நான் நடித்துக்கொண்டே இருப்பேன்..!- நடிகர் நாசர்

நான் நடித்துக்கொண்டே இருப்பேன்..!- நடிகர் நாசர்
X

நடிகர் நாசர்.

நடிகர் நாசர் நடிப்பில் இருந்து ஓய்வு பெறப்போவதாக பரவும் செய்திகளுக்கு தனது அறிக்கை மூலம் பதிலளித்துள்ளார் நாசர்.

நடிகர் நாசர் தமிழ்த்திரையுலகில் குறிப்பிடத்தக்க மிக முக்கியமான நடிகர். தான் ஏற்கும் கதாபாத்திரம் எதுவானாலும் அதில் உச்சம் தொட்டு அசத்தும் கலைஞர். மட்டுமின்றி, எல்லோரிடமும் ஏற்றத் தாழ்வுகளின்றி இயல்பாகப் பழகக்கூடிய இயல்பினர். இந்தியத் திரைவானில் தமிழுடன் பல்வேறு மொழிகளிலும் நடித்து தன் ஆற்றலை அரங்கேற்றி வரவேற்பையும் வாழ்த்தையும் பாராட்டையும் பெற்று வருபவர்.

இந்தநிலையில், சமூக வலைத்தளங்களில் 'வயது முதிர்வு காரணமாக இனி நாசர் நடிக்கப் போவதில்லை' என்றும் 'இதுவரை முன் தொகை பெற்றுக்கொண்ட படங்களில் மட்டும் நடித்துக் கொடுக்கவிருப்பதாகவும் புதிதாய் படங்கள் எதுவும் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்' என்றும் நாசரைப் பற்றிய செய்திகள் பரபரவென பற்றி எரிந்தன. இந்த செய்திகள் நாசர் மீதான பேரன்புகொண்ட ஏராளமானோரை பதற வைத்தது. அவருடைய ரசிகர்கள் அனைவரையும் சோர்வடைய வைத்தது.

இத்தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் நாசர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் நடிகனாகத்தான் வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட பின், அதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு முறையாகப் பயிற்சி பெற்றுதான் சினிமாவிற்கு வந்தேன். மேலும், சமீபமாக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் என் தொழிலிலிருந்து ஓய்வு என்ற செய்தி என்னால் சொல்லப்பட்டது அல்ல. நான் நடித்துக் கொண்டிருப்பேன்; நடிப்பேன்.

அடையாளம் இல்லாதவர்கள் வலைத்தளங்களில் பதிவிடுவதைவிட மக்களால் நம்பப்படுகின்ற நான் மதிக்கின்ற பொறுமையோடும் நட்போடும் பழகுகின்ற ஊடகங்களே அதை வெளியிடுவதுதான் எனக்குப் பெரிதும் வருத்தமளிக்கிறது.

நான் அனைவரிடமும் எளிதாக தொடர்பு கொள்ளும்விதத்தில்தான் பழகியிருக்கிறேன். சொந்த விஷயம் ஆகட்டும்.. தொழில் சார்ந்த விஷயம் ஆகட்டும், சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் அல்லது விளக்கம் இல்லாது தயவு செய்து தவறான செய்திகளை பதிவு செய்ய வேண்டாம். என் மூச்சு இருக்கும்வரையிலும் நான் நடித்துக் கொண்டேதான் இருப்பேன்…" என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!