ஜெய் பீம் 2?: இயக்குனர் ஞானவேல் கொடுத்த சர்ப்ரைஸ்

ஜெய் பீம் 2?:  இயக்குனர் ஞானவேல் கொடுத்த சர்ப்ரைஸ்
X
சூர்யாவின் சிங்கம் படம் போல ஜெய் பீம் 2 இரண்டாம் பாகம் வெளிவருமா என்று கேள்விக்கு இயக்குனர் கொடுத்த சூசக பதில்

நடிகர் சூர்யா தயாரிப்பில் ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து லிஜோ மோள், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும், படத்திற்கு ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்தனர்.

அது மட்டுமல்லாமல் பல விருதுகளை அள்ளிச் சென்ற இந்த திரைப்படம், பல்வேறு திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. தற்போது கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய்பீம் பட குழுவினர் கலந்து கொண்டு படம் சம்பந்தமான தங்கள் அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது பேசிய இயக்குனர் ஞானவேல் கூறியதாவது: இந்த படத்தை தயாரித்து நடித்த சூர்யாவுக்கு நன்றி. மேலும் இந்த திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்று சூர்யாவை அணுகிய போது சந்துரு கதாபாத்திரத்தில் தானே நடிப்பதாக கூறியது மட்டுமல்லாமல் படத்திற்கான ஒவ்வொரு செலவையும் தாராளமாக செய்தார் என கூறினார்.

அப்போது சிங்கம் திரைப்படம் பல பாகங்களாக வெளிவந்தது போன்று ஜெய்பீம் இரண்டாம் பாகம் வெளிவருமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த இயக்குனர் ஞானவேல் கூறுகையில், வழக்கறிஞர் சந்துரு இதே போன்று பல வழக்குகளை திறமையாக நடத்தி இருக்கிறார். அதில் ஒரு வழக்கை மையமாக வைத்து ஜெய்பீம் படத்தின் அடுத்த பாகம் நிச்சயம் வரும். அந்த படத்தில் சூர்யா நடிப்பார் என்று கூறினார். இது சூர்யாவின் ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

தற்போது சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் படங்களை தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே இவர் நடிப்பில் உருவாகும் வாடிவாசல் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றி இயக்குனர் சூசகமாக தெரிவித்திருப்பது ஆர்வத்தை தூண்டி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!