கண்ணதாசன் பேச்சைக்கேட்காத சாவித்ரி..!
கண்ணதாசன், சாவித்ரி
கவிஞர் கண்ணதாசன் தமிழ் சினிமாவில் செய்யாத அற்புதங்களே கிடையாது. தனது பாடல்களால் இரண்டு தலைமுறை நடிகர்களுக்கு பெரும் பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தவர். வாழ்வின் பல நிலைகளில் அடிபட்டு மேடேறி தனது அனுபவங்களைப் பாடல் வடிவில் கொடுத்த தத்துவஞானி. காதல் பாடல்களாகட்டும், தத்துவப் பாடல்களாகட்டும் கண்ணதாசனின் பாடலை ஈடுகட்ட இன்னும் எந்தக் கவிஞரும் பிறந்து வரவில்லை என்றுதான் கூற வேண்டும்.
கவிஞர் கண்ணதாசன் கதை வசனம், பாடல்கள் எழுத 1963-ல் வெளிவந்த திரைப்படம் தான் ரத்த திலகம். நடிகர் திலகம் சிவாஜிகணேசன், நடிகையர் திலகம் சாவித்ரி ஆகியோரது நடிப்பில் உருவான இந்தப் படத்தினை தாதாமிராசி இயக்கியிருந்தார். கே.வி.மகாதேவன் இசையைமத்திருந்தார்.
இந்தப்படத்தில் தான் கவிஞர் கண்ணதாசனின் புகழ்பெற்ற பாடலான அவர் வாழ்க்கையை உணர்த்தும் ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு‘ என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. மேலும் இன்றும் கல்லூரி நாட்களை நினைவுப்படுத்தும் ‘பசுமை நிறைந்த நினைவுகளே‘ என்ற பாடலும் இதில் இடம்பெற்றது தான்.
இந்தப் படத்தின் கதையானது இந்திய- சீனப் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்தப் படம் வெளியான காலகட்டத்தில் இந்திய சீனப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டமாதலால் மக்களிடம் தேசப் பற்றை வளர்க்கும் நோக்கத்தில் இந்தப் படம் வெளிவந்தது.
இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கண்ணதாசனுக்கும்- சாவித்ரிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. அதன்பின் சிவாஜிக்கும்- சாவித்ரிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒருவழியாக அனைத்தும் சரியாகி படம் முடிவடைந்தது. இந்தப் படம் முழுக்க ஊட்டியில் படமாக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது எதிர்பாரா விதமாக குண்டும் வெடித்ததாம். மேலும் எம்.ஆர்.ராதா காட்சிகள், மனோரமாவின் காட்சிகள் உள்ளிட்டவை பெரும்பாலானவை நீக்கப்பட்டிருந்தது. இப்படி பல தடைகளைத் தாண்டி இந்தப் படம் வெளியாகி வெற்றி பெற்றது.
மோதலில் ஆரம்பித்த கண்ணதாசன்- சாவித்ரி உறவு பின் நட்பில் முடிந்தது. தன் குடும்பப் பிரச்சினைகளைக் கண்ணதாசனிடம் சொல்லும் அளவிற்கு சாவித்ரி கண்ணதாசனிடம் பழகி வந்தார். ஒருகட்டத்தில் தான் சொந்தப் படம் எடுக்கப் போவதாகக் கண்ணதாசனிடம் கூறியிருக்கிறார் சாவித்ரி. அதற்கு கண்ணதாசனோ, “வேண்டாம்.. நானே இரு படங்கள் எடுத்து என்னுடைய சொத்துக்களை நிம்மதியை இழந்திருக்கிறேன். என்னுடன் இருந்தவர்கள் யாரும் இப்போது இல்லை. மற்றவர்களை நம்பி இறங்காதே “ என்று அறிவுரை கூறியிருக்கிறார்.
ஆனாலும் இதைக் கேட்காத சாவித்ரி தன்னுடைய சொத்துக்களை விற்று 1971- ல் பிராப்தம் என்ற படத்தினை எடுத்து நஷ்டத்தில் சிக்கிக் கொண்டார். படமும் வெற்றியடைவில்லை. இந்தப் படத்தின் மூலமாக சாவித்ரியின் சினிமா வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu