இரண்டரை மணி நேரத்தில் 21 ஹிட் : இந்த நூற்றாண்டின் அதிசயம் யார்?

இரண்டரை மணி நேரத்தில் 21 ஹிட் :  இந்த நூற்றாண்டின் அதிசயம் யார்?
X
வெறும் இரண்டரை மணி நேரத்தில் 21 ஹிட் பாடல்களுக்கு டியூன் போட்ட இளையராஜா இந்த நுாற்றாண்டில் அதிசயம்.

1990-ம் ஆண்டு தான் முதன்முதலாக இயக்கும் படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என்று ஒருவர் வந்து நிற்கிறார். வந்தவரை பார்த்தது ராஜாவிற்கு அதிர்ச்சி. இவர் ப்ரொடியூசர், டிஸ்ட்ரிப்யூட்டர் ஆச்சே, இவர் எதுக்கு திடீர்னு டைரக்ட் பண்றேன்னு வராரு என்று சந்தேகத்தில் பார்க்கிறார்.

ஆனால் பஞ்சு அய்யாவின் ரெகமண்டேஷன் என்பதால் ராஜாவும் ஒப்புக் கொள்கிறார். தயாரிப்பாளராக, வினியோகஸ்தராக இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்த அந்த நபர் தான் கேயார். தமிழில் அவர் இயக்கிய முதல் படமான ஈரமான ரோஜாவே படத்திற்கு இசையமைக்க ஒரு வழியாக ராஜாவை சம்மதிக்க வைத்து விட்டார்.

கம்போசிங்கிற்கு எங்காவது வெளியூர் செல்லலாம் என்கிற போது ராஜாவே கொச்சினுக்கு போகலாம் என்று சொல்லியிருக்கிறார். அதுவும் ரயிலில் தான் செல்ல வேண்டும் என்று சொல்ல, கேயாரும் அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார். ராஜாவும், அவரது மனைவியுடன் வர, கடைசி நேரத்தில் ஒருவருக்கு மட்டும் டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லை. டி டி ஆர் ராஜாவைப் பார்த்து விட்டு, நீங்க எங்க வேணா உக்காருங்க சார் என்று அனுமதி கொடுத்து விடுகிறார்.

அடுத்த நாள் காலை கொச்சின் வந்து இறங்கியாகிற்று. அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் அறை. காலை 7.30 மணிக்கு கேயாருக்கு அழைப்பு வருகிறது. இவர் போனால் அங்கே குளித்து முடித்து ரெடியாகி, வெள்ளை உடையில் தயாராக இருக்கிறார் ராஜா. "கம்போசிங் ஆரம்பிக்கலாமா" என்று கேட்கவும் கேயாருக்கு அதிர்ச்சி. "இப்பத்தானே வந்துருக்கோம், கொஞ்ச ரெஸ்ட் எடுங்க, டிபன் சாப்பிடுங்க, சுத்திப் பார்க்க போவோம், அப்புறமா வந்து கம்போசிங் வச்சுக்கலாம்" என்று கேயார் சொல்லவும், அதெல்லாம் வேணாம்யா, முதல்ல வந்த வேலையை முடிப்போம் என்று வேலையை ஆரம்பித்திருக்கிறார்.

இயக்குனர் கேயார் ஒவ்வொரு சிச்சுவேஷனாக சொல்ல அரை மணிக்குள் 6 பாடல்கள் ரெடி. இதே பயணத்தில் இன்னும் இரண்டு படத்திற்கான கம்போசிங் செய்ய இயக்குனர்களை வரவழைத்திருக்கிறார் இளையராஜா. கேயார் வேலை முடிந்ததும் அவர்களை அழைக்க, சிவாஜி ப்ரொடக்ஷன் சார்பில் பிரபு, குஷ்பூ நடிக்க தயாரான படம் "மை டியர் மார்த்தாண்டன்". அவரும் சிச்சுவேஷன் சொல்ல அந்தப் படத்திற்கு 9 பாடல்கள் ரெடி.

அதற்கடுத்து ராஜாவின் நீண்ட நாள் நண்பர் பாரதிராஜாவுடன் இணையும் படம் "நாடோடி தென்றல்". அதற்கு 6 பாடல்கள் என மொத்தமாக 21 பாடல்களுக்கான ட்யூன்கள் ரெடி. இவை அனைத்து காலை 10 மணிக்குள் முடிந்து விட்டது. அதற்கு பிறகு தான் சுற்றிப் பார்க்க கிளம்பி இருக்கிறார் ராஜா.

உடன் வந்த கேயார் "ஏங்க சென்னைல இருந்தா 7 மணிக்கு ஸ்டுடியோல வேலையை ஆரம்பக்கிறிங்க. வெளியூர் வந்தாலும் அதே 7 மணிக்கு வேலை செய்யறதுக்கு, பேசாம சென்னைலேயே இருந்திருக்கலாமே" என்று ராஜாவிடம் கேட்டிருக்கிறார். "எனக்கும் நாலு இடத்தைப் பார்க்கனும்னு ஆசை இருக்காதா, அதுக்குத் தான் வரோம். வேலையையும் முடிச்சுட்டா நிம்மதியா இருக்கலாம்ல" என்று சொன்னபடி வேட்டியை தூக்கிவிட்டபடி கடலைப் பார்த்து நடந்து கொண்டிருந்தார் ராஜா.

மை டியர் மார்த்தாண்டன் படம் தான் முதலில் வந்தது. அதற்கடுத்து ஈரமான ரோஜாவே, நாடோடி தென்றல் படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து 1992-ல் தான் வெளிவந்தது. 3 படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.

அன்றிலிருந்து இன்று வரை மனிதர் மாறவே இல்லை. மே மாதம் நான் சிம்பொனி எழுதி விட்டேன் என்றார், இப்போது ஜனவரியில் சிம்பொனி வெளியாகும் என்கிறார். சினிமாவில் 50 வருடங்கள் ஓடியிருந்தாலும், ராஜாவுக்கு 80 வயதாகியிருந்தாலும் அவர் வேலை செய்வது இன்னும் நிற்கவில்லை. இன்னும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு இணையாக நம்மால் ஓடவும் முடியவில்லை, வேலை செய்யவும் முடியவில்லை.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!