Bakasuran Tamil movie review என்ன சொல்ல வருகிறது பகாசூரன்?
![Bakasuran Tamil movie review என்ன சொல்ல வருகிறது பகாசூரன்? Bakasuran Tamil movie review என்ன சொல்ல வருகிறது பகாசூரன்?](https://www.nativenews.in/h-upload/2023/02/17/1662300-bakasuran1.webp)
திரெளபதி, ருத்ர தாண்டவம், பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபலமான இயக்குனர், மோகன் ஜி. அவரது பட வரிசையில், தற்போது புதிதாக இணைந்துள்ள திரைப்படம்தான் பகாசூரன்.
இப்படத்தில், பிரபல இயக்குனர் செல்வராகவன், ‘சதுரங்க வேட்டை’ புகழ் நடராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செல்வராகவன் மட்டுமன்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பகாசூரன் படத்தின் மேல் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
படத்தின் கதை: . மேஜர் நட்டியின் சொந்த அண்ணன் மகள் ரம்யா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். தொடர்ந்து அதற்கான காரணத்தை தேடுகிறார் மேஜர் நட்டி. அப்போது ரம்யாவின் மொபைல் போன் அவர்கைக்கு கிடைக்கின்றது. அதில், ரம்யா பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததையும், திருமணம் செய்து கொண்டாலும் இந்த தொழிலில் இருந்து நீ தப்ப முடியாது என யாரோ இவரை மிரட்டுவதையும் தெரிந்து கொள்கிறார் நட்ராஜன். அந்த காரணத்தைக் கண்டு மிரண்டு போன நட்டி, அந்த மிரட்டும் நபர் யார் என்று தேடுகையில், பல பெண்கள் பண கஷ்டத்தினால் பாலியல் தொழிலில் பலவந்தமாக தள்ளப்படுவதையும் அறிந்து கொள்கிறார். இதே போன்று பாதிக்கப்பட்ட பெண்களை மீட்க பாதிக்கப்பட்ட தந்தையை தேடி அழைக்கிறார்.
அதே சமயம் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட தனது மகளின் இறப்பிற்கு காரணமானவர்களை பழிவாங்குகிறார் பீமராசுவாக வரும் இயக்குனர் செல்வராகவன். இருவரும் சந்திக்கும் புள்ளியே பகாசுரன் திரைப்படம். இருவரது கதையும் வெவ்வேறு வகையில் பயணித்து ஒரு கட்டத்தில் ஒன்றாக இணைகின்றன.
முதல் காட்சியிலேயே ஒருவரை சரமாரியாக போட்டுத்தள்ளும் செல்வராகவன், அடுத்த சீனில் நெற்றி நிறைய பட்டையும் கழுத்தில் ருத்திராட்ச கொட்டயுமாக வருகிறார். ஆரம்பத்தில் அவரது நடிப்பு மனதில் ஒட்டவில்லை என்றாலும், படம் முடிந்து எழுந்து செல்கையில் மனம் முழுவதும் அவர்தான் இருக்கிறார். தனது மகளின் சாவிற்கு காரணமாக இருந்தவர்களை போட்டுத்தள்ளும் நேரத்தில் கொடூரமான பீமராசுவிற்கும், ஃப்ளாஷ்பேக்கில் அன்பான அப்பாவாக சாந்தமான பீமராசுவையும் நன்கு வித்தியாசப்படுத்தி பார்க்க முடிகிறது. மகளை இழந்து கலங்கும் காட்சியிலும், தன் மகளைப் போல யாரும் இறக்கக்கூடாது என அவர் பலரை துவம்சம் செய்யும் காட்சியிலும் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து விடுகிறார், செல்வா.
இதற்கிடையில் செல்வராகவனின் கலங்க வைக்கும் ஃப்ளேஷ் பேக், எல்லோரும் அறிந்த அதே சமூக கருத்து என படம் பார்ப்பவர்களை கடுப்பேற்றும் அளவிற்கு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு இசை நன்றாக கைகொடுத்திருக்கிறது. அது போல பின்னணி இசையும் பிரமாதம். ஆனால் படத்தின் முதலில் வரும் பாடலை தவிர மற்றவை ரசிக்கும் படியாக இல்லை.
பகாசூரன் பட இயக்குனர் மோகன் ஜியின் மிகப்பெரிய ப்ளஸ் பாய்ண்ட் அவரது போர் அடிக்காத திரைக்கதைதான். அதையே இந்த படத்திலும் ஃபாலோ செய்துள்ளார். சில இடங்களில் அவரது கருத்துகளை ஏற்க முடியவில்லை என்றாலும், அவர் கதையை நேர்த்தியாக கொண்டு போன விதமும் பலரை வியக்கத்தான் வைக்கிறது.
தன்னுடைய முந்தைய படங்களை விட சிறப்பான படத்தையே இயக்குனர் மோகன் ஜி கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். திரைக்கதை சரியாக இருந்தாலும் வசனம் ஆங்காங்ககே சரியாக இல்லை. முதல் பாதி படம் முடிவதற்கு முன்பாகவே பலர் ‘இன்னுமா இன்டர்வல் விடல’ என்று கேட்கும் அளவிற்கு உள்ளது.
இந்த டிஜிட்டல் யுகத்தில் செல்போனைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் மாறிவிட்டன. ஆனால், பகாசூரன் படத்திலோ நம்ம ஊரில் எல்லாப் பிரச்சனையும் இந்த போனாலதான் வருது என்று கூறும் கருத்தை சீரியசாக எடுத்துக்கொண்டுள்ளனர்.
எல்லா காட்சியிலும், பெண்கள் நம்பி ஒருவனிடம் தங்களின் உடலைக் காட்டுவதையும், முத்தம் கொடுப்பதையும் குறை சொல்கிறார்களே அன்றி, அவர்கள் குறித்து வீடியோ வெளியிடும் நபர்களை ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லை. செல்போனால் வரும் பிரச்சனைகளை கூறிவிட்டு அதை கையாள வேண்டிய வழிமுறைகளைப் பற்றி பேசியிருந்தால் இயக்குனரைப் பாராட்டலாம். ஆனால், வெகுஜன மக்களின், “எல்லாமே மொபைல் போனாலதான்” என்ற கருதத்தையே இந்த படத்திலும் திணிக்க முயற்சித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெண் உரிமைகளை கோருபவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கிறார்.
பெண்களை பாலியல் தொழிலில் எப்படி சிக்கவைக்கின்றனர் என்று கூறிய விதத்தை மட்டும் வேண்டுமானால் பாராட்டலாம்.
அதே போன்று பெண்களை பாதுகாக்க வேண்டும் என சொல்லும் இயக்குனர் மோகன் ஜி படத்தில் ஆபாசமான நடனம் வைத்ததை என்னவென்று சொல்ல? மொத்தத்தில் செல்வராகவனுக்காக வேண்டுமானால் பகாசூரனைப் பார்க்கலாம், மற்றபடி சொல்லிக் கொள்வதற்கு ஒன்றுமில்லை என்றே கூற வேண்டும்.
பல இடங்களில் லாஜிக் குறைபாடுகள். சுவாரசியம் இல்லாத திரைக்கதை, பொருத்தமமில்லாத வசனங்கள். படத்தில் ஏகப்பட்ட வசனங்கள் பிற்போக்குத்தனமாக இருக்கிறது எடுத்துக்காட்டாக சென்னையில் வாழ்பவர்கள் வெளிநாட்டில் வாழ்பவர்களாக மாறிவிட்டனர், ஊருக்குள்ளேயே படிக்க வைக்க வேண்டியதுதானே, நம்ம பிள்ளைங்க ரூமுக்குள்ள என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும் போன்ற வசனங்களை வைத்து இந்த படம் என்ன கருத்தை சொல்ல வருகிறது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu