கே.பாக்கியராஜ் கையில் அன்று காசு இருந்திருந்தால் இயக்குனர் ஆகி இருக்கமாட்டார்..! ஏன்?
முந்தானை முடிச்சி படத்தில் பாக்கியராஜ் மற்றும் ஊர்வசி
இன்னிக்கும் பாக்கியராஜ் சாருக்கென ஒரு தனி நடன அசைவுகள் உள்ளன. அது ஒரு எக்ஸர்சைஸ் போல இருக்கும். மிமிக்ரி செய்பவர்கள் அவரது குரலையும் அழகாக பேசிவிடுவார்கள். அப்படி புகழ்பெற்ற இயக்குனர் கே.பாக்கியராஜ் இயக்குனர் ஆனதே ஒரு பெரிய சம்பவம்தான். அது எப்படின்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க.
தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் திரைக்கதை மன்னன் என அழைக்கப்படுபவர் கே.பாக்கியராஜ். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவில் தான் அவரது சொந்த ஊர். இவர் சென்னைக்கு வந்தது இயக்குனராகும் ஆசையில் இல்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி போல ஒரு பெரிய நடிகராக வேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாக இருந்தது. ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
சினிமாவில் ஹீரோவாக முயற்சி செய்பவர்கள் எல்லாம் ரொம்ப அழகாக இருந்தனர். நானோ ஒல்லியான உடம்பு, சோடாப்புட்டி கண்ணாடி என வேறுமாதிரி சுமாராக இருந்தேன். ஒருநாள் கண்ணாடி முன்பு நின்று யோசித்தபோதுதான் இது எனக்கு புரிந்தது.
ஹீரோவாக முடியாது. அப்படி என்றால் எனக்கு என்ன வரும் என யோசித்தேன். கதை கொஞ்சம் எழுத வரும். எனவே, கதாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக ஆவது என முடிவெடுத்தேன். நீங்கள் என்னவாக வேண்டும் என முடிவு செய்யாமல் உங்களால் அதை அடைய முடியாது என ஒரு முறை சொல்லி இருக்கிறார் பாக்கியராஜ்.
80ம் ஆண்டுகளில் பிரபலமான இயக்குனாக விளங்கிய பாரதிராஜாவிடம் உதவியாளராகச் சேர்ந்தார். கதை விவாதம், காட்சி அமைப்பு, வசனம் என எல்லாவற்றிலும் பாரதிராஜாவுக்கு பேருதவியாக பாக்கியராஜ் இருந்தார். ஒருமுறை படப்பிடிப்புக்கு எல்லா ஏற்பாடுகளையும் பாக்கியராஜ் தயார் செய்து வைத்திருந்தார் ஆனால், சம்பளம் கொடுக்காத கோபத்தில் லைட் மேன் ஒருவர் பீஸ் கேரியரை பிடுங்கி கொண்டு போய்விட்டார். அதனால் மின்சாரம் அங்கு இல்லை. அது பாக்கியராஜுக்குத் தெரியாது.
பாக்கியராஜ் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்த பாரதிராஜாவிடம் ‘எல்லாவற்றையும் ரெடி பண்ணி வைத்துவிட்டேன,சார். படப்பிடிப்பைத் தொடக்கிடலாம்' என சொல்ல பாரதிராஜா கோபத்தில் அவரை கண்டபடி திட்டிவிட்டார்.
‘நாம் எல்லாவற்றையும் சரியாக செய்தும் நம்மை இப்படி திட்டிவிட்டாரே’ என நினைத்த பாக்கியராஜ் ‘உங்களிடம் இப்படி திட்டு வாங்கிக்கொண்டு வேலை செய்ய வேண்டும் என எனக்கு அவசியம் இல்லை’ என ஒரு பேப்பரில் எழுதி வைத்துவிட்டு நடந்தே தனது அறைக்குப் போய்விட்டார். மேலும், இனிமேல் சினிமா வேண்டாம். ஊருக்கு போய்விடலாம் எனவும் முடிவெடுத்திருந்தார்.
ஆனால், ஊருக்குப் போக தன்னிடம் காசு இல்லை என்பதே அப்போதுதான் அவருக்கு புரிந்தது. அன்று மாலை படப்பிடிப்பு முடிந்து மற்ற உதவி இயக்குனர்கள் அவரின் அறைக்கு வந்தனர். பாக்கியராஜின் முடிவைக் கேட்ட அவர்கள் ‘ஊருக்கெல்லாம் போகாதே.. நீ ஷூட்டிங்கில் இருந்து வந்துவிட்டதை நினைத்து டைரக்டர் மிகவும் வருத்தப்பட்டார்’ என அவரை சமாதானம் செய்து அடுத்த நாள் படப்பிடிப்புத் தளத்திற்கு அழைத்து வந்தனர்.
பாரதிராஜாவை பார்த்ததும் ‘குட்மார்னிங் சார்’ என சொல்ல, அவரோ ‘எனக்கு ஏன்டா குட்மார்னிங் சொல்ற..?உன்னை திட்ட எனக்கு என்ன உரிமை இருக்கு?’ என சொல்ல பாக்கியராஜ் கண்கலங்கி விட்டார். அதன்பின் அவர் பாரதிராஜாவை விட்டு விலகவே இல்லை. அன்று மட்டும் அவரிடம் காசு இருந்திருந்தால் ஊருக்கு போயிருப்பார். பாரதிராஜாவை மீண்டும் சந்திக்காமல் போயிருக்க கூட வாய்ப்பு இருக்கிறது. சில சமயம் வறுமை கூட சிலருக்கு நல்லதை செய்யும் என்பதை இந்த சம்பவம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
பாரதிராஜா தன்னிடம் உதவி இயக்குனர்களாக இருப்பவர்களை அவ்வளவு எளிதாக தனியாக படம் இயக்க அனுமதிக்கமாட்டார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. அது எந்த அளவு உண்மை என்றும் தெரியாது. ஆனாலும் பாக்கியராஜ் துணிந்து முடிவெடுத்து பாரதிராஜாவைவிட்டு வெளியேறி தனியாக படம் இயக்கத் தொடங்கினார்.
அவரது கதைக்காகவும், அவரது எளிமையான நகைச்சுவை கலந்த பேச்சு, பக்கத்து வீட்டு பையன்போன்ற முகவமைப்பு, அப்பாவியான தோற்றம் போன்றவை அந்த காலகட்டத்தில் அவரை பெரிதும் பேசவைத்தது. சில வில்லன் ரோல் செய்து இருந்தாலும், அடுத்தடுத்த படைப்புகள் அவரை பேச வைத்தன. மௌனகீதங்கள், அந்த 7 நாட்கள், தூறல் நின்னுபோச்சு, முந்தானை முடிச்சி போன்ற படங்கள் அவருக்கு பெரிய பிரேக் அப்பைக்கொடுத்தன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu