‘தமிழக வெற்றி கழகம்’! விஜய்யின் திட்டம் என்ன?

‘தமிழக வெற்றி கழகம்’! விஜய்யின் திட்டம் என்ன?
X
திரைப்பட நடிகர் விஜய் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் விஜய். நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு காரணம் என்ன? அவரது வாக்கு வங்கி எது? அவரது கட்சி யாருக்கு மாற்று? தமிழக அரசியலில் விஜய்யின் ‘வெற்றி கழகம்’ ஏற்படுத்த இருக்கும் அதிர்வுகள் என்னென்ன?

கடந்த 1993-ம் ஆண்டு, நடிகர் விஜய்க்கு அவரது தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், ரசிகர் மன்றத்தைத் தொடங்கினார். அதை சில ஆண்டுகளில், ‘விஜய் நற்பணி மன்றமாக’ விரிவுபடுத்தினார். பின் அதை, 2009-ம் ஆண்டு, ‘விஜய் மக்கள் இயக்கம்’ ஆக மாற்றினார். அந்த இயக்கம் சார்பாக, பல்வேறு மக்கள் நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், விஜய்யும் களத்தில் இறங்கி செயல்படத் தொடங்கினார்.

‘நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசத்துக்கு அடித்தளம் அமைக்கவே மக்கள் பணிகளில் ஈடுபடுகிறார்’ என அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றிப் பரவலாகவும் பேசப்பட்டது. இதனால், ‘நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவார்’ என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு, அதிமுக ஆட்சிக் காலத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். அதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் விஜய். பின், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10, 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கினார். அப்போது, “பொறுப்பு கூடியதாக உணர்கிறேன்’’ என விஜய் பேசியது, அவரின் அரசியல் பிரவேசத்தை மேலும் உறுதி செய்தது.

இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெய்த கனமழை, புயலால் பாதிப்புக்கு உள்ளான 400 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்கினார். இந்நிலையில், தற்போது, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகார்பூர்வமாக அறிவித்திருக்கிறார் விஜய்.

அன்று மறுப்பு... இன்று அறிவிப்பு! - கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருக்கிக் கொண்டிருந்த வேளையில், விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றும் முயற்சியை, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மேற்கொண்டார். அவர், ‘அகில இந்தியத் தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரிலான கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முயன்றார். இது குறித்த தகவல்கள் பரவியதும், ‘விஜய்க்கும் இந்தக் கட்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை’ என விஜய்யின் செய்தித் தொடர்பாளர் உடனடியாக அறிவித்தார். இதுகுறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘‘அரசியல் கட்சிக்கு நான் தான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து உள்ளேன். இது என்னுடைய முயற்சி மட்டுமே’’ என விளக்கமளித்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்.


“அப்பா ஆரம்பித்த கட்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யாரும் அந்தக் கட்சியில் சேர வேண்டாம். அக்கட்சிக்கும் நமக்கும், நமது இயக்கத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது’’ என தன் ரசிகர்களுக்குக் கட்டளையிட்டார் விஜய். அந்த நிகழ்வுகளுக்குப் பிறகு வெறும் மூன்றே ஆண்டுகளில் தற்போது, நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அன்றைக்கு ஏன் மறுத்தார்; இன்று ஏன் கட்சி ஆரம்பித்தார். இந்த மூன்றாண்டு இடைவெளியில் புதைந்திருக்கும் மர்மம் என்ன?

களமிறங்கிய ரசிகர்கள்! - 2021–ம் ஆண்டு, தனது தந்தையால், தன் பெயரில் தொடங்கப்பட்ட அரசியல் கட்சியில், யாரும் சேர வேண்டாம்’ என்ற கட்டளையை விஜய் பிறப்பித்தாலும், அவரது ரசிகர்கள் அரசியலில் களமிறங்க முயற்சித்தனர். குறிப்பாக, 2022-ம் ஆண்டு நடந்த, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டனர். அதில் பலர் வெற்றியும் பெற்றனர். பல இடங்களில், பிரதான திராவிடக் கட்சி வேட்பாளர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் ‘டஃப்’ கொடுத்ததும் குறிப்பிடதக்கது. இது விஜய்க்குப் புதிய கட்சியைத் தொடங்கும் மனநிலையை வலுப்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர இருக்கும் நிலையில், கட்சி தொடங்கியுள்ள விஜய், அந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தல் தன் ‘டார்கெட்’ என தீர்க்கமாகச் சொல்லியிருக்கிறார். ஒருவேளை இந்தத் தேர்தலை அவரது கட்சி சந்தித்தால் மிகப் பெரிய சறுக்கலைச் சந்தித்திருக்கும். அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன. அதற்குள் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்திய பிறகு களத்தில் இறங்குவதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்பதால் நிதானமாக களமிறங்கத் திட்டமிட்டிருக்கிறார் விஜய்.

விஜய் - விஜய்காந்த் ஒற்றுமை: விஜய் மற்றும் விஜய்காந்த் இருவரும் நெருங்கிய உறவு கொண்டவர்கள். விஜய்யின் வளர்ச்சிக்காக அவரின் படங்களில் சிறப்புத் தோற்றங்களில் நடித்துக் கொடுத்திருக்கிறார் விஜய்காந்த். விஜய்யின் சினிமா பயணத்தில் தவிர்க்க முடியாத நபராக இருந்தவர் விஜயகாந்த். சமீபத்தில் மரணமடைந்த அவருக்கு இறுதி மரியாதையை நேரில் செலுத்தினார்.

தமிழகத்தை 1970-களில் ஆட்சி செய்யத் தொடங்கி திராவிட கட்சிகள் வரலாறு நீண்டுகொண்டே இருக்கிறது. இந்த நிலையில், 30 ஆண்டுகள் கடந்து ஒரு மாற்று அரசியலை, கட்சியைத் தமிழக மக்கள் எதிர்ப்பார்த்தனர். அப்போது, அரசியலுக்கு வந்தார் விஜயகாந்த். கட்சி தொடங்கி சில ஆண்டுகளிலேயே, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தைப் பெற்றார். ஆனால், அவரது எம்எல்ஏக்கள் அவரை கைவிட்டனர். இதனால் மக்கள் எதிர்ப்பார்த்த மாற்று அரசியலை அவரால் கொடுக்க இயலவில்லை.

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு விஜய் அரசியலுக்கு வந்திருப்பது சரியான அரசியல் நகர்வு என சொல்லப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் மாற்று அரசியலை முன்வைத்தவர் விஜயகாந்த். அந்த வெற்றிடத்தை நிரப்பிவிட்டாலே விஜய்க்கு வெற்றி உறுதியாகலாம் என்னும் கருத்தும் அரசியல் வல்லுநர்களால் சொல்லப்படுகிறது.

விஜய்யின் வாக்கு வங்கி யார்? - தமிழகத்தில் அதிமுக வாக்கு வங்கியை பாஜக கைப்பற்ற வியூகங்கள் வகுக்கிறது. எனவே, திமுக மீதான அதிருப்தியில் அதிமுகவிடம் செல்வதற்குப் பதிலாக, இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் ஊழல், மதவாதம், வெறுப்பரசியல் இவற்றை விரும்பாத நடுநிலையாளர்கள் பலருக்கும் விஜய்யின் வருகை ஒரு நம்பிக்கையைத் தரும்.

மேலும், விஜய்யை ஆதரிப்பவர்களில் பெரும்பாலானோர் படிப்பைப் பாதியில் கைவிட்ட இளைஞர்களாக உள்ளனர். இம்மாதியானவர்கள் தான் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற சினிமா கவர்ச்சியில் மயங்கி அவர்கள் பின்னால் சென்றவர்கள். இவர்களைப் பல ஆண்டுகளாக, மிக நுண் நகர்வுகளால் தங்கள் வசம் மடைமாற்றம் செய்ய பாஜக, டிஜிட்டல் தளங்களைத் தீவிரமாகப் பயன்படுத்தி வருகிறது. அதை அடித்து நொறுக்கி, அந்த வாக்குகளைத் தன் சினிமா கவர்ச்சியால் கட்டியிழுக்க விஜய்க்கு வாய்ப்புள்ளது.

இந்த வாக்கு வங்கியையும் அரசியல் சூழலையும், விஜய் எப்படி பயன்படுத்துவார் என்னும் அடிப்படையில்தான், அவர் கட்சிப் பெயரில் இருக்கும் ‘வெற்றி’ அவருக்குக் கிடைக்குமா எனச் சொல்லமுடியும்.

தவிர, தேசிய காங்கிரஸை வீழ்த்தி உதித்த திமுகவுக்கு எதிரான துருவ அரசியலில், அதிமுக உருவானதால் தான், இத்தனை ஆண்டுகளாக, தமிழகத்தில் தேசியக் கட்சிகள் மீண்டும் எழ முடியவில்லை. அதிமுக இல்லாவிடில் தமிழகத்தில் காங்கிரஸ் பலமாக இருந்திருக்கும். அந்த இடத்தைக் காலி செய்து விட்டு, பாஜக இடத்தைப் பிடித்திருக்கவும் முடியும். தற்போது, உட்கட்சி பூசல்களால் பிளவுப்பட்டு அதிமுக பலம் இழந்துள்ளது. இதை சாதகமாக்கி, தமிழகத்தில் பாஜக பலமடைய வாயப்புள்ளது. இதைத் தடுப்பதற்கு ஒரு தடையாக, அவர்களிடம் செல்லும் வாக்குகளைத் திசை மாற்றி விடும் மடையாக, விஜய்யின் கட்சி இருக்கும் என்னும் கருத்துகளையும் புறம்தள்ள முடியாது.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா,விஜயகாந்த், சரத்குமார், கார்த்தி, கமல் என தமிழக அரசியலில் சினிமா பிரபலங்களின் ’லிஸ்ட்’ எடுத்தால் நீண்டுகொண்டே போகும். ஆனால், அதில் அதிகாரமிக்கப் பதவிகளை எட்டிப் பிடித்தவர்கள் வெகு சிலரே. களத்தில் கவனமாகக் காய் நகர்த்தி அந்த சிறப்பு லிஸ்டில் விஜய் இடம்பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா