கைவிலங்கிடப்பட்ட கதாநாயகன், பிரேம் நஸீர்..!
மலையாள நடிகர் பிரேம் நசீர்
ஒரு நாளில் 16 மணிநேரம், மூன்று ஷிப்டுகளிலாக நஸீர் நடித்துக் கொண்டிருந்த காலம். நஸீர் பணத்திற்காக அப்படி நடிக்கவில்லை. அவர்தான் உச்ச நட்சத்திரம். ஆனால் ஒரு படம் ஓடவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு அடுத்த படம் இலவசம். படம் ஓடும் வரை இலவசம். நண்பர்களுக்கு இலவசமாக நடித்துக் கொடுத்தார். நஸீரால் ஒரு காலத்தில் மலையாள சினிமாவுலகமே வாழ்ந்தது.
ஒரு காலையில் படப்பிடிப்பு. மதியம் 12.30க்கு நஸீர் அடுத்த படப்பிடிப்புக்குச் செல்லவேண்டும். நஸீரை கைதுசெய்து விசாரிக்கும் காட்சி. கைவிலங்கு போட்டு நஸீர் சம்பந்தமான காட்சிகளை எடுக்கிறார்கள். அன்றுமின்றும் கைவிலங்கில் டம்மி என்பதே இல்லை. அசல் விலங்குதான். அதை பூட்டினால் சாவி இருந்தால் மட்டுமே திறக்க முடியும். உடைக்கவே முடியாது. வெல்டிங் ராடால்கூட உருக்க முடியாது.
படப்பிடிப்பு முடிந்து நஸீர் கிளம்பத் தயாரானபோது தெரியவருகிறது, கலை இயக்குநர் அந்த விலங்கின் சாவியுடன் எங்கோ போய்விட்டார். எங்கே என தெரியாது. ஏதோ வாங்கச் சென்றிருந்தார்.
என்ன செய்வதென்று தெரியவில்லை. பதறி குழம்பி ஒருவழியாக இயக்குநரே நஸீரிடம் விஷயத்தைச் சொன்னார். நஸீர் கோபப்படும் வழக்கம் இல்லை. “பரவாயில்லை மாஸே, மனிதன் தவறு செய்பவன் தானே… நான் இப்படியே வீட்டுக்குச் செல்கிறேன். சாவி கிடைத்தால் கொடுத்தனுப்புங்கள்”
நஸீர் கைவிலங்குடன் காரிலேறி வீட்டுக்குச் சென்றார். ஒருமணிநேரம் கழித்து கலை இயக்குநர் வந்தார். குழுவே அவரை அடிக்க பாய்ந்தது. அவர் பதறிவிட்டார். அப்படியே செத்துவிடலாமா என நினைக்குமளவுக்கு. அழுகை, புலம்பல்.
“நீ போய் அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேள்” என்றார் இயக்குநர். கலை இயக்குநர் நஸீரின் வீட்டுக்குச் சென்றார். வீட்டில் சோபாவில் நஸீர் கைவிலங்குடன் அமர்ந்திருந்தார். சென்றதுமே அவர் காலில் விழப்போனார் கலை இயக்குநர்.
“சேச்சே, மனிதன் காலில் மனிதன் விழக்கூடாது… பூட்டைத் திற” என்றார் நஸீர். பூட்டை திறந்துவிட்டு கலை இயக்குநர் கண்ணீருடன் நின்றார். “ஏன் அழுகிறாய்?” ”என்னை திட்டுங்கள், என்னை அடியுங்கள்… நான் தவறு செய்து விட்டேன்” “நீ என் நண்பன்… நான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்று நஸீர் கலை இயக்குநரின் கையைப் பற்றிக் குலுக்கினார். அவர் திகைத்தார்.
“என் மனைவி தேனிலவு நாட்களில் எனக்கு சோறு ஊட்டி விட்டிருக்கிறாள். இத்தனை ஆண்டுகளுக்குப்பின் இப்போது தான் மீண்டும் ஊட்டி விட்டாள்… அது உன்னால்தான். நீ என் நண்பன், உனக்கு நன்றி” என்றார் நஸீர்.
எவ்வளவு உயர்ந்தாலும் ஒரு மனிதனின் அடக்கமான செயலே அவனை உச்சிக்கு கொண்டு செல்லும் என்பதை உணர்த்திய உன்னத மனிதர் அவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu