மஞ்சுவாரியரின் நடனத்தில் 'கண்ணிலு கண்ணிலு: …வைரலாகிய லிரிக்கல் வீடியோ
தென்னிந்திய திரைப்பட உலகில் தயாராகும் திரைப்படங்கள் அண்மைக்காலமாகவே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பன்மொழிகளில் பான் இந்தியா படங்களாக வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றில் சில படங்கள் பிரமாண்டத் திரைப்படங்களாக மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராவதோடு மட்டுமின்றி, நடுத்தர பட்ஜெட்டிலும் படங்கள் தயாரித்து வெளியிடப்படுகின்றன. அப்படங்கள் அடையும் வெற்றி, வசூல் சாதனை போன்றவை காரணமாக ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே தென்னிந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்கின்றன.
ஒரு காலத்தில் வெளிநாடுகளில் திரையிடப்படும் இந்திப் படங்களுக்கு தான், பிரமாண்டம், பெரும்பான்மையான வரவேற்பு என்கிற நிலை இருந்தது. மேலும், இந்திப் பாடல்களின் ஆதிக்கமும் இந்தியா முழுமையிலும் வியாபித்திருந்தது. மொழி புரிகிறதோ இல்லையோ, பெரும்பாலானோரின் உதடுகள் இந்திப் பாடல்களை முணுமுணுத்தன. ஆனால், கால ஓட்டத்தில் அவை அப்படியே தலைகீழாக மாறி தற்போது, உலக அளவில் தென்னிந்தியப் படங்கள் பேசுபொருளாக ஆனதோடு, தரம் மிக்கப் படங்களைத் தருகின்ற பட்டியலை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதன் அண்மைக்கால உதாரணங்கள்தான் 'பாகுபலி', 'கே.ஜி.எஃப்', 'ஆர்.ஆர்.ஆர்.', 'விக்ரம்' என அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் தற்போது பொன்னியின் செல்வன் படமும் சேர்ந்துள்ளது
தற்போது மலையாளத்தில் அறிமுக இயக்குநர் அமீர் பள்ளிக்கல் இயக்கிய படம், 'ஆயிஷா'. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம், அரபு என ஏழு மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்தில், நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை, கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் என்னும் படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளரான ஜக்காரியா படத்தைத் தயாரித்துள்ளார்.
இப்படத்திற்கு விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுதியுள்ளார். ஜெயச்சந்திரன் இசையமைத்துள்ள இப்படத்தில், 'கண்ணிலு மெய்யெழுதின கண்ணிலு…' பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். இந்தப் பாடலை பாடலாசிரியர் பி.கே.ஹரி நாராயணன் மற்றும் சுகைல் கோயா ஆகியோர் எழுதியுள்ளனர்.
இந்திய மற்றும் அரபு நாட்டைச் சேர்ந்த பின்னணிப் பாடகர்கள் இணைந்து பாடி உள்ள இந்தப் பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். இப்பாடல் காட்சியில், நடிகை மஞ்சு வாரியருடன் ராதிகா, சஜ்னா, பூர்ணிமா, துனிசியா நாட்டைச் சேர்ந்த லத்திபா, ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த சலாமா, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜெனிஃபர், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சரஃபினா, ஏமன் நாட்டைச் சேர்ந்த சுமையா, சிரியா நாட்டைச் சேர்ந்த இஸ்லாம் ஆகியோரும் நடனமாடியிருக்கிறார்கள்.
நடிகை மஞ்சு வாரியருடன் பல நாட்டைச் சேர்ந்த பெண்மணிகள் இடம் பெற்று நடனமாடியியிருக்கும் இப்பாடல் பிரபுதேவா இயக்கத்தில் தயாராகியிருக்கிறது.
நடனங்களில் கவனம் செலுத்தி வந்த பிரபுதேவா, நடிப்பிலும் புகுந்து கதாநாயகனாக பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்தார். அதன்பிறகு, இயக்குநராக அவதாரம் எடுத்து பல்வேறு படங்களை இயக்கினார். இந்த பரபரப்புகளுக்கிடையே இப்படி ஒரு சில பங்களிப்பையும் செய்து வருகிறார் பிரபுதேவா. அப்படித்தான் இப்பாடலுக்கு நடன் அமைத்துக் கொடுத்துள்ளார்.
இப்பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu