ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...
நடிகை ஸ்ரீபிரியா
ஸ்ரீபிரியா ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், "நீயா" என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். "நாகின்'' என்ற இந்திப்படத்தில் வந்த ஒரு பாடல்தான் அவரை படத்தயாரிப்பாளர் ஆக்கியது. வைஜயந்திமாலா இந்திப்படங்களில் கொடிகட்டிப் பறந்தபோது "நாகின்'' என்ற படத்தில் நடித்தார். அவருக்கு ஜோடி பிரதீப்குமார். மகுடி வாத்தியத்தை வைத்து அற்புதமான மெட்டுகளில் இசை அமைத்திருந்தார், ஹேமந்தகுமார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு "நாகின்'' என்ற பெயரிலேயே இன்னொரு இந்திப்படம் வெளிவந்தது. இந்தப் படத்திலும் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. "வீடியோ சிடி'' எல்லாம் வராத காலம் அது. சென்னை ஸ்டார் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த இந்தப் படத்தை, தன் தாயாருடன் சென்று பார்த்தார், ஸ்ரீபிரியா.
படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பாடல் அவரை ரொம்பவும் கவர்ந்தது. அந்தப் பாடலுக்காகவே அந்தப் படத்தை 6 தடவை பார்த்து ரசித்தார். அதோடு நில்லாமல், தனது தாயாரிடம் "நான் நடிக்கிற படத்தில் இப்படியொரு பாட்டு இருந்தால், எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்'' என்று கூறினார்.
"அவ்வளவு தானே! கவலையை விடு'' என்று அம்மா சொன்னார். அம்மா அப்படிச் சொன்னதன் பொருள் ஸ்ரீபிரியாவுக்கு ஒரு வாரம் கழித்தே புரிய ஆரம்பித்தது.
"நாகின்'' படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை ஸ்ரீபிரியாவின் தாயார் வாங்கினார். அப்போது பிசியாக இருந்த டைரக்டர் துரையை அந்தப் படத்தை இயக்கும்படி கேட்டுக் கொண்டார். அவரும் சம்மதம் தெரிவித்தார். அப்போது முன்னணியில் இருந்த கமல், விஜயக்குமார், ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரன், ஜெய்கணேஷ், சந்திரமோகன் என 6 ஹீரோக்கள் நடித்தனர்.
இந்தப் படத்தில் கமல் நடித்த கேரக்டரில் முதலில் ரஜினி நடிக்க இருந்தார். ரஜினியின் கால்ஷீட் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் ரஜினிக்கு பதிலாக கமல் நடித்தார். இந்திப் படத்தில் ரீனாராய் நடித்த "பாம்பு'' கேரக்டரில் ஸ்ரீபிரியாவும், அவருக்கு ஜோடிப் பாம்பாக சந்திரமோகனும் நடித்தார்கள். இந்திப் படத்தில் ஸ்ரீபிரியா எந்தப் பாட்டுக்கு மயங்கினாரோ, அதே டியூனில் தமிழிலும் அந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தார்கள். "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா'' என்பதுதான் அந்தப் பாடல். 1979 பொங்கலுக்கு வெளிவந்த "நீயா'' பெரிய வெற்றி பெற்றது.
இந்தப் படம் வெளியானபோது, சிவாஜிகணேசனுடன் "திரிசூலம்'' படத்தில் ஸ்ரீபிரியா நடித்துக் கொண்டிருந்தார். "நீயா!'' படத்தை பார்த்து விட்டு, ஸ்ரீபிரியாவிடம் சிவாஜிகணேசன் செல்லமாகக் கோபித்துக் கொண்டார்.
அதுபற்றி ஸ்ரீபிரியாவே கூறுகிறார்:- "நடிகர் திலகம் எவ்வளவு பெரிய நடிகர். நடிப்பில் இமயம். அவர் "நீயா'' படம் பார்த்து விட்டு மறுநாள் "திரிசூலம்'' படப்பிடிப்பில் இருந்தபோது என்னிடம் பேசினார். "படம் பார்த்தேன் புள்ளே! பாம்பா உன் கூட சேர்ந்து நடனமாடற அந்தப் பையன் (சந்திரமோகன்) என்னமா டான்ஸ் ஆடறான்! அவன் `கெட்அப்'பும், கொண்டை போட்டிருந்த அழகும் அடடா! அடடா! இந்த கேரக்டருக்கு என்னை ஏன் புள்ளே கூப்பிடலை?'' என்று கேட்டார். எனக்கு அதிர்ச்சி ஒருபுறம்; ஆனந்தம் ஒருபுறம்'' என்றார், ஸ்ரீபிரியா.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu