தென்னிந்திய இசை ரசிகர்களுக்கு புதிய சுவையை அளித்த ஏ.எம்.ராஜா பிறந்தநாள்

தென்னிந்திய இசை ரசிகர்களுக்கு புதிய சுவையை அளித்த ஏ.எம்.ராஜா பிறந்தநாள்
X

ஏ.எம்.ராஜா 

ஏ.எம்.ராஜா தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.இவரது மனைவி பிரபலப் பாடகி ஜிக்கி.

தென்னிந்திய இசை ரசிகர்களுக்கு ராஜா ஒரு புதிய சுவையை அளித்த ஏ.எம்.ராஜா பிறந்த தினமின்று.

ஏமல மன்மதராஜு ராஜா சுருக்கமாக ஏ. எம். ராஜா தென்னிந்தியாவின் பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். 1950 களில் இருந்து 1970 கள் வரை

தமிழ் , தெலுங்கு , கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பல படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது மனைவி பிரபலப் பாடகி ஜிக்கி .

ராஜா ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் மன்மதராஜு, லட்சமம்மா ஆகியோருக்குப் பிறந்தார். மூன்று வயதில் தந்தையை இழந்த ராஜாவின் குடும்பம் ரேணுகாபுரத்துக்குச் சென்று குடியேறியது. அங்கேயே உயர்நிலைப்பள்ளிவரை படித்த ராஜா கல்லூரிப்படிப்புக்காக சென்னைக்கு வந்தார். 1951ல் பச்சையப்பா கல்லுரியில் பிஏ (இளங்கலை) முடித்தார்.

இசையார்வம் கொண்ட ஏ. எம். ராஜா கர்நாடக இசையிலும் மேற்கத்திய இசையிலும் தேர்ந்த பயிற்சி பெற்றிருந்தார். கல்லூரியிலேயே புகழ்பெற்ற பாடகராக விளங்கி பல போட்டிகளில் வென்றார். அவரை அடையாளம் கண்ட எச். எம். வி நிறுவனம் இரண்டு தெலுங்கு மெல்லிசைப் பாடல்களைப் பாடுவதற்காக தேர்வு செய்தது. ராஜாவே எழுதி இசையமைத்த பாடல்கள் அவை.

அவற்றின் கருவியிசைப் பகுதிகளை நடத்தி பதிவுசெய்ய இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் அவருக்கு உதவினார். இப்பாடல்கள் அகில இந்திய வானொலியில் புகழ்பெற்றன. ஒருநாள் பின்னிரவில் அவற்றைக் கேட்க நேர்ந்த ஜெமினி எஸ். எஸ். வாசன் கவரப்பட்டு தன்னுடைய பலமொழிப் படமான சம்சாரம் திரைப்படத்தில் தலைப்புப் பாடலைப் பாடும்படி அழைத்தார். சம்சாரம் பெரும் வெற்றி பெற்று பின்பு இந்தியிலும் எடுக்கப்பட்டது. எல்லா மொழியிலும் அப்பாடலை அவரே பாடினார்.

1951 இல் கே. வி. மகாதேவன் ஏ. எம். ராஜாவை அவரது குமாரி என்ற படத்தில் அழியாத காதல் வாழ்வில்... என்ற பாடலை பாடும்படி அழைத்தார். அன்றுவரை கர்நாடக இசையின் பாணியில் பாடப்பட்ட திரைப்பாடல்களைக் கேட்டுப் பழகிய தென்னிந்திய இசை ரசிகர்களுக்கு ராஜா ஒரு புதிய சுவையை அளித்தார். வட இந்திய திரைப்பாடல்கள் மற்றும் கஸல் பாடல்களிலிருந்து அவரே தனக்கென உருவாக்கிக் கொண்ட பாணி அது. இந்தி பாடகர்களான முகமது ரஃபி மற்றும் தலத் மெக்மூத் ஆகியோர் பாடும் முறைமைகளின் பல சிறப்பம்சங்களை எடுத்துக்கொண்டு அவர்களை போலப் பாடாமல் தனக்கே உரித்தான பாணியை உருவாக்கியவர் ஏ.எம்.ராஜா.

துயரத்தையும் தாபத்தையும் தேக்கிய பாடல்களே ஏ. எம். ராஜாவை தமிழில் நீங்காப் புகழ்பெறச்செய்தன. சிற்பி செதுக்காத பொற்சிலையே, தென்றல் உறங்கிய போதும் போன்றவை சில எடுத்துக்காட்டுகள். மேலை இசையின் சாயல்கொண்ட துள்ளலான ஆடாத மனமும் ஆடுதே, பாட்டுப் பாடவா பார்த்துப் பேச வா , ஓகோ எந்தன் பேபி போன்ற பாடல்களிலும்கூட ஒரு இனிமையான மென்மையைச் சேர்ப்பது அவரது குரல்.

ஐம்பது அறுபதுகளில் புகழின் உச்சியில் இருந்த நாட்களில் ஏ. எம். ராஜா எம்.ஜி.ஆர் ,சிவாஜி கணேசன் , என். டி. ராமராவ், ஏ. நாகேஸ்வர ராவ் , ஜெமினி கணேசன் , சத்யன் பிரேம்நசீர் போன்ற பெரிய நட்சத்திரங்களுக்காக தொடர்ந்து பாடினார். பொதுவாக இளம் காதல் நாயகர்களான ஜெமினிகணேசன், பிரேம்நசீர் போன்றவர்களுக்கு அவரது குரல் பெரிதும் பொருந்தியது. பி. பி. ஸ்ரீனிவாஸ் அறிமுகமாகி, ஜெமினி கணேசனுக்காகப் பாடத்துவங்கும் வரையிலும், ஜெமினியின் பாடற்குரலாகவே விளங்கியவர் ஏ. எம். ராஜா. ஜெமினி கணேசனுக்காக அவர் பாடிய படங்களில், கல்யாணப்பரிசு, மிஸ்ஸியம்மா, மனம் போல மாங்கல்யம், பூலோக ரம்பை, ஆடிப்பெருக்கு ஆகியவை புகழ்பெற்றவை.

ஏ. எம். ராஜா சில படங்களில் நடித்திருக்கிறார். நாகேஸ்வர ராவ் நடித்து இருமொழிகளில் பெருவெற்றி பெற்ற தேவதாஸ் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அவர் வந்தார். பின்னர் இசைக்கலைஞனைப் பற்றிய படமான 'பக்க இந்தி அம்மாயி' படத்தில் முதன்மை வேடத்தில் நடித்தார். அந்தப்படம் இந்தியில் பாடோசான் என்றபேரில் மறுவாக்கம் செய்யப்பட்டபோது அதில் கிஷோர் குமார் அந்த பாத்திரத்தில் பாடி நடித்தார். அந்தப்படம் சிலகாலம் கழித்து மீண்டும் 'பக்க இந்தி அம்மாயி' என்ற பேரிலேயே தெலுங்கில் எடுக்கப்பட்டபோது ஏ. எம். ராஜா நடித்த பாத்திரத்தில் எஸ். பி. பாலசுப்ரமணியம் நடித்தார்.

1955இல் மகேஸ்வரி என்ற படத்தின் அழகு நிலவின் பாவனையிலே என்ற பாடலின் ஒத்திகையின்போது ஏ.எம்.ராஜா பாடகி ஜிக்கியிடம் தன் காதலை தெரிவித்தார். அது திருமணத்தில் முடிந்தது. ஜிக்கி ஏ. எம். ராஜா தம்பதியின் குழந்தைகளில் சந்திரசேகர் ஓரளவு தந்தையின் குரலையும் இசைத்திறனையும் கொண்டவர்.

இசையமைப்பாளராக அவரது முதல் படம் தெலுங்கில் 1958ல் வந்த "சோபா". அது ஒரு பெரும் வெற்றிப்படம். 1960ல் வெளிவந்த பெல்லி காணுகா அவரை தெலுங்கின் நட்சத்திர இசையமைப்பாளராக்கியது.

1959இல் வந்த கல்யாணப்பரிசு இயக்குநர் ஸ்ரீதரின் முதல் படம். தமிழில் இசையமைப்பாளராக ஏ. எம். ராஜாவுக்கும் அதுவே முதல் படம். "வாடிக்கை மறந்தது ஏனோ" போன்ற காதல் பாடல்கள் "காதலிலே தோல்வியுற்றாள்" போன்ற துயரப்பாடல்கள் பெரும் வரவேற்பினைப் பெற்றன. இதைத் தொடர்ந்து, தேன் நிலவு , விடிவெள்ளி போன்ற ஸ்ரீதரின் படங்களுக்கும்

ஆடிப்பெருக்கு போன்ற பல வேறு படங்களுக்கும் இசை அமைத்தார். ஆடிப்பெருக்கு திரைப்படத்தில் பி. சுசீலா பாடிய 'காவேரி ஓரம் கவிசொன்ன காதல்..' என்ற பாடல் புகழ்பெற்ற ஒன்றாகும்.

ஏ.எம்.ராஜா தன் கடைசிநாள்வரை பாடகராக இயங்கிக்கொண்டு இருந்தார். 1989, ஏப்ரல் 8 ஆம் நாள் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டாலுமூடு என்ற ஊரில் உள்ள பகவதி கோயிலில் இசைநிகழ்ச்சி முடிந்து தன் குழுவினருடன் தொடருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார். உதவியாளனாக வந்த ஒரு புதிய பையன் ரயிலை தவறவிட்டு விட்டான் என்று எண்ணி கவலைகொண்டு நாகர்கோவில் - நெல்லை நடுவே வள்ளியூர் என்ற ஊரில் ரயில் நிலையத்தில் இறங்கி தேடினார். ரயில் புறப்படவே ஓடிவந்து ஏறமுயன்றவர் கால் தவறி ரயிலின் அடியில் விழுந்து நசுங்கி உருக்குலைந்து இறந்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!