சினிமாவினை ஆளுமை செய்த நடிகை ராதா..!

சினிமாவினை ஆளுமை செய்த  நடிகை ராதா..!
X
எண்பதுகளின் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பெயர் ராதா.

பாரதிராஜாவின் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளியான ’அலைகள் ஓய்வதில்லை’ படத்தில், மேரியாக வந்து ரசிகர்களை கொள்ளை கொண்டவர். பிரபல நடிகை அம்பிகாவின் தங்கை என்ற அடையாளத்தோடு திரைத்துறையில் அடியெடுத்து வைத்த ராதா, ஒரு சில ஆண்டுகளிலேயே தனக்கென தனி அடையாளத்தை வென்று முன்னணி நடிகைகள் பட்டியலில் சேர்ந்து அசத்தினார்.

பாரதிராஜாவின் படங்களில் அறிமுகமாகும் நடிகர், நடிகைகளின் இன்சண்ட் குணங்கள் ரொம்பவே ஈர்க்கும். முதல் படம் என்பதால் நடிக்க தெரியாமல் இப்படி செய்கிறார்களோ என்றுகூட தோன்றும், ஆனால் பாரதிராஜாவின் படங்களில் மட்டுமே இந்த விஷயங்களை நாம் காண முடியும். புதுமுகங்களிடம் வெளிப்படும் கேமரா பயத்துடனான இப்படியான எக்ஸ்பிரஷன்களை, பாரதிராஜா அவர்கள் விரும்பியே காட்சியாக்கியது தான் உண்மை.

இந்தப் படத்தில், ராதாவிடமும் அப்படியான இன்னசண்ட் ரியாக்ஷன்களை நிறைய காணலாம். குறிப்பாக கார்த்திக் மற்றும் நண்பர் குழாம் ராதாவைச் சீண்டும் போது, திடுக்கிட்டு பார்ப்பது போல ஒரு ரியாக்ஷன் கொடுப்பார். மருண்ட விழிகளும், மெலிதாய் திறந்த இதழ்களுமாக, அந்த ரியாக்ஷனைக் கொடுக்கும் ஒவ்வொரு இடத்திலும் ராதாவிடம் க்யூட்நெஸ் பொங்கி பிரவாகமாக ஓடும். ஒருபக்கம், அறிமுக இன்னஸன்ஸ் குணங்களில் அசத்தினாலும், உருக்கமான காட்சிகளில், உணர்ச்சிகரமான நடிப்பிலும் ராதா கவனிக்க வைத்திருந்தார். அடுத்த பத்தாண்டுகளுக்கு ராதாவின் அலை ஓயப்போவதில்லை என்பதற்கு கட்டியம் கூறியது போலவே அந்த அறிமுகத்திலேயே ரசிகர்களை பெரிதாக ஈர்த்தார் ராதா.

ராதாவின் திரை வாழ்க்கையை முதல் மரியாதைக்கு முன், முதல் மரியாதைக்கு பின் என்று இரண்டாக பிரிக்கலாம். பதின்மத்தின் தொடக்க வயதிலேயே நடிக்க வந்து விட்டவர் ராதா. ஆரம்ப நாட்களில், அந்த பதின்ம வயது தோற்றத்திற்கு ஏற்ப, நிறைய காதல் கதைகளில் நாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். குறிப்பாக தன்னுடைய முதல் ஜோடியான கார்த்திக் உடன் ‘கண்ணே ராதா’, ‘நேரம் வந்தாச்சு’, ‘வாலிபமே வா வா’, ‘இளம் ஜோடிகள்’ என தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார். போலவே ,‘சிம்ம சொப்பனம்’, ‘நீதியின் நிழல்’, ‘முத்து எங்கள் சொத்து’ உள்ளிட்ட பிரபுவின் ஆரம்பகால படங்களிலும் பிரபுவுக்கு அதிக படங்களில் ராதாவே ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தார். இவர்கள் தவிர சுரேஷ், மோகன் என்று அன்றைய இளம் கதாநாயகர்கள் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல், சிவக்குமார் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களின் படங்களிலும் ராதாவின் கொடியே உயர பறந்தது.

இந்த முதல் பாதியில் தான், தமிழில் அதிகமான படங்களில் ராதா நடித்துக் கொண்டிருந்தார். ராதாவின் பீக் பிரியட் என்றுகூட அதை சொல்லலாம். ஆனாலும் அவற்றில் பெரும்பாலான திரைப்படங்கள் வழக்கமான தமிழ் சினிமா டெம்ப்ளேட்டில் இயங்குபவையாக இருந்ததால், ராதாவின் கணக்கில், வெறும் எண்ணிக்கைகளுக்கான படங்களாகவே அவை அமைந்தன. ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘ஆனந்த ராகம்’, ‘காதல் ஓவியம்’ போன்ற சொற்ப எண்ணிக்கையிலான படங்களில் தான் ராதாவிற்கு நடிப்பில் சொல்லிக் கொள்ளும் படியான கதாபாத்திரங்கள் இந்த முதல் பாதியில் அமைந்தன.

இப்படி ஒரு சூழலில்தான் 1985 ஆம் ஆண்டு ‘முதல் மரியாதை’ வருகிறது. தனது குருநாதர் பாரதிராஜாவின் இயக்கத்தில் ராதா நடிக்கும் ஐந்தாவது படம் அது. பரிசல்கார குயிலாக , சிவாஜி என்கிற நடிப்பு பல்கலைக்கழகத்தோடு நடிக்கிறோம் என்கிற எந்த பதற்றமும் இல்லாமல், கிராமத்து பரிசல்காரி குயிலாக வாழ்ந்து காட்டியிருந்தார் ராதா. ”எம்பேரு ஒண்ணும் ஒலக்கு இல்லை, பேராவூரணி கோயில்ல காதுகுத்தி….” என்று துடுக்குத்தனத்துடன் சிவாஜியோடு திரையைப் பகிரும் முதல் காட்சியிலேயே, இப்படி ஒரு நடிகையைத் தானா இத்தனை நாள் மரத்தை சுற்றி டூயட் பாட விட்டுக் கொண்டிருந்தார்கள் என்று தோன்ற வைக்கும்படி ஆச்சரியப்படுத்திருந்தார்.

அந்தப் படத்தில், சிவாஜிக்கு சாப்பாடு பரிமாறுகிற காட்சி ஒன்றில், “எங்கம்மா கையால சாப்பிட்ட நெனப்பு வந்திருச்சு” என்று சிவாஜி கலங்குவார். சிவாஜி ஏற்ற மலைச்சாமி கதாபாத்திரத்தின் பின் உள்ள சோகத்தை அறிந்திருக்கிற குயில், கனிவான பார்வை ஒன்றை சில நொடிகள் தந்து, பிறகு அந்தப் பின்னணி தனக்கு தெரியும் என்பதை காட்டிக்கொள்ளாத கவனத்துடன் வழக்கமான துடுக்குத்தனத்திற்கு திரும்புவாள்.

”எனக்கொரு தாய்மடி கிடைக்குமா?” என்ற மலைச்சாமியின் கேள்விக்கான பதிலாக , ”நானிருக்கேன் உனக்கு” என்பதை அந்த காட்சியில் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருப்பாள் குயில். இந்தக் காட்சியை ராதா கையாண்டிருக்கும் விதம் என்பது, சொல்லிக் கொடுத்து வருகிற நடிப்பில் வைக்க முடியாது, ஒரு கதாபாத்திரத்திற்கு அப்படியே தன்னை ஒப்புக் கொடுத்தால் மட்டுமே நிகழும் உடல்மொழிகள் அவை. ராதாவிற்கு லைஃப் டைம் கேரக்டர் என்றால் அது நிச்சயமாக இந்தக் குயிலாகத்தான் இருக்கும்.

முதல் மரியாதைக்கு பிறகு, ‘ஆனந்த்’, ‘அண்ணா நகர் முதல் தெரு’, ‘பிக்பாக்கெட்’, ‘நினைவே ஒரு சங்கீதம்’ ,’உள்ளத்தில் நல்ல உள்ளம்’ , ‘எங்க சின்ன ராசா’ என நடிப்பிற்கு தீனி போடும் நல்ல நல்ல கதாபாத்திரங்களாக அவருக்கு அமைந்தன. இந்தப் படங்கள் வழியாக ’ஏர்கோஸ்ட்ரஸ்’ தொடங்கி கிராமத்து வெள்ளந்தி ’பாண்டி மீனாள்’ வரை எந்த கதாபாத்திரத்திற்கும் தன்னைப் பொருத்திக் கொள்ளும் லாவகத்தை, இந்த காலகட்டத்தில் வளர்த்துக்கொண்டு சிறந்த நடிகையாக மிளிர்ந்தார் ராதா.

1986 ஆம் ஆண்டில் இருந்து 1990 வரையிலான காலகட்டத்தில், அவர் நடித்து இம்மாதிரி படங்களின் வழியாகவே, ராதாவிற்கான ரசிகர் வட்டம் பெரிதாகியது என்றால் மிகையில்லை. இந்த காலகட்டத்தில் தெலுங்கில் நம்பர் ஒன் நடிகை என்கிற இடத்தில் இருந்தார் ராதா. அப்போது, வருடத்திற்கு சில படங்கள் என்று தமிழிலும் நடித்துக் கொண்டிருந்தார். தெலுங்கு பக்கம் சென்ற பின்னர் தான், ஒப்பனைகளிலும் நிறைய மாற்றங்கள் செய்து, ஒரு பேரழகியாக தன்னுடைய தோற்றத்திலும் பெரிய சேஞ்ச் ஓவரை காட்டினார் ராதா. குறிப்பாக, ஆர்.சுந்தர்ராஜன் படங்களில் வரும் ராதா ரொம்ப ஸ்பெஷலாக தெரிவார். ’அம்மன் கோயில் கிழக்காலே’ படத்தின் ‘பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே’, ‘மெல்ல திறந்தது கதவு’ படத்தின் ‘ஊரு சனம் தூங்கிருச்சு’ பாடல்களில் எல்லாம், முகபாவங்களிலேயே இத்தனை அழகிய கவர்ச்சியைக் காட்ட இயலுமா என்பது போல உச்சமான அழகில் வசீகரித்தார் ராதா.

சூப்பர் ஸ்டார் ரஜினியோடு ’நான் மகான் அல்ல’, ‘சிவப்பு சூரியன்’, ‘துடிக்கும் கரங்கள்’, ‘பாயும் புலி’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ என்று ஆரம்பகாலத்திலேயே ஜோடியாக நடித்து விட்டார் என்றாலும், ஆர்.சுந்தர்ராஜனின் ‘ராஜாதி ராஜா’வில் ‘மீனம்மா மீனம்மா’ பாடலில் வந்த ராதாதான் ரஜினிக்கு ஏற்ற ஜோடியாக தெரிந்தார். ரஜினி - கமல் உள்ளிட்ட எண்பதுகளின் அனைத்து முன்னணி கதாநாயகர்களோடும் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் ஜோடியாக நடித்தவர் ராதா. ராதாவின் திரை வாழ்வின் முதல் பாதியில் கார்த்திக்கும், இரண்டாம் பாதியில் விஜயகாந்தும், திரையில் அவருக்கு தி பெஸ்ட் ஜோடியாக தெரிந்தனர் என்று சொல்லலாம்.

ராதா நடித்துக் கொண்டிருந்த நாட்களில், சக்ஸஸ்ஃபுல் கதாநாயகிக்கான காலம் என்பதே அதிகபட்சம் பத்து ஆண்டுகளாக இருந்தது. ராதாவும் மிகச் சரியாக தனது திரைவாழ்வின் பத்தாவது ஆண்டில் , அதாவது 1991 ஆம் ஆண்டு, திரைத்துறையில் இருந்து விலகினார். அந்த வருடத்திலும் கூட, ‘சிகரம்’ , ‘மறுபக்கம்’ போன்ற நல்ல திரைப்படங்களில் கனமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்தப் படங்களில் அவரின் முதிர்ச்சியான நடிப்பினை பார்த்த போது ’இன்னும் நடித்திருக்கலாமே’ என்கிற எண்ணத்தை ரசிகனுக்கு கொடுத்திருந்தார். இப்படியாக, வாய்ப்புகள் இருக்கும் போதே கௌரவமாக விலகி, சரியான வயதில் திருமண பந்தத்திலும் நுழைந்து, ஒரு குடும்பத் தலைவியாகவும் வெற்றிகரமாக வலம் வருகிறார் ராதா.

நன்றி:- முனியாண்டி அய்யங்கார்.

Tags

Next Story