'அட்டைக்கத்தி வீரன்' - விமர்சனத்துக்கு நெத்தியடி பதில் தந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்

அட்டைக்கத்தி வீரன்  - விமர்சனத்துக்கு நெத்தியடி பதில் தந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
X

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

MGR Actor -விமர்சனங்களுக்கு ஆளாகாத மனிதர்கள் யாருமில்லை. புகழின் உச்சியில் இருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் விமர்சனத்துக்கு தப்பவில்லை. 'நான் அட்டைக்கத்தி வீரனா?' என்ற விமர்சனத்துக்கு, எம்.ஜி.ஆர்., நெத்தியடி பதில் அளித்துள்ளார்.

MGR Actor - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தனது சினிமா வாழ்க்கை பற்றி, பல ஆண்டுகளுக்கு முன் அளித்த ஒரு சுவாரசியமான நேர்காணல்.

உங்கள் படங்களில் அதிகமாக சண்டைக் காட்சிகள் இருப்பது ஏன்?

வீர உணர்ச்சிக்கு, அவை தேவை என்பதால்.

படத்தில் நீங்கள் எதிரிகளுடன் சண்டை போடும்போது பத்து, இருபது பேரை ஏககாலத்தில் தனியாகவே நின்று சமாளிக்கிறீர்கள். அவ்வளவு பேரையும் அடித்து வீழ்த்தி விட்டு, வெற்றிகரமாக வெளியே வந்து விடுகிறீர்கள். உண்மையிலேயே இது சாத்தியமானதா? நம்பக் கூடியதா?

உங்களைப் பார்த்தால் மதப்பற்று உள்ளவராகத் தெரிகிறது. புராணக் கதைகளைப் படித்திருக்கிறீர்கள் அல்லவா? அவற்றில் வருவதை நம்புகிறீர்கள் அல்லவா? மகாபாரதக் கதையில் அர்ஜுனன், அனுபவம் மிகுந்த வில் விற்பன்னர்களிடம் போரிடுகிறான். சிக்கலான விஷயத்தை மிக எளிதாக உடைத்து, எதிரிகளை முறியடித்துவிட்டுத் திரும்புகிறான். நீங்கள் இதை அப்படியே மனப்பூர்வமாக நம்புகிறீர்கள். வாழ்க்கையை ஒட்டிய திரைப்படத்தில் அத்தகைய சம்பவத்தை ஏன் நீங்கள் நம்பக் கூடாது? அர்ஜுனன் போன்றோர் அப்படிப் பல பேரை ஒரே சமயத்தில் வென்று திரும்ப முடியுமானால், என் போன்ற திரைப்படக் கதாநாயகர்களாலும் முடியும்.

உங்கள் படங்களில் 'ஸ்டண்ட்' அதிகமாக இருக்கிறதே... தேவைதானா?

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் எப்படி இருக்கின்றன? அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அமெரிக்காவில் ஸ்டண்டுக்கு என்று தனியாகப் படம் எடுக்கிறார்கள். உணர்ச்சி நடிப்புப் படங்கள், பாட்டுக்கென்று, நகைச்சுவைக்கென்று தனித்தனியாகப் படங்கள் எடுக்கிறார்கள். அவர்களுக்கு உலகம் முழுவதும் மார்க்கெட். இங்கே குருவிக்கூடு மாதிரி உள்ள இடத்தில் எடுக்கப்படும் படங்கள் எல்லாம் கலந்த படங்களாக இருக்க வேண்டும். பாட்டு, நடிப்பு, சண்டை, நகைச்சுவை எல்லாம் ஒரே படத்தில் இருந்தால்தான் படம் ஓடும்.

உங்களை 'அட்டைக்கத்தி வீரர்' என்று முரண்பாடாகக் கூறுகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பத்திரிகையிலே வந்த ஒரு செய்தியை வைத்து, முடிவான பதிலைக் கூற நான் தயாராக இல்லை. ஆனால் சிறிது காலமாக 'அட்டைக்கத்தி வீரர்' என்று யார், யாரோ பேசுவதாகப் பத்திரிகைகளிலே செய்தி வந்து கொண்டிருப்பதை நான் கவனிக்காமல் இல்லை. பொதுவாக இந்தக் கேள்விக்கு நேரடியான பதில் சொல்ல என்னால் முடியாவிட்டாலும், ஒரு சிறு விளக்கம்தர விரும்புகிறேன். அதில் உங்கள் கேள்விக்குரிய விடை ஏதும் இருக்குமாயின் ஏற்க வேண்டும்.

சினிமாவைப் பொறுத்தவரை ஆசிரியர் எழுதிக் கொடுப்பதைத்தான் நடிக, நடிகையர் ஒப்பித்துத் தீர வேண்டும். தான் நினைப்பது போலக் கற்பனையாகப் பேசிவிட முடியாது. யாரையாவது ஆத்திரத்தோடு கோபித்துக் கொள்ளக் கூடிய காட்சியாக இருந்து, அந்த நடிகன் ஆத்திரமாகத் திட்டும்போது, திட்டுகளை ஏற்றுக் கொள்ளக் கூடியவன், வேலைக்காரன் வேடத்திலிருந்தால் அவன் தன்வேடத்திற்கு ஏற்ப அந்தத் திட்டுகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, பதிலுக்குத் திட்டிவிட முடியாது. மேலும் திட்டப்படுவது பாத்திரமே தவிர, அவனல்ல. ஒரு நாடகம் அல்லது சினிமாவில் நல்லவன், கெட்டவன், கணவன், மனைவி, கடன்காரன், கடன்பட்டவன்... இவ்வாறாக பலவகைப்பட்ட பாத்திரங்களை ஏற்றுள்ளவர்கள் ஒரே மாதிரி நடிக்க முடியாது. கதாநாயகனும், அவனுடைய எதிரியும், ஒரு கிழவனும் வாலிபனும் ஒரே மாதிரி நடிக்க முடியாது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது 'நடிப்பது தான் நாடகம்' .

அடிக்க வேண்டிய காட்சிகளில் அடிபட வேண்டியவனை உண்மையாகவே அடித்து நொறுக்கிவிட முடியுமா? கொலை செய்ய வேண்டிய பாத்திரத்தை ஏற்றிருப்பவன் கொலை செய்யப்பட வேண்டியவனை உண்மையாகவே கொன்று விடுவதா? நடிப்பால் தானே உண்மை போல் நிரூபித்துக் காட்ட வேண்டும். நஞ்சை அருந்தி இறப்பதாக ஒரு பாத்திரம் வரும்போது உண்மையான நஞ்சை உபயோகித்தால் அந்த நடிகனை அப்புறம் பார்க்கவே முடியாது. சண்டைக் காட்சிகளிலும் பயிற்சியோடு நிஜமான உயிர்க் கொலை நேராமல் சண்டையிடுவார்களே தவிர, கொலைக்கு இடம் வைக்க மாட்டார்கள். ஆதலால் நடிப்பின் மூலம் உண்மையைப் பிரதிபலிக்கச் செய்யும் கலைதான் நாடகம், சினிமா என்பவை. குறை கூறுபவர்கள் வேண்டுமென்றே சொல்கின்றனர். அறியாத்தனத்தால் அல்ல. தாங்கள் சொல்வது சரியல்ல என்பது அவர்களுக்கே தெரியும். ஆகவேதான் இதுபோன்ற பல்வேறு விஷயங்களுக்கு நான் பதில் சொல்லாமல் விட்டு விடுவது வழக்கம்.

சினிமாவில் எனக்கு இதுவரை அட்டைக் கத்தியை வைத்துச் சண்டை செய்து பழக்கமில்லை. அநேகமாக எனக்குத் தெரிந்த பலரும் அட்டைக் கத்தியை உபயோகப்படுத்தியதில்லை. மரக்கத்தி உண்டு. ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்கிறேன். சினிமாவில் சண்டைக் காட்சிகளுக்கென அட்டைக் கத்தி இதுவரை உற்பத்தி செய்யப்பட்டதாகவோ, இறக்குமதி செய்யப்பட்டதாகவோ நான் கேள்விப்பட்டதில்லை. இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு எம்.ஜி.ஆர். சுவைபட பதில்கள் கூறியுள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Weight Loss Tips In Tamil