'அபூர்வராகங்கள்' புதுமையை தாங்கிய சினிமா

அபூர்வராகங்கள்   புதுமையை தாங்கிய சினிமா
X

அபூர்வராகங்கள் திரைப்படத்தில் கமல் மற்றும் ரஜினி.

அபூர்வராகங்கள் சினிமா திரைத்துறையில் ஒரு புதுமையான கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்பட்ட படம்.

1975 ம் ஆண்டு தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஒரு ஆண்டாகும். இந்த ஆண்டில் பல புதுமையான படங்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அறிமுகமானது இந்த ஆண்டில்தான். உலக நாயகனான கமலுக்கு இந்த ஆண்டில்தான் பிலிம்பேர் அவார்டு கிடைத்தது. இது தமிழுக்கான முதல் பிலிம்பேர் அவார்டு என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த வருடத்தில் புதுமையான கதையம்சம் உள்ள பல படங்கள் வெளியாகின. அதில் குறிப்பிடத்தக்கது அபூர்வ ராகங்கள். இது தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத கதை. புதுமையான கதை அம்சம். வித்தியாசமான திரைக்கதை. யதார்த்தத்தை மீறிய ஒரு கதையை அதன் தன்மை மாறாமல் அழகாக கே. பாலச்சந்தர் திரையில் வடித்திருந்தார்.

இதில் நடித்த ஸ்ரீவித்யா, மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், ஜெயசுதா என அனைவரும் தங்கள் சிறப்பான பங்களிப்பை தந்தனர். திரைப்படம் வெளியாகி திட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், அந்த படத்தை இப்போது பார்க்கும் போதும் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்த தவறுவதில்லை. மரபு மீறிய ஒரு கதையை படமாக்கும் துணிச்சல் கே.பாலச்சந்தரின் எண்ணத்தில் உதித்ததும், அதன் நிறம் மாறாமல் படமாக்கியதும் தான் இப்படம் வெற்றிக்கு காரணம்.


ஒரு அப்பாவும் மகனும்; அம்மாவும் மகளும் முறையை மாற்றி ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவது தான் இந்த படத்தின் மையக்கரு. இதைக் கேட்டவுடனே முகம் சுளித்து, இது எல்லாம் ஒரு கதையா, என பல விமர்சனங்கள் வந்தன. அப்படி விமர்சனம் செய்தவர்களையும் கைத்தட்ட வைத்ததுதான் இந்த படத்தின் கூடுதல் பலம்.

மேஜர் சுந்தர்ராஜன் மகனாக கமல், ஆங்காங்கே தனது குழந்தைப் பருவத்திலிருந்து வாலிப வயதுக்கு வரும் டீன்ஏஜ் வயதுக்கு தகுந்தபடி நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சேற்றை வாரி இறைத்துவிட்டுப்போகும் கார் காரனைப் கெட்டவார்த்தை பேசி மாத்துவாங்கும் இடமாகட்டும், ஜன கன மன பாடும் போது ஒழுங்காக நிற்காதவனை அடித்து, பாடியது ஜன கன மன, ஜாலிலோ ஜிம்கானா இல்லை என்று இள வயது முரட்டுத்தனமான கோபத்தை வெளிப்படுத்திய இடத்திலும் கமலின் நடிப்பு உலக நாயகனுக்கான அடித்தளம் அப்போதே அமைக்கப்பட்டுவிட்டதை உணர்த்தும்.

கொள்கையில் முரண்பட்டு அப்பா மேஜர் சுந்தர்ராஜனிடம் முரண்டு பிடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவருக்கு ஸ்ரீவித்யா தஞ்சம் தருகிறார். தஞ்சம் தந்தவரின் மனதில் தஞ்சம் அடைய துடிக்கும் இளைஞனான அவருக்குள் அவரின் இளமை பேசி இருக்கும். வயதுக்கு வந்த ஒரு பெண்ணின் அம்மாவாக நடித்திருந்தாலும், மிகவும் இளமையாக தோற்றமளித்தார் ஸ்ரீவித்யா.

கமல், ஸ்ரீவித்யா இருவருக்கும் இடையே துளிர் விடும் காதலை நயமாக அழகாக ராகத்தோடு ஒப்பிட்டு அதிசய ராகம், அபூர்வ ராகம் என்று ஸ்ரீவித்யாவின் மீது கொண்ட காதலை நளினமாக கூறி தன் உள்ளத்தில் இருக்கும் அந்த பெண் நீ தான் என்பதை ' ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி.. மறும் புறம் பார்த்தால் காவிரி மாதவி.. முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி.. முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி..' என்று பாட்டின் மூலம் தன் உள்ளத்தின் ஆசையை போட்டு உடைப்பது, வித்தியாசமான சிந்தனை. கமலின் காதலை புரிந்த ஸ்ரீவித்யா தன் கணவர் பற்றியும், தன் மகள் பற்றியும் கூறிய பின்பும் அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் தன் காதல் உடல் மீதானது அல்ல. உள்ளத்தில் உதயமான காதல் என பேசும் வசனங்கள் இன்றும் நின்று பேசுகிறது.

ஸ்ரீவித்யாவின் ஓடிப்போன மகள் ஜெயசுதா, மேஜர் சந்தர்ராஜனிடம் சரணடைகிறார். ஒரு கட்டத்தில் அவரின் கண்ணியம் மிக்க ஆண்மை மீது உள்ள மரியாதை காதலாக மாறுகிறது. மேஜர், ஜெயசுதாவின் அம்மாவை சந்தித்து பேச வர, ஸ்ரீவித்யாவின் ஓடிப்போன கணவன் ரஜினிகாந்த் திரும்பி வர, கதையில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட். இந்த படத்தின் ஹைலைட் வசனமே 'உன் மகள் உனக்கு மாமியார், என் மகன் எனக்கு மாமனார்' புரட்சி, புதுமை இந்த புரட்சியை நாம்தான் செய்யனும் என, தனக்கே உரித்தான சிம்மக் குரலில் அட்டகாசப்படுத்தி இருப்பார் மேஜர். இறுதியில் ஒரு கேள்வியின் நாயகனே என்ற பாடலின் மூலமே அனைத்தையும் கூறி அப்பா மகன், அம்மா மகள் ஒன்று சேர்கிறார்கள். மரபு மீறிய காதல் ஒன்று சேரவில்லை.

இரு காதலுக்கும் தனிமையும், அவர்களின் கண்ணியத்துடன் கூடிய அன்பான மனம் மற்றும் உறவை தாண்டி ஒருவரின் தூய்மையான அன்பும், அக்கறையும் காதலுக்கு அடித்தளம் என்பதை அழகாக கூறி, இது பெரிய தெய்வீகக்காதல் என்று கூறாமல், இது சூழ்நிலையால் உருவான அன்புதான். இது நடைமுறைக்கு ஒத்துவராது என்பதை சொல்லாமல் சொல்லி இருப்பார்.


ஸ்ரீவித்யா நடிப்பு, பாட்டு, கமலின் தாளம், கோபம், ரஜினி கம்பேக் சீன், ஜெயசுதாவின் குழந்தைதனத்துடன் கூடிய அனுபவ முதிர்ச்சியான நடிப்பு, மேஜர் சுந்தர்ராஜனின் ஆங்கில வசனத்திற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் இப்படத்தை பார்க்கலாம். இதில் ரஜினியின் அறிமுக காட்சி அவர் திரையுலகிற்கு வரவேற்பதை கட்டியம் கூறி வரவேற்பதை போல் அமைந்திருந்தது.

இந்த பாடத்தின் ஒவ்வொரு பாடலும் திணிக்கப்படாமல், படத்தோடு இணைந்திருந்தது. ஒவ்வொரு பாடலும் பலாச்சுளையை தேனில் தோய்த்து எடுத்தது போல் மிகவும் இனிமையாக இருந்தது மட்டுமல்லாமல் இன்றும் கேட்டால் இதன் இசை மயக்க வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசனின் பாடல் வரிகள் அனைத்தும் பசுமரத்தாணி போல என்றும் இளமை கொஞ்சும். வாணி ஜெயராம் -ன் மெல்லியக்குரலில் 'ஏழு சுரங்களுக்குள்' எனும் பாடல் வெற்றி பெற்று அவருக்கு தேசிய விருதினை பெற்றுத்தந்தது. அதிசய ராகம், கை கொட்டி சிரிப்பார்கள், கேள்வியின் நாயகனே, என அனைத்து பாடல்களும் ஒவ்வொரு பொக்கிஷமே .

இந்த படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான வெண் தாமரை விருது, சிறந்த ஒளிப்பதிவுக்காக பி.எஸ்.லோக்நாத்துக்கு வெண்தாமரை விருதும், சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசிய திரைப்பட விருது வாணிஜெயராமுக்கும், சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது கமல்ஹாசனுக்கும், சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது கே.பலசந்தருக்கும், தயாரிப்பாளர;களான டி.ஜெயலட்சுமி, ஜி.விஜயலட்சுமிக்கு பிலிம்பேர் விருதும் கிடைத்தது.

அதிசய ராகம் பாடல் மகாதி ராகம் அடிப்படையில் பாடப்பட்டது. ஏழு சுரங்களுக்குள் பாடல் பந்துவரலி ராகம் அடிப்படையாக கொண்டது. மற்றும் கேள்வியின் நாயகனே பாடல் துர்பாரிகனடா ராகம் அடிப்படையாக பாடப்பட்டது. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் இசைப்பிரியர்களால் கொண்டாடப் பட்டது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself