும் ஏதடா..வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் வந்து சேர்கிறார் பாரடாகை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை மதித்து வந்தவர் யாரடா.. பணத்தின் மீது தான் பக்தி என்ற பின் பந்த பாசமே ஏனடா...இந்த வரிகளைப் படித்துப் பார்த்தால், பலரின் வாழ்க்கையிலும் இந்த வரிகள் கடந்து தான் வந்து போலிருக்கும்.

இந்தப்படமும் இயக்குனர் பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த படம் தான். கதாநாயகனும் சிவாஜி தான், இசையும் மெல்லிசை மன்னர்கள் தான். படம் “பாலும் பழமும்” . கதைப்படி சிவாஜி கணேசன் தன் மனைவி இறந்து விட்டாள் என நினைத்து சந்தர்ப்ப சூழ்நிலையில் வேறு ஒருத்தியை மணம் முடித்து இருப்பார். ஒரு சூழ்நிலையில் சிவாஜி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும் போது பழைய மனைவியே அவருக்கு மருத்துவம் பார்க்க வருவாள். ஆரம்பத்தில் அவள் தன் மனைவி என்று அறியாத சிவாஜிக்கு, ஒரு கட்டத்தில் அவள் தன் முதல் மனைவி என்று தெரியவரும் பொழுது பாடுவதாக அமைந்த பாடல் இது.

இதே சமயத்தில் கண்ணதாசனின் சொந்த வாழ்க்கையிலும் ஒரு சூழ்நிலை அமைந்தது. கல்யாண வாழ்க்கையில் அல்ல, கலை வாழ்க்கையில். கண்ணதாசன் மிகவும் சென்சிடிவானவர். எந்த அளவு நட்பு கொள்கிறாரோ, அந்த அளவு சடாரென அவர்களுடன் முறைத்தும் கொள்வார். அதனால் தான் அரசியலில் தொடர்ந்து கண்ணதாசனால் பயணிக்க முடியவில்லை. இப்பொழுது பிரச்சினை கண்ணதாசனுக்கும், சிவாஜிக்கும். அவர்களுக்கிடையில் ஒரு சிறு மனத்தாங்கல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வதுமில்லை பேசுவதுமில்லை. அவர் படங்களுக்கு கண்ணதாசன் பாடல் எழுதாமலும் இருந்தார்.

அப்போது இந்த படத்துக்கு கண்ணதாசன் தான் பாடல் எழுதி ஆகவேண்டும் என்று பீம்சிங் விடாப்பிடியாக பேசி சிவாஜியை சம்மதிக்க வைத்தார். இந்த படத்தின் விழாவிற்கு சிவாஜியும் வந்திருந்தார், கண்ணதாசனும் வந்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் நிகழ்ச்சி இது, ஆனால் இருவரும் முகத்தை நேருக்கு நேராக ஏறிட்டு பார்த்துக் கொள்ளவில்லை. விழா பந்தலில் கண்ணதாசனும், சிவாஜியும் சற்றுத் தள்ளித் தள்ளி அமர்ந்திருந்தனர். கண்ணதாசன் சிவாஜிக்கு சற்று பின்னர் தள்ளி அமர்ந்திருந்தார். கண்ணதாசனை சிவாஜி கண்டு கொள்ளாமலே இருந்தார். கண்ணதாசன் எப்படி சிவாஜியிடம் பேசுவது என்று அவரும் அமைதியாக இருந்தார். திடீரென பின் பக்கம் திரும்பிய சிவாஜி, தன் உருட்டு விழியால், ஒரு முரட்டு பார்வையை கண்ணதாசனை நோக்கி வீசுகிறார். இந்தப் பார்வைதான் கண்ணதாசனை இந்த படத்திற்கான பாடல் எழுத தூண்டியது.

“என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய், இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய், நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா, என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா….” காதலின் ஊடலை, கலையின் கூடலுக்கு எப்படி பயன்படுத்தினார் பாருங்கள் கண்ணதாசன்.

இந்த சம்பவம், ஒரு பேட்டியின்போது ஆச்சி மனோரமா கண்ணதாசனைப் பற்றி புகழ்ந்து, நெகிழ்ந்து, பேசியது. ஸ்ரீதரின் “நெஞ்சில் ஓர் ஆலயம்” படத்தின் பாடல் பதிவு அது. ஸ்டுடியோவில் ஸ்ரீதரும், எம்எஸ் விஸ்வநாதனும், காத்துக் கொண்டிருக்கின்றனர். ஸ்ரீதர் அன்றே பாடலை ரெக்கார்டிங் பண்ண வேண்டிய அவசரத்தில் இருக்கிறார். எம்எஸ் விஸ்வநாதனும் இந்த ரெக்கார்டிங் முடிந்த பின் வேறு ஒரு படத்திற்காக ரெக்கார்டிங் போயாக வேண்டிய அவசரத்தில் இருக்கிறார். ஒரு கம்பெனியில் இருந்து அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது. பாடுவதற்காக P. சுசீலாவும் காத்துக்கொண்டிருக்கிறார். இசைக் குழுவினர் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி எல்லோரும் காத்துக் கொண்டிருப்பது கவியரசு கண்ணதாசனுக்காகத்தான். அவர் வரவில்லை இப்பொழுது போல் அப்பொழுது செல்போன் கிடையாது. கண்ணதாசன் எங்கிருக்கிறார், எங்கு வந்து கொண்டிருக்கிறார் என்பதே யாருக்கும் தெரியாது. அவர் வீட்டிலும் இல்லை. அவராக இங்கு வந்தால் தான் உண்டு.

நேரங்கள் கடந்து கொண்டே போக, அனைவருக்கும் டென்ஷன் ஆகிறது. விஸ்வநாதன் மெதுவாக ஸ்ரீதரிடம் செல்கிறார், நாளை இந்த பாடல் பதிவை வைத்துக் கொள்ளலாமா என்று கேட்கிறார். ஸ்ரீதர் மறுத்து விடுகிறார். கண்டிப்பாக இந்த பாடல் இன்று பதிந்தே ஆகவேண்டும். படப்பிடிப்பு காத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லி விடுகிறார். விசுவநாதன் மிகவும் டென்ஷனாகி விடுகிறார். என்ன செய்வது என்று தெரியவில்லை. கோவத்தில் “இந்த குடிகாரனுக்கு இதே வேலையா போச்சு” என்று சத்தமாக கண்ணதாசனை திட்டுகிறார். ஸ்டுடியோவில் இருக்கும் அனைவரும் அமைதியாக இதை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். விசுவநாதன் திட்டிய நேரமா என்னவோ, சிறிது நேரத்தில் கண்ணதாசன் வந்து விடுகிறார். கண்ணதாசனிடம் சுச்சுவேஷன் சொல்லப்படுகிறது.

நெஞ்சில் ஒரு ஆலயத்தின் அந்த புகழ்பெற்ற சுச்சுவேஷன். கணவன் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு மருத்துவமனையில் இருக்கின்றான். மருத்துவம் பார்க்க வந்த டாக்டர் நாயகியின் முன்னாள் காதலன். இந்த விஷயம் கணவருக்கு தெரிந்து விடுகிறது. கணவன் மனைவியிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறான். நான் விரைவில் இறந்து விடுவேன், நான் இறந்து விட்டால் நீ உன் முன்னாள் காதலனை நீ மணந்து கொள் என்று வேண்டுகோள் வைக்கிறான். துடித்துப் போகிறாள் மனைவி, இப்படி ஒரு வார்த்தை எப்படி உன் வாயிலிருந்து வந்தது என்று கதறி அழுது விடுகிறாள். அந்த கதறல் தான் பாடலின் சிச்சுவேஷன்.

கண்ணதாசனும் யோசிக்கிறார், யோசிக்கிறார், யோசித்து யோசித்துக் கொண்டே இருக்கிறார். பல்லவி வரிகள் வந்து விடவே இல்லை. சரி ஒரு ரிலாக்ஸ் பண்ணிவிட்டு வருவோம் என்று, சிறுநீர் கழித்து விட்டு வருகிறேன் என்று சொல்லி அறையை விட்டு வெளியே செல்கிறார். போகும் வழியில் ஒருவர் கண்ணதாசனை வழி மறிக்கிறார். எல்லா இடத்திலும் இருக்கும் ஒரு நபர் தான் அவர். ஆம் எல்லா இடத்திலும் இப்படி ஒரு நபர் இருப்பார். அவர் ஒரு விஷயத்தை இன்னொருவரிடம் போட்டுக் கொடுக்கும் நபர். அந்த நபர் அங்கும் இருக்கின்றார். அந்த நபர் தான் கண்ணதாசனை வழிமறித்து தன் வேலையை செய்கின்றார்.

அண்ணே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி விஸ்வநாதன் அண்ணன் உங்கள “இந்த குடிகாரனுக்கு இதே வேலையா போச்சுனு” உங்களை திட்டினாருண்ணே, என்று சொல்லிவிட்டு வந்த வேலை சிறப்பாக முடிந்த திருப்தியில் அங்கிருந்து செல்கிறார் அந்த நபர். கண்ணதாசன் இதைக் கேட்டு விட்டு வேகமாக ரெக்கார்டிங் அறைக்குள் நுழைகிறார். என்னை பற்றி என்ன சொன்னாய் என்று எம்எஸ்வியிடம் கேட்கிறார். எம்எஸ்விக்கு தர்மசங்கடமாக போய்விடுகின்றது. என்ன சொன்னாய் என்று மீண்டும் கேட்கிறார் கண்ணதாசன். நான் ஒன்றும் சொல்லவில்லை, என்று எம்எஸ்வி சொல்ல, நீ சொல்ல மாட்ட இல்ல, இந்தா பாடலை வரிகளை சொல்றேன், பிடிச்சுக்கோ என்று பாடல் வரிகளை சொல்கிறார். கண்ணதாசன். அந்த பாடல் வரிகளை பாருங்கள்.

சொன்னது நீதானா? சொல் சொல் சொல் என்னுயிரே… சம்மதம் தானா? ஏன் ஏன் ஏன் என்னுயிரே… இன்னொரு கைகளிலே யார் யார் நானா ? எனை மறந்தாயா? ஏன் ஏன்…ஏன் என்னுயிரே மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே… மணமகளை திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே…என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே… இறுதி வரை துணையிருப்பேன் என்றதும் நீதானே… இன்று சொன்னது நீதானாசொல் சொல் சொல் என்னுயிரே… எப்படிப்பட்ட பாடல். இதற்காக கண்ணதாசனும், விஸ்வநாதனை கோபித்துக் கொள்ளவில்லை. விஸ்வநாதனும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தவில்லை. சினிமா என்பது வாழ்வியலின் ஒரு அங்கம் என்று அந்தக்கால கவிஞர்கள் நினைத்து வாழ்க்கையும், கலையையும் இணைத்து வாழ்ந்துள்ளனர் என்பதற்கு இதுவே சான்று. இன்றைய நிலை பற்றி பேசவே வேண்டாமே....

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!