நடிப்பு 'ராட்சஷி’ சரிதா..! இவருக்கு இணை இவரே..!

நடிப்பு ராட்சஷி’ சரிதா..! இவருக்கு இணை இவரே..!
X

அக்னி சாட்சி சரிதா (கோப்பு படம்)

நம் சினிமா உலகில், அதிக நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியவர்களில், முதன்மையானவர் கே.பாலசந்தராகத்தான் இருப்பார்.

கமலையும் ரஜினியையும் தமிழ் சினிமாவுக்குக் கொடுத்தவர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர்... சரிதா. தெலுங்குப் படத்தில், ‘மரோசரித்ரா’ வில்தான் பாலசந்தர் அறிமுகப்படுத்தினார்.

அறிமுக நாயகி என்று முடிவு செய்தவர், 150 பேருக்கும் மேலாக டெஸ்ட் செய்தார். அந்த டெஸ்ட்டில் பாஸ் செய்தார் சரிதா. தன் தனி மேனரிஸத்தால், முகபாவத்தால், நடிப்பால் தனி முத்திரை பதித்தார். இத்தனைக்கும் படம் வெளிவந்த முதல்வாரத்திலும் படத்துக்கு முன்னதாகவும் ‘என்னப்பா ஹீரோயின் கருப்பா இருக்காங்க’ என்று கிண்டலும் கேலியும் செய்யப்பட்டதெல்லாம் தனிக்கதை. பிறகு, தெலுங்கின் மூலமாகவே தமிழுக்கும் அறியத் தொடங்கினார்.


பின்னர், ‘தப்புத்தாளங்கள்’ படத்தில், மிகப்பெரிய உச்சம் தொட்டார். அந்த சரசு கதாபாத்திரத்தை ஏற்பதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். இன்று வரைக்கும் ’அப்படியான’ கேரக்டரை வேறு எந்த நடிகையும் அனாயசமாகச் செய்யவே இல்லை. ஒப்படைத்தல் தன்னை முழுமையாக கேரக்டர் மீதும் படத்தின் மீதும் இயக்குநர் மீதும் வைக்கவேண்டும். அப்படி வைத்து நடித்தவர்கள், வெற்றி பெறாமல் இருந்ததே இல்லை. சரிதாவின் ஆரம்ப வெற்றி அப்படித்தான் தொடங்கியது.

வசனம் சொல்லவேண்டியதை, சரிதாவின் கண்கள் பாதி சொல்லிவிடும். அவரின் உள்மன உணர்வுகளை அதுவே நமக்கு உணர்த்திவிடும். டி.ஆர்.ராஜகுமாரியின் கண்கள் போதை. ஸ்ரீ வித்யாவுக்கும் ஸ்ரீ தேவிக்கும் பேசும் கண்கள். சரிதாவின் கண்கள் வசனம் பேசும் கண்கள்.



அதேபோல், ஸ்ரீவித்யாவுக்கு இருக்கிற மெச்சூரிட்டி குரலும் ஸ்ரீதேவிக்கு இருக்கிற இன்னசெண்ட் குரலும் சேர்ந்த கலவையாக சரிதாவின் குரல் இருந்தது. அறிவார்ந்து பேசும் போது உணர்ச்சிப் பிழம்பாகும். வெள்ளந்தியாய்ப் பேசும் போது, மழலைத்தனமாகும். இந்தக் குரலின் பாவங்களுக்கேற்ப, அவரின் உடலும் ஒரு மொழி பேசும் பாடிலாங்வேஜிலும் தனித்துவம் காட்டிய மகத்துவம் மிக்க நடிகை என்று எல்லோரும் கொண்டாடினார்கள்.

‘தப்புத்தாளங்கள்’ படத்தில் அப்படியொரு கேரக்டர் பண்ணினால், அதைத் தாண்டி வெளிவருவது சாமான்யமில்லை. ‘நூல்வேலி’யில் அப்படி தாண்டி வந்தார். தமிழ் சினிமாவின் வெகுளித்தனக் கதாபாத்திரத்துக்கு சரிதா போட்டுக் கொடுத்த ரூட் அது. சொல்லப்போனால், சரிதாவின் வழியே, புது ரூட் போட்டார் பாலசந்தர். பாலசந்தரின் அறிமுகத்தைக் கொண்டு, தன் சுகுணா கதாபாத்திரத்தை உலவவிட்டார் பாக்யராஜ். ‘மெளனகீதங்கள்’ சுகுணா கேரக்டரை, படைத்திருந்தார். இத்தனை வருடங்களாகியும் ‘மரோசரித்ரா’, ‘தப்புத்தாளங்கள்’, ‘நூல்வேலி’, ‘மெளன கீதங்கள்’ கேரக்டர்களெல்லாம் நமக்கு பசுமரத்தாணிதான்.

எஸ்.வி.ரங்காராவ், நாகேஷ், எஸ்.வி.சுப்பையா, டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா முதலானோரெல்லாம் ஒரு ஃப்ரேமில் நின்றால், எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுவார்கள் என்பார்கள். சரிதாவும் அப்படிதான். தன்னருகில் யார் நின்றாலும் சரிதாவின் நடிப்புதான், அந்தக் காட்சியில் ஒளிரும்; மிளிரும்; ஜெயிக்கும். அப்படி ஒளிர்ந்து மிளிர்ந்து ஜெயித்தார். நம் மனசுக்குள் வந்தார் சரிதா.

'பொண்ணு ஊருக்கு புதுசு’ படமும் கதையும் பாடல்களும் இன்றைக்கும் மறக்காது. சரிதாவின் கேரக்டர் தனி ரகம். அதிலும் படத்தில் அவருடனேயே பயணிக்கும் லேடீஸ் சைக்கிளை மறக்கவே முடியாது. ‘சோலைக்குயிலே...’ என்று காட்டன் புடவையும் சைக்கிளுமாக வலம் வந்த சரிதாவை, எல்லோருமே ரசித்தார்கள். எண்பதுகளில், பல பெண்கள், சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டதற்கும் சைக்கிள் ஓட்டியதற்கும் சரிதாவும் அந்த சைக்கிளும் கூட காரணம். அந்தப் படத்திலும் தன் இயல்பான நடிப்பால், ரசிகர்களை வென்றெடுத்தார்.


'இவரைத் தவிர வேறு யாரும் இந்தக் கேரக்டரைப் பண்ணவே முடியாது’ என்று சொல்லுவோமே... ‘அக்னி சாட்சி’யும் ‘தண்ணீர் தண்ணீரும்’, ‘அச்சமில்லை அச்சமில்லையும்’ அப்படித்தான். ‘அக்னி சாட்சி’யில் மனநிலை பிறந்த கதாபாத்திரத்தில் ஆகச்சிறந்த உணர்வுகளையெல்லாம் வெளிப்படுத்தியிருப்பார். அந்த கருப்பு வெள்ளை பிரமாண்டப் புகைப்படமும் அந்தப் படத்தில் கள்ளமில்லாத சிரித்தபடி இருக்கும் சரிதாவும் கூட நடித்திருக்கும்.‘

எங்க ஊருக்கு தண்ணீ வராதா?’ என்று ஏங்கிப் பொருமிக் கதறும் கேரக்டராகட்டும் தன் புருஷன் பொய்யான அரசியல்வாதி என்பதால் பொங்கி வெடிக்கும் ‘அச்சமில்லை அச்சமில்லை’ கேரக்டராகட்டும்... சரிதாவை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. ‘நெற்றிக்கண்’ சரிதா, ‘மலையூர் மம்பட்டியான்’ சரிதா’, ‘வேதம் புதிது’ சரிதா என்று ஒவ்வொரு சரிதாக்களும் ஒவ்வொரு விதம். அவரின் ஒவ்வொரு கேரக்டர்களும் சரிதம்.

தமிழ்த் திரையுலகில் ‘ஊமைவிழிகள்’ ஏற்படுத்திய மிகப்பெரிய சலனம். அந்தப் படத்தின் டிஎஸ்பி.தீனதயாளன் விஜயகாந்தின் மனைவியாக சரிதா, வாழ்ந்திருப்பார். அதிலும் மரணபயத்தைக் காட்டிக் கொண்டு போராடுகிற காட்சியில் விஸ்வரூபமெடுத்திருப்பார். சிவாஜியுடன் சரிதா நடித்த முக்கியமான படங்களில் ‘துணை’யையும் ‘கீழ்வானம் சிவக்கும்’ படத்தையும் சொல்லவேண்டும். இரண்டு படங்களிலும் சிவாஜிக்கு ஈடுகொடுத்து நடித்ததைச் சொல்லவேண்டும். நடிப்பில், தான் ஒரு ராட்சஷி என்பதை நிரூபித்துக்கொண்டே இருந்தார்.

ஒருகட்டத்தில், நடிப்பதைக் குறைத்துக் கொண்டபோதிலும் இவரின் குரல் மட்டும் நடித்துக் கொண்டே இருந்தது. தன் குரலால், யார் யாரோ நடித்ததற்கெல்லாம் உயிர் கொடுத்தார். பாலுமகேந்திராவின் ‘ஜூலிகணபதி’யில் அப்படியொரு கேரக்டரையும் அசால்ட்டாக நடித்து அசத்தினார். சரிதா, யாருடைய இடத்தையும் பிடிக்கவில்லை. ஏனென்றால், சரிதா தனித்துவ நடிப்பால் ஜெயித்தவர். அவரின் இடத்தையும் யாரும் நிரப்பவில்லை. ஏனென்றால், சரித்திர தனித்துவ நாயகி. அவரின் இடத்தை எவரும் நிரப்பவும் முடியாது, ஏனென்றால், சரிதா... நடிப்பு ராட்சஷி!

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!