‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருதா? என்ன காரணம்

'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்டதிலிருந்தே லேசாக கிளம்பிய விமர்சனப் புயல் இப்போது முழு வீச்சில் வீசிக்கொண்டிருக்கிறது.

ரஹ்மான் 2009-ல் வென்றபோதும் இதே போன்ற விமர்சனங்கள் வந்தன. இப்போதும் சுற்றுகின்றன. இதுதான் அந்த விமர்சனத்தின் மையக்கரு.“பல இசையமைப்பாளர்கள் இசையில் இதே போன்ற நூற்றுக்கணக்கானப் பாடல்கள் நம் நாட்டில் எல்லா மொழிகளிலும் காலங்காலமாக வந்திருக்கின்றன. இது என்ன சிறப்பென்று இதற்குப் போய் ஆஸ்கர்?”

ரஹ்மான் வென்றபோது,“இவரோட எத்தனையோ அருமையான பாடல்கள் இருக்க இந்தப் பாட்டுக்குப் போயா குடுப்பாங்க?” இளையராஜாவின் ரசிகர்கள் ஒரு படிமேலே போய் “ராஜா சாரோட பல நூற்றுக்கணக்கான அற்புதமானப் பாடல்கள் இருக்கு. அதெல்லாம் இவங்க கண்ணுக்குத் தெரியாதா?”

ஆஸ்கார் விருது என்பது சேவை விருதுகளைப் போல தேடித்தேடி அலைந்து கண்டுபிடித்து கொடுக்கப்படுவது அல்ல. அங்கு சமர்ப்பிக்கப்படுகிற படங்களைப் பார்த்து, பாடல்களைக் கேட்டு நடுவர் குழு அளிக்கிற தீர்ப்புதான் அது. நம் நாட்டு தேசிய திரைப்பட விருதுகள் போலவே. ஸ்லம்டாக் மில்லியனர், ஆர்ஆர்ஆர் போன்றவை சமர்ப்பிக்கப்பட்டன. அதில் தேர்வாகி அடுத்த நிலைக்கு நியமனம் செய்யப்பட்டு இறுதியில் வென்றன.

இது ஒருபுறம். அந்தப் பாடல்களை விட பல நல்ல பாடல்கள் உள்ளன என்கிற திறனாய்வு மதிப்பீட்டு விமர்சனம் செய்வதை விட எப்படி இந்த நம்மூர்ப் பாடல்கள் உலகின் மறு அரைகோளத்தில் உள்ளவர் கவனத்தை ஈர்த்தன/ஈர்க்கின்றன என்கிற கோணத்தில் ஆய்வு செய்தால் அது நமக்கு மட்டுமின்றி பலருக்கும் பயனளிக்கும்.


இசை நுணுக்கம் அறிந்தவர் கொஞ்சம் ஆழமாக, தொழில்நுட்ப ரீதியில் ஆராய்வர். நாம் கொஞ்சம் மேலோட்டமாகப் பார்ப்போம். இந்தப் பாடல்களை நன்கு கேட்டுப் பார்த்தால் நம்மூர் சரக்கும் இருக்கும், மேலை நாட்டு சரக்கும் இருக்கும். அந்த உலகளாவிய பொதுத்தன்மை தான் இவற்றின் அடிப்படை பலம் (universal factor). இது இல்லையென்றால் இங்கு எவ்வளவு ஹிட்டானாலும் அங்கு ஒரு வேலையும் செய்யாது.

பாடலின் ராகம் அவர்கள் மனதை ஆட்கொள்ளக்கூடிய எளிய பாணியில், திரும்பப் பாடக்கூடிய விதத்தில் இருப்பதும், அதன் பின்னணி இசையில் அவர்கள் அந்நியப்பட்டு விடாமல் அவர்கள் பாட்டையே கேட்பது போலவும், ஆனால் அதில் ஒரு புதுமை உள்ளதையும் உணரும்படி இருப்பதால் அவர்களைக் கட்டிப்போட்டு விடுகிறது.

இந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் ஒரு படி மேலே போய் அந்த நடன அமைப்பு அட்டகாசமாக இருந்ததால் ஒரு Music Video தாக்கத்தை ஏற்படுத்தி அந்த வேலையை எளிதாக்கி விட்டது. உண்மையைச் சொல்லப்போனால், இந்த நடனந்தான் இந்தப் பாடலை இந்த நிலைக்கு உயர்த்திக்கொண்டு சென்றது.

Tags

Next Story
ai in future agriculture