கேமரா கவிஞன் பாலுமகேந்திரா..! -இன்று நினைவு தினம்..!

கேமரா கவிஞன் பாலுமகேந்திரா..! -இன்று நினைவு தினம்..!
X

ஒளி ஓவியர் பாலு மகேந்திரா.(கோப்பு படம்)

தமிழ் சினிமாவில் ஒளியை காவியமாக மாற்றிய கலைஞர்களில் மிக முக்கியமாக கருதப்படுபவர் பாலு மகேந்திரா. அவருக்கு இன்று நினைவு தினம்.

அதிசயக் கலைஞன் பாலுமகேந்திராவின் நினைவு நாள் இன்று. பாலுமகேந்திரா - சினிமா என்பது காட்சி மொழியின் கலை என தனது படங்களின் வழியாகக் காட்டிய கலைஞன். மறைந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது மட்டுமல்ல எப்போதும் உதாரணப்படுத்தப்படும் காட்சிகளை எடுத்தது அவரது கேமரா கண்கள்.


இன்று அவரது நினைவு தினம். ‘பாலு சார்’ எனக் கொண்டாடப்படும் ‘காட்சிகளின் கவிஞன்’ பாலுமகேந்திராவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சிறப்பு பகிர்வு. ஈழத்தில் பிறந்து, இந்தியாவுக்கு வந்து, கேரளாவில் வாழ்ந்து, எங்கெல்லாமோ வளர்ந்து, தமிழிலும் மலையாளத்திலும் தன் முத்திரையைப் பதித்த வித்தகர் பாலுமகேந்திரா. ‘எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி’ என்றொரு வாசகம் உண்டு. பாலுமகேந்திராவின் படங்கள் அப்படி புதுமாதிரியாக அமைந்து, ரசிகர்களின் இதயம் தொட்டு உசுப்பின. இன்றைக்கு தமிழில் உலா வந்தபடி 'உலக சினிமா' படைக்கும் நோக்கோடு இன்று இயங்கிவரும் பாலா, வெற்றிமாறன், சீனு ராமசாமி, ராம், மீரா கதிரவன் உள்ளிட்ட பலரை உருவாக்கியது பாலுமகேந்திராவின் பட்டறை.


அவரது சினிமாவைப் பார்த்தே அவரை ஆசானாக ஏற்றுக் கொண்டோர் பட்டியல் இன்னும் நீளம். கொஞ்சமே கொஞ்சமாகப் பேசிய பாலுமகேந்திராவின் கேமரா எண்ணிலடங்கா மொழிகளைப் பேசியது. தமிழ் சினிமாவில் காட்சியமைப்புகளுக்கான பாடமாக பாலுமகேந்திரா என்றும் இருப்பார்.


எப்போதும் கொண்டாடப்படுவார் அந்த கேமரா கவிஞர். முன்னொரு காலத்தில் ‘செம்மீன்’ இயக்குநரின் ‘நெல்லு’ திரைப்படம், பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவில் உருவானது. படம் பார்த்தவர்கள் திகைத்து மலைத்தார்கள். கேரளத்தில் இருந்து கன்னட தேசத்தில், படமொன்றை ஒளிப்பதிவு செய்து இயக்கினார். அந்தக் கன்னடப் படத்தின் பெயர் ‘கோகிலா’. படத்தின் நாயகன் கமல்ஹாசன். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது அந்தப் படம். இயக்குநர் மகேந்திரனின் முதல் படம் ‘முள்ளும் மலரும்’. ரஜினி நடித்த இந்தப் படத்துக்கு நான் எதிர்பார்க்கும் ஒளிப்பதிவாளர் கிடைக்கவில்லை என்று கமலிடம் சொன்னார் மகேந்திரன். பிறகு கமல் மகேந்திரனுக்கு ‘இதோ... இவர்’ என அடையாளம் காட்டி, அறிமுகப்படுத்தினார்.


அவர்தான் பாலுமகேந்திரா. இந்தப் படத்திலும் மகேந்திரன், இளையராஜா, ரஜினி, ஷோபா பேசப்பட்டது போல், பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு நுட்பங்களையும் பேசிப்பேசிக் கொண்டாடினார்கள் ரசிகர்கள். பிரதாப், ஷோபா என கதை மாந்தர்களாக்கி, ‘அழியாத கோலங்கள்’ கொடுத்தார். இன்றைக்கு வரை ரசிகர்களின் மனங்களில், அழியாத கோலமாகத்தான் ஜாலம் காட்டுகிறது அந்தத் திரைப்படம்.


மிகைப்படுத்தப்பட்ட நடிப்பும் மிகைப்படுத்தப்பட்ட ஒளியும் இவருக்குப் பிடிக்கவே பிடிக்காத விஷயங்கள். யதார்த்தமான படைப்புகளைத் தந்து, நம்மை என்னவோ செய்துவிடும் திறன், பாலுமகேந்திராவுக்கு கைவந்த கலை. ‘மூன்றாம் பிறை’யின் கமல், ஸ்ரீதேவி, சில்க்கை மறக்கவே முடியாது. குறிப்பாக, சுப்பிரமணி நாய்க்குட்டியையும் தான்! ரெண்டு பொண்டாட்டி விஷயத்தை, பாலுமகேந்திரா அளவுக்கு பி.ஹெச்டி பண்ணியது எவருமில்லை. ‘ரெட்டைவால் குருவி’யில் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருப்பார். ‘மறுபடியும்’ படத்தில் வலிக்க வலிக்க உணர்த்தியிருப்பார். ஒவ்வொரு கதையைச் சொன்னவிதமும் புதுமையாக இருக்கும். அதில் உள்ள பாத்திரப் படைப்புகளும் மிக மிக இயல்பானதாக இருக்கும். ஒரு கமர்ஷியல் படத்தைக் கூட, அத்தனை யதார்த்தமாக, துல்லிய மன உணர்வுகளுடன், இயல்பாகக் கொடுக்கும் வித்தை பாலு மகேந்திராவுக்கே உரித்தானது.


இதற்கு உதாரணம் ‘நீங்கள் கேட்டவை’. பாலு மகேந்திராவையும் அவரின் படங்களையும் சொல்லும்போது, இளையராஜாவைக் குறிப்பிடாமல் இருக்கவே முடியாது. பாரபட்சம் இல்லாமல் பிரமாதமாக இசையைக் கொடுப்பவர்தான் இளையராஜா. ஆனாலும் பாலுமகேந்திராவுக்கு சிறப்பாக டியூன் போடுகிறார் என்று சொல்லும் அளவுக்கும் நினைவுக்கும் அளவுக்கும் இசையமைத்தார் இளையராஜா. பாலுமகேந்திராவே கூட, ‘இளையராஜாவின் இசைக்கு ரசிகன் நான். அவர் இசை இல்லாமல் நான் படமே எடுக்கமாட்டேன்’ என வெளிப்படையாகவே சொன்னார்.


கலைகளையும் கலைஞர்களையும் ரசிப்பதில் மிகப்பெரிய காதலன் பாலுமகேந்திரா. வீடு’, ‘சந்தியா ராகம்’, ‘உன் கண்ணில் நீர்வழிந்தால்’, ‘மூடுபனி’, ‘தலைமுறைகள்’ என இவரின் படைப்புகள் எல்லாமே மனசுக்கு நெருக்கமானவை. இயக்குநர்கள் பாரதிராஜா, இயக்குநர் பாக்யராஜ், மணிவண்ணன் ஆகியோர் வரிசையில் தன் பட்டறையில் இருந்து, ஏராளமான படைப்பாளிகளை, இயக்குநர்களை உருவாக்கியது பாலுமகேந்திராவாகத்தான் இருக்கும்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil