இளையராஜா அறிமுகப்படுத்திய முன்னணி பாடகி சுனந்தா..!

இளையராஜா அறிமுகப்படுத்திய  முன்னணி பாடகி சுனந்தா..!
X

பின்னணி பாடகி சுனந்தா 

கேரள மாநிலத்தை சேர்ந்த சுனந்தாவை அறிமுகம் செய்தவர் இளையராஜா.

சுனந்தா அறிமுகமாகியது 1984ம் ஆண்டு வெளி வந்து, பாரதிராஜா இயக்கி, இசைஞானி இளையராஜா இசையமைத்த புதுமைப்பெண் திரைப்படத்தில் தான். இப்படத்தில் இடம் பெற்ற இது ஒரு காதல் மயக்கம் பாடல் தான் இவரது முதல் பாடல். இந்தப்பாடலை இவர் ஜெயச்சந்திரனுடன் இணைந்து அழகாக பாடியிருந்தார்.

அக்காலங்களில் புகழ் பெற்ற எஸ். ஜானகி, சித்ரா, எஸ்பி சைலஜா, உமாரமணன் என பல முன்னணி பெண் பாடகிகளின் குரலுக்கு பிறகு இவரது குரல் தான் அதிகம் வானொலியையும் டேப்ரெக்கார்டரையும் வலம் வந்தது எனலாம்.

குறிப்பாக 1984ல் இருந்து 1990 வரை இவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் ஹிட் பாடல்களாக வலம் வந்தன. இவர் குரலில் சின்ன வீடு படத்தில் இடம்பெற்ற வெள்ளமனம் உள்ள மச்சான் பாடலை மலேசியா வாசுதேவனோடு பாடியிருப்பார். சோகமான சூழ்நிலையில் இருக்கும் பலருக்கு ஆதரவளிப்பது போன்ற குரல் இப்பாடலில் மேலோங்கி இருக்கும்.

கேட்க கேட்க இனிமையான சோகப்பாடல் அது. எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இவர் பாடிய மகிழ்ச்சிப்பாடலான செண்பகமே செண்பகமே பாடல் இன்று வரை அசைக்க முடியாத பாடல் ஆகும். சொல்லத்துடிக்குது மனசு படத்தில் இடம்பெற்ற பூவே செம்பூவே பாடலும் இவர் பாடிய ஹிட் பாடல்.

சேதுபதி ஐ.பி.எஸ் படத்தில் இடம் பெற்ற விடியும் நேரம் அருகில் வந்தது பாடல் எல்லோரும் விரும்பி கேட்கும் பாடல். குழந்தைகளுக்கு வீரத்தை ஊட்டும் பாடல் இது. யாரைப் பாட வைத்தால் நன்றாக இருக்கும் என உணர்ந்து இந்த பாடலை இசைஞானி சுனந்தாவை பாட வைத்திருப்பார்.

இளையராஜாவுடன் இணைந்து இவர் பாடிய தாலாட்டு படத்தின் எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும் உனக்கென நானிருப்பேன் என்ற பாடல் அருமையான சோகப்பாடல். இவர் பாடிய உன்னால் முடியும் தம்பி படத்தில் இடம் பெற்ற என்ன சமையலோ பாடலை பிடிக்காதவர் யாரும் இருக்க முடியாது. எஸ்.பி.பி மற்றும் சித்ராவுடன் இணைந்து இப்பாடலை பாடி இருந்தார்.

இன்றளவும் சிறந்ததொரு காதல் பாடலாக இவர் பாடிய செவ்வந்தி படத்தின் இசைஞானி இசையமைத்த செம்மீனே செம்மீனே பாடல் விளங்குகிறது. மிகவும் உற்சாகமான பாடல்களாக எங்க ஊரு காவல்காரன் படத்தில் இடம்பெற்ற சிறுவாணி தண்ணி குடிச்சு பாடலை சைலஜா, இசைஞானியுடன் சேர்ந்து சுனந்தா இணைந்து பாடியிருப்பார் இதே போல் இவர் பாடிய பூங்குயில் ரெண்டு என்ற வீட்ல விசேஷங்க பாடலும் மிக மிக உற்சாகமான பாடலாக இன்றளவும் தாளம்போட்டு ரசிக்க கூடிய பாடல் ஆகும்.

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் இந்திரையோ இவள் சுந்தரியோ காதலன் படப்பாடலும் எஸ்.ஏ ராஜ்குமார் இசையில் வந்த நட்சத்திர ஜன்னலில் பாடலும் ஹிட் பாடல்கள் ஆகும். இவர் பாடிய சிறைப்பறவை படத்தில் இடம்பெற்ற ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட பாடல் பலமுறை இலங்கை வானொலி மட்டுமல்லாது திருச்சி.மதுரை வானொலி நிலையங்களிலும் அடிக்கடி ஒளிபரப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!