இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பிறந்த நாள்

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பிறந்த நாள்
X

கார்த்திக் ராஜா

கார்த்திக் ராஜா தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் ஆவார்.

கார்த்திக் ராஜா தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் ஆவார்.

இந்தியத் திரை இசை வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்ட மேதையான இளையராஜா ஆயிரம் படங்களைக் கடந்தவர். அவருடைய இளைய மகன் யுவன் சங்கர் ராஜாவும் இசையமைப்பாளராகத் திகழ்கிறார். இளையராஜாவின் மூத்த மகனும் தந்தையையும் தம்பியையும் போலவே இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவுக்கு இன்று பிறந்த நாள்.

கார்த்திக் ராஜா பத்தாண்டுகளில் கொடுத்த பாடல்கள் தலைமுறைகளைக் கடந்து ரசிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை. இளம் பருவ வயதிலேயே தந்தையுடன் இசைப்பதிவு ஸ்டுடியோவுக்குச் செல்லத் தொடங்கிவிட்டார் கார்த்திக் ராஜா. மேற்கத்திய செவ்வியல் இசையையும் கர்நாடக இசையையும் முறைப்படி பயின்று இசையமைப்புப் பணிகளில் இளையராஜாவுக்குத் துணையாகவும் பக்க பலமாகவும் தொடர்ந்து பணியாற்றிவருகிறார்.

1992-ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த்-குஷ்பு நடிப்பில் இளையராஜா இசையில் வெளியான 'பாண்டியன்' படத்தில் பிரபலமான காதல் பாடலான 'பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா' பாடலுக்கு இசையமைத்தவர் கார்த்திக் ராஜா. அதுவே அவர் இசையமைத்த முதல் பாடல். அதன் பிறகு இளையராஜா இசையமைப்பாளராகப் பணியாற்றிய 'உழைப்பாளி', 'அமைதிப்படை', 'சக்கரதேவன்' உள்ளிட்ட சில படங்களுக்குப் பின்னணி இசை அமைத்தவர் கார்த்திக் ராஜாதான்.

1996-ல் ராஜ்கிரண் - வனிதா விஜயகுமார் நடிப்பில் வெளியான 'மாணிக்கம்' படத்தின் மூலம் முதன்மை இசையமைப்பாளராக அறிமுகமானார் கார்த்திக் ராஜா. அந்தப் படத்தில் தங்கை பவதாரிணியைப் பாட வைத்து அவர் இசையமைத்த 'சந்தனம் தேச்சாச்சு என் மாமா சங்கதி என்னாச்சு' என்ற பாடல் ரசிகர்களை ஈர்த்தது. அடுத்ததாக அப்போதைய பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான விஜயகாந்தின் 'அலெஸாண்டர்' படத்துக்கு இசையமைத்தார். இந்தியில் ஜாக்கி ஷெராஃப் நடித்த 'கிரஹண்' படத்துக்கு இசையமைத்துச் சிறந்த புதுமுக இசையமைப்பாளருக்கான ஃபிலிம்ஃபேர் சிறப்பு விருதைப் பெற்றார்.

1997-ல் அமிதாப் பச்சன் தயாரிப்பில் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் அஜித் - விக்ரம் - மகேஷ்வரி நடித்த 'உல்லாசம்' படம் கார்த்திக் ராஜாவுக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தது. அந்தப் படத்தின் 'வீசும் காற்றுக்கு' என்ற பாடல் அன்று முதல் இன்றுவரை எப்போதும் ரசிகர்களால் மிகவும் விரும்பிக் கேட்கப்படும் பாடலாக அமைந்தது. அதே படத்தில் இளையராஜா பாடிய 'யாரோ யார் யாரோ', கமல்ஹாசன் பாடிய 'முத்தே முத்தம்மா' ஆகிய பாடல்களும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன.

அடுத்த ஆண்டில் சுந்தர்.சி இயக்கிய 'நாம் இருவர் நமக்கு இருவர்', கமல்ஹாசனின் 'காதலா காதலா' ஆகிய படங்களுக்கு இசையமைத்தார் கார்த்திக் ராஜா. இரண்டிலும் சிறப்பான பாடல்கள் அமைந்திருந்தன. குறிப்பாக 'காதலா காதலா'வில் 'சரவண பவ வடிவழகா' என்ற கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட ஆன்மிகப் பாடல் பாணியில் அமைந்த காதல் பாடலை மிகப் புதுமையான வடிவத்தில் ரசிக்கத்தக்க வகையில் உருவாக்கியிருந்தார்.

பாடல்கள் மட்டுமல்லாமல் தந்தையைப் போலவே பின்னணி இசையிலும் ஜொலித்தவர் கார்த்திக் ராஜா. இளையராஜாவே 'இசை' என்று தன் பெயரைத் தாங்கிவரும் படங்களுக்கு இவரைப் பின்னணி இசையமைக்க அனுமதித்திருக்கிறார் என்பதிலிருந்து பின்னணி இசையில் கார்த்திக் ராஜாவின் அபாரத் திறமையைப் புரிந்துகொள்ளலாம். அதோடு விஜய் நடித்த 'புதிய கீதை' உள்பட யுவன் சங்கர் ராஜா இசையமைத்த சில படங்களுக்கும் 'அரண்மனை', 'தில்லுக்குத் துட்டு' உள்ளிட்ட வேறு சில பிரபலமான வெற்றிப் படங்களுக்கும் பின்னணி இசையமைத்தவர் கார்த்திக் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவைக் காட்டிலும் இளையராஜாவின் பாணியை அதிகமாகப் பின்பற்றியவர் கார்த்திக் ராஜா. கார்த்திக் ராஜாவின் இசையே இளையராஜாவின் இசைக்கு மிக நெருக்கமானது என்று சொல்லலாம். மெலடி, செவ்வியல் இசைப் பாடல்கள், ஆட்டம் போட வைக்கும் வேகப் பாடல்கள், மேற்கத்திய இசை பாணியைச் சார்ந்த பாடல்கள் என பல வகையான பாடல்களில் தன் திறமையை நிரூபித்தவர் கார்த்திக் ராஜா.,

பல வெற்றிப் பாடல்களையும் சிறந்த பின்னணி இசையையும் கொடுத்திருந்தாலும் 50க்கும் குறைவான படங்களுக்கே இசையமைப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார் கார்த்திக் ராஜா. தனித்து இயங்குவதை விட தந்தைக்கு, தந்தையின் பிரம்மாண்ட சாதனைகளுக்குத் துணையாக இருப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார் என்பதே இதற்குக் காரணம். இப்போது இளையராஜா இசையமைக்கும் படங்களுக்கு இசைக் கருவிகளை ஒழுங்குபடுத்துபவராகவும் (Arranger) உலகின் பல பகுதிகளில் நடக்கும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவராகவும் தொடர்ந்து செயல்படுகிறார்.

தொடர்ந்து கார்த்திக் ராஜா நிறையப் படங்களுக்கு இசையமைத்து திரையிசை ரசிகர்களை மென்மேலும் மகிழ்விக்க வேண்டும். இசைத் துறையில் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று இந்தப் பிறந்த நாளில் அவரை மனதார வாழ்த்துவோம்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!