சர்வதேச விருது: முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற இயக்குநர் வசந்த் எஸ்.சாய்
திரைப்பட இயக்குநர் வசந்த் எஸ்.சாய் இயக்கத்தில் 2021-ம் ஆண்டு ஓடிடியில் வெளியான தமிழ்த் திரைப்படமான 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற 29-வது ஆசிய புக்குவோகா திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளது.
அத்துடன் இப்படம், ஜப்பானில் உள்ள ஃபுக்குவோகா நகரில் உள்ள சர்வதேச சிறந்த திரைப்படங்களுக்கான நூலகத்தில் வைப்பதற்காகவும் தேர்வு செய்யப்பட்டுள்ள்ளது. ஏற்கெனவே, இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சுமார் 10-க்கும் மேற்பட்ட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதல் சிறப்பாக சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பது பெருமிதத்துக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.
இயக்குநர் வசந்த் எஸ்.சாய், தான் இயக்கிய இப்படத்துக்கு கிடைத்துள்ள சர்வதேச விருது குறித்த இந்தத் தித்திப்புச் செய்தியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவரிடம் பகிர்ந்து, வாழ்த்தினைப் பெற்றார். 'ஆசியாவின் மாஸ்டர் பீஸ்' என்று குறிப்பிட்டு வழங்கப்பட்ட விருதுக்கான சான்றிதழை முதலமைச்சரிடம் கொடுத்துப் பெற்று பெருமிதப்பட்டார்.
படம் குறித்து...
கால ஓட்டத்தில் பெண்கள் குறித்தான முற்போக்கு சிந்தனைப் பேச்சுகள், பெண் சுதந்திரம் மற்றும் சமத்துவத்துக்காக எத்தனையெத்தனைப் போராட்டங்களைக் கடந்திருந்தாலும் பேசியிருந்தாலும் பெண்களின் நிலை என்னமோ இன்னமும் பெரிதாய் ஒன்றும் மாற்றமடையவில்லை என்பதுதான் யதார்த்தம். இதனை ஓங்கி ஒலிக்கும் குரலாகத்தான் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படம் அமைந்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையும் அடக்குமுறைகளையும் தெள்ளத்தெளிவாக எடுத்துக்கூறி அவற்றிலிருந்து எவ்வாறு பெண்கள் வெளிவர வேண்டும் என்பதை முக்கியப் புள்ளியாகக் கொண்டு படம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகிய முக்கிய தமிழ் எழுத்தாளர்களின் மூன்று சிறுகதைகளில் உள்ள பெண்களை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. லட்சுமி பிரியா சந்திரமௌலி, பார்வதி மேனன், காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், மாரிமுத்து, செந்தில்குமாரி ஆகியோர் நடித்துள்ள இப்படம் 1980, 1995, 2007 ஆகிய காலகட்டங்களில் வாழும் மூன்று பெண்கள் அனுபவிக்கும் துயரங்களைப் பதிவு செய்திருக்கிறது இப்படம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu