'பொன்னியின் செல்வன்' படம் பார்த்த இரவு உறக்கம் இழந்தேன்..! - எம்.பி திருச்சி சிவா

பொன்னியின் செல்வன் படம் பார்த்த இரவு உறக்கம் இழந்தேன்..! - எம்.பி திருச்சி சிவா
X
தி.மு.க எம்.பி.,யான திருச்சி சிவா, 'பொன்னியின்செல்வன்' படத்தைப் பார்த்துவிட்டு, அப்படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் அமரர் கல்கியின் வரலாற்றுப் புதினமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படமாக உருவாகி கடந்த செப்டம்பர் 30-ம் தேதி உலகமெங்கும் வெளியாகி, பேராதரவையும் பெரும் வரவேற்பையும் பெற்று வெற்றிக்கொடி ஏற்றி வசூல் சாதனையுடன் வலம் வந்துகொண்டு இருக்கிறது.

படம் குறித்து, பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டு மழை பொழிந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான திருச்சி சிவா, 'பொன்னியின் செல்வன்' படத்தைப் பார்த்துவிட்டு, தனது மனமார்ந்த பாராட்டு தனது முகநூல் வழியே பதிவிட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளப் பக்கமான முகநூலில், ''கல்லூரியில் படித்த நாட்களில் இரவு பகலாக தொடர்ந்து உட்கார்ந்து ஒரே மூச்சில் படித்தது, பின்பு ஓராண்டு கால மிசா சிறைவாசத்தின்போது படித்த பல நூல்களின் வரிசையில் இ்ண்டாவது வாசிப்பு என ரொம்பவும் பரிச்சயமான மனத்தை விட்டு நீங்காத சரித்திரப் பின்னணியில் , சில கற்பனைகளோடு கல்கி அவர்களால் எழுதப்பட்ட காலமெல்லாம் நிலைத்து நிற்கக் கூடிய புதினம் 'பொன்னியின் செல்வன்'.

முதல்முறை படித்து முடித்த பின் அதில் வரும் பாத்திரங்கள் நெஞ்சில் நிழலாட உறக்கம் தொலைத்த இரவுகளைப் போலவே இயக்குநர் மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்திருக்கும், 'பொன்னியின் செல்வன்' படம் பார்த்த அன்று இரவும் உறக்கம் இழந்தேன்.

இதற்கு மேல் இத்தனை பெரிய வரலாற்றுப் புதினத்தை திரையில் கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்க இயலாது. எம். ஜி. ஆர் நினைத்து, கமல்ஹாசன் விரும்பி பல காரணங்களால் உருவாக முடியாத இந்தக் காவியத்தை திரைப்படமாக்கிய மணிரத்னம் அவர்களைப் பாராட்டுவதை ஒரு தமிழனின் கடமையாய் உணர்கிறேன.

நூறு சதவிகிதம் முழுமை என்பதை எல்லாவற்றிலும் எதிர்பார்க்க முடியாது. எனக்குத் தெரிந்து எழுத்து வடிவத்தில் பெரும் வரவேற்பினை பெற்ற பல கதைகள் திரையில் வெற்றி பெறாமல் போயிருக்கின்றன.

அகிலன், ஜெயகாந்தன், சுஜாதா, ஏன் கல்கியும் இதற்கு விதிவிலக்கில்லை. விமர்சனங்களை சந்திக்காத தலைவர்களும், படைப்புகளும் இருக்கவே முடியாது, ஆனால், பாராட்ட வேண்டியதை பாராட்டாமல் குறைகளை மட்டுமே சுட்டுவதை ஏற்கவும் இயலாது. மனத்தில் அழுத்தமாகப் பதிந்த காரணத்தால் வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, அருள்மொழிவர்மன், ஆதித்தன், குணசேகரன், ஞானசேகரன், பன்னீர்செல்வம் என எத்தனை குழந்தைகளுக்கு பெயர் சூட்டியிருப்போம். (எல்லோரையும் திரையில் கண்ட சிலிர்ப்பு இன்னும் தொடர்கிறது.)

படத்துக்கு வருகிறேன்... இயக்குநரின் திறமையும், நேர்த்தியாக இந்தக் கதையினை திரையில் மெருகு குலையாமல் கொண்டு வர வேண்டும் என்ற அக்கறையும் பாத்திரங்களின் பரிணமிப்பில் மிளிர்ந்தது. நாடக வடிவில் இந்த அற்புத புதினம் அரங்கேறியபோது பெரும் எதிர்பார்ப்போடு சென்று, 'பொன்னியின் செல்வன்' நேசர்கள் ஏமாந்த நிகழ்வுகள் பல உண்டு. அதில் நானும் ஒருவன். திரையில் வந்தியத்தேவனின், குறும்புத்தனம், திறமை, வீரம், காதல், சாமர்த்தியம் அத்தனையையும் நடிகர் கார்த்தி வெளிப்படுத்தியிருப்பது முதல் மகிழ்ச்சி, பின்னாளில் சக்கரவர்த்தியாய் பரிணமிக்க இருக்கும் இலக்கணங்களைக் கொண்ட இந்நாள் இளவரசனாய் அருண்மொழிவர்மன்.

உண்மையை சொல்ல வேண்டுமெனில் ஜெயம் ரவியிடம் இத்தனை எதிர்பார்க்கவில்லை. 'கல்கி' வெளிப்படுத்திய அத்தனை இலக்கணங்களையும் அடக்கமாக வெளிப்படுத்தும் நடிப்பு, ஹெலன் ஆஃப் ட்ராயாய் போல், கிளியோபாட்ராவைப் போல் , இன்றும் மனம் மயக்கும் நந்தினி போல் என்றாவது ஒருநாள் யதார்த்தத்தில் யாரையாவது காண இயலுமா என்று மனம் ஏங்கியதற்கு இதழ் மட்டும் அசைய வார்த்தை சிந்தி, உள்ளத்தில் பெரும் வைராக்கியத்தைக் கொண்டு, அதை வெளிக்காட்டாமல் பழுவேட்டரையரிடம் ஒரு பாவம், வந்தியத்தேவனிடம் ஒரு பாவமென நந்தினியைக் கண்ணெதிரே கொண்டு நிறுத்திய என்றும் உலக அழகியான ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி மணிரத்னத்திற்குத்தான் சொல்ல வேண்டும்.

இளவரசிக்கு உள்ள இலக்கணங்களோடு் சில இடங்களிலும், மனத்தில் மலரும் காதலை விழியால் மட்டும் காட்டி, இதழ் விரிக்காமல் சிரிக்கும் குந்தவையாய் த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையராய் சரத்குமார், சின்ன பழுவேட்டரையராய் பார்த்திபன், வயது முதிர்ந்த , நோயுற்ற , அந்நிலையிலும் அரசியல் அதிகாரத்தை தன்னகத்தே உறுதியாய் வைத்திருந்த சுந்தர சோழராய் பிரகாஷ்ராஜ், மூலத்தைப் படிக்காதவர்களுக்கு அந்தப் பாத்திரங்களைக் கண்ணெதிரே கொண்டு வந்ததற்கு எத்தனை பாராட்டினாலும் தகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஆழ்வார்க்கடியானாக ஜெயராம் உச்சம். மூலக்கதையில் ஓவியர் மணியம் வரைந்ததைப் போலவே அச்சு அசலாக என்ன ஒரு யதார்த்தமான ஓப்பனை, அதற்கேற்ற நடை, அங்க அசைவுகள், பேச்சு, நடிப்பு. வார்த்தைகளே இல்லை இவரின் திறமையைப் பாராட்ட.

வீரமும் கோபமும் மட்டுமே குணாதாசியங்களாகக் கொண்ட ஆதித்த கரிகாலனாய் விக்ரம். ஏமாற்றமடையவில்லை, குறைகாணும் குணத்துடன் படத்தைப் பார்க்காத காரணத்தால். தந்தை பெரியார் சொல்வார், ' இந்தக் காரியத்தை என்னால் மட்டுமே ஆகும் என்று நான் செய்ததாகக் கருதவில்லை. வேறு யாரும் செய்ய முன்வராததால் நான் செய்கிறேன்' என்று. அதைப்போல், பல பேரின் பலநாள் ஏக்கத்தினைப் போக்க முன்வந்து அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றிருக்கும் இயக்குநர் மணிரத்தினத்தை என் உணர்வு கொண்டோரின் சார்பாகப் பாராட்ட விரும்புகிறேன். படம் பாரத்து நெருக்கமான சிலரோடு பகிர்ந்து கொள்வதோடு நிறுத்தாமல் இதை எழுத நேர்ந்ததற்கு முக்கியமான காரணம் பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் சில எதிர்மறை விமர்சனங்களைப் படிக்க நேர்ந்ததால்தான்.

கட்டிய வீட்டிற்கு குற்றம் சொல்ல ஆட்களுக்கா பஞ்சம்? எங்கள் கொள்கைகளுக்கு முரண்படும் எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்களை இந்தப் படத்தில் நான் இரசித்தேன். கலைப் படைப்பினில் தனி மனித விருப்பு வெறுப்புகளைக் கொண்டு பார்வையிடுவது ஏற்புடைய குணமல்ல என்பதை உணர்ந்தவன் நான்.

ஆனால் மணிரத்தினம் இடதுசாரி குணம் கொண்டவர் என்ற அடிப்படையில் இந்தப் படைப்பின் சிறப்புகளைப் பின்னுக்கு தள்ளிவிட்டு விமர்சனங்கள் வைக்கப்படுவதையும் பார்க்க நேர்ந்தது. காந்தியையும், அண்ணாவையுமே விமர்சித்த உலகம் இது. எனவே இதில் விசித்திரம் ஏதுமில்லை. சிலர் கைவிட்ட முயற்சியினை, பலர் முயல முன்வராத இந்தப் பெரும் படைப்பிற்கான முனைப்பிற்கும், உழைப்பிற்கும், வெளிச்சத்திற்கு வராத தொழில்நுட்ப கலைஞர்களின் திறமைக்கும் பாராட்டாமல் இருப்பதை குற்றமாய் உணர்கிறேன். இதற்கும் விமர்சனம் வரக்கூடும். அதையும் உணர்ந்தே இந்தப் பதிவு'' என்று தனது முகநூலில் திருச்சி சிவா பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!