குலைநடுங்க வைத்த சிவாஜியின் கடைசி காலம்
நடிகர் திலகம் என்றதுமே நம் நினைவுக்கு வருபவர் சிவாஜி கணேசன். பராசக்தியில் ஆரம்பித்து படையப்பா வரை தமிழ்சினிமாவில் அழுத்தமாக தன் முத்திரையைப் பதித்து விட்டுச் சென்றார். அவருக்குப் பிறகு அவரைப் போல ஒருவன் இனி பிறக்க முடியாது என்பதே உண்மை. ஆனால் அவரது இறுதிகாலகட்டம் கொஞ்சம் மனதைப் பதற வைக்கிறது. அதைப் பற்றி அவருடன் அந்தக் காலத்தில் பல படங்களில் சூப்பர் காம்போவாக சேர்ந்து நடித்த நாட்டியப் பேரொளி பத்மினி நினைவுகூர்கிறார்.
இதைப் பார்த்தால் ஆண்டவா... இப்படி ஒரு நிலைமை இனி யாருக்கும் வரக்கூடாதுப்பா என்று தான் எண்ணத் தோன்றுகிறது. அவர் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
நான் அவர் இறப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து அவரைப் பார்க்கப் போனேன். அப்போது சிவாஜி ரொம்பவும் மெலிந்த தேகத்துடன் இருந்தார். ஆளே அடையாளம் தெரியாதவாறு மாறிப் போயிருந்தார். தண்ணீர் கூட அவரால் தேவைக்குக் குடிக்க முடியாது. ஒரு நாளைக்கே ஒரு கிளாஸ் தண்ணீர்தான். கொஞ்சம் அதிகமாகக் குடித்தாலும் உடலில் தண்ணீர் கட்டி வந்து உப்பிவிடும். அந்தளவு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிவாஜி மாடியிலேயே தங்கி இருந்தார்.
கீழே வருவதில்லை. அவரை யார் பார்க்க வந்தாலும் மேலேப் போய் பார்த்து விட்டு அப்படியே போய்விடுவாங்க. அவரைப் பொருத்தவரை நல்ல சாப்பாட்டுப் பிரியர். என்னை மாதிரி. அவருக்கு விருப்பமான அத்தனை ஐட்டமும் எனக்கும் பிடிக்கும். அன்று மேசை நிறைய சாப்பாட்டு வகைகள் இருந்தன. காடை, கௌதாரி, சிக்கன், மட்டன், மீன், இறால்... எல்லாமே எனக்கும் பிடித்தவை. தயாராக சமைத்து வச்சிருந்தாங்க.
ஆனால் என்ன ஒரு துரதிர்ஷ்டம். சிவாஜியால் அப்போது அதில் ஒன்றைக்கூட சாப்பிட முடியாது. அப்படி ஒரு நிலைமை. எல்லாமே எனக்காகவே சமைச்சிருந்தாங்க. சிவாஜியை ஒரு நாற்காலியில் அமர வைத்து நாலு பேர் அவரைத் தூக்கி வந்தாங்க. அவர் என் அருகில் அமர்ந்து கொண்டு சாப்பிடும்மா... நல்லா சாப்பிடுன்னு சொன்னார்.
உணவின் சுவை அறிந்த அந்த உன்னத கலைஞருக்கு அதை ருசிக்க முடியவில்லை. அப்படி ஒரு கொடுமை. அவருக்குப் பிடித்தமான அத்தனை ஐட்டங்களையும் வெறுமனே பார்த்துக்கொண்டு தான் இருந்தார். என்னால் சாப்பிட முடியவில்லை.... என்று நிறுத்தும் போது அவரது கண்களில் கண்ணீர்த்துளிகள்...!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu