எனக்கு ராஜாவா நான் வாழுவேன்! வம்புகளில் சிக்கும் சிம்புவின் பிறந்தநாள் இன்று

எனக்கு ராஜாவா நான் வாழுவேன்! வம்புகளில் சிக்கும் சிம்புவின் பிறந்தநாள் இன்று
X
நடிகர் சிம்பு இன்று ( பிப்ரவரி 3 ) தனது 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதில் அவர் கடந்து வந்த பாதைகளை பார்க்கலாம்.

ஒரு மனிதருக்குப் பிரச்சனை வரலாம். ஆனால் வாழ்க்கையே பிரச்சனை என்றால்? காதலாகட்டும், சினிமாவாகட்டும், திரும்பிய பக்கம் எல்லாம் சர்ச்சைகள். அவர் பார்க்காத வெற்றியும் இல்லை அவர் பார்க்காத தோல்வியும் இல்லை. தன் மீது எத்தனை குறைகள், சர்ச்சைகள் எழுப்பினாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் ரசிகர்கள் வைத்த அன்பிற்காகத் தொடர்ந்து போராடி வருகிறார்.

கோலிவுட் சினிமாவிற்கு இளமையின் பரிசு என்றால் அது சிம்பு தான். இவர் பிறந்ததே சினிமாவிற்கு தான். தந்தை டி ராஜேந்தர், தாய் நடிகை உஷா. புலிக்கு பிறந்தது பூனையாகுமா?


பிப்ரவரி 3, 1983ம் ஆண்டு பிறந்த சிலம்பரசன் உறவைக் காத்த கிளி படம் மூலம் 1984 ஆம் ஆண்டு சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். ஐ ஆம் எ லிட்டில் சூப்பர் ஸ்டார் என ஒரு சிறுவனுக்கு எண்டரி பாடல் வைத்தது என்றால் அது சிம்புவிற்கு மட்டுமே. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தார்

நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, காதல் அழிவதில்லை, தம், அலை உள்ளிட்ட படங்களில் நடித்து, விரல்களை மடக்கி வித்தை காட்டினார். அப்போது அவர் கையில் கட்டியிருந்த கருப்பு வயர் பல இளைஞர்களை பின்பற்ற செய்தது.


சிலம்பரசன் என்ற இயற்பெயருடன் தமிழில் அறிமுகமான இவர், சிம்பு, எஸ்.டி.ஆர் என்ற புனைப் பெயரில் ரசிகர்களிடம் பிரபலமானார். நடிப்பு என்ற வட்டத்திற்குள் மட்டுமே நின்றுவிடாமல், கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர், நடனம், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமையைக் கொண்டவராக வலம் வருகிறார். 2004-ஆம் ஆண்டில் வெளியான மன்மதன் மற்றும் சிம்பு இயக்கிய வல்லவன் ஆகிய படங்கள் அதிரடி ஹிட்டானது.


கவுதம் மேனன் இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் சிம்புவின் இன்னொரு பரிமாணத்தை ரசிகர்களுக்கு காட்டியது. வழக்கமான சிம்பு படங்களில் இருக்கும் அத்தனை இலக்கணங்களையும் உடைத்து ஒரு பக்கத்து வீட்டு பையன் போன்ற பிம்பத்தை சிம்புவுக்கு கொடுத்தது.

இதுவரை 30 படங்களில் நடித்திருக்கிறார். அதில் பெரிய அளவில் அவருக்கு வெற்றியைத் தந்த படங்கள் என்றால் மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா, தொட்டி ஜெயா, மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு.

சிம்பு என்றால் வம்பு எனவும் கோலிவுட்டில் பெயரெடுத்தார். கசிந்த அந்தரங்கப் படங்கள் முதல் "பீப் சாங்" வரை, உடைந்த உறவுகள், இயக்குநர்களுடனான மோதல்கள் வரை, சிம்புவைப் பற்றிய விஷயங்கள் எப்போதும் சர்ச்சையாகவே இருந்தது. 2017ல் நடிகர் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் வெளியானது. படம் படு தோல்வியைச் சந்தித்தது. சிம்பு ஒழுங்காக படப்பிடிப்புக்கு வரவில்லை, கதையை தன் விருப்பத்திற்கு மாற்ற சொல்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் கிளம்பியது. படத்தின் ஒட்டுமொத்த தோல்விக்கே சிம்பு தான் காரணம் என்பது போல் கூறினர். ஒரு கட்டத்தில் சிம்புவிற்கு ரெட் கார்டு கொடுக்கும் அளவிற்கு சென்றுவிட்டது. இதனால் மொத்த தமிழ் சினிமாவும் சிம்பு என்றாலே வம்பு, சர்ச்சை, சிக்கல் என நினைக்கத் தொடங்கியது.

இந்த சமயத்தில் தான் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் இடம் பெற்ற பாடல் மூலம் பதிலடி கொடுத்தார். அதில், "பட்டதை பட்டுனு சொன்னா என்ன கெட்டவனு சொல்லுங்க ஓரமா போய் உக்காந்தா என்ன உத்தமனு என்ற வரிகள் சர்ச்சையானது.

அரசியல் சம்பவம், மக்கள் போராட்டம், மெரினாவில் நடந்த போராட்டத்தில் அவர் பேசியது என அனைத்தும் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டது. அத்துடன் இளைஞர்கள், மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அப்படி வந்தால் தான் பக்கபலமாக இருப்பேன் என உறுதியளித்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

மணிரத்னம் கூட்டணியில் உருவான, செக்க சிவந்த வானம் படத்தில் கமிட்டானர். எதிராஜ் பாத்திரம் அவருக்கு கைகொடுக்கும் என சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.


கொரோனா காலக்கட்டத்தில் தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து ஈஸ்வரன் படம் மூலம் கம்பேக் கொடுத்தார். கம்பேக் வந்தவுடன் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகிவிட்டார். இவர் நடித்த ஈஸ்வரன், மகா, மாநாடு உள்ளிட்ட படங்கள் ஹிட்டானது..

இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பத்து தல படம் இம்மாதம் வெளியாக உள்ளது.சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இந்த படம் கன்னட படமான மஃப்டியின் ரீமேக் ஆகும். மேலும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே இப்படம் கடந்த டிசம்பர் 14 அன்று வெளியாகும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்த நிலையில் மார்ச் மாதம் 30 ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

உடல் எடையை குறைத்த பிறகு, சிம்பு தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இருந்த உடலமைப்பைக் கொண்டுள்ளார். ஆனால் இந்த மாற்றம் வெளியில் மட்டுமல்ல, அகத்திலும் உள்ளது என்று அவர் கூறுகிறார். சிம்பு தனது மாற்று ஈகோவிற்கு உண்மையில் என்ன அர்த்தம் என்பதை இன்னும் தெளிவாக வரையறுக்கவில்லை, ஆனால் " நான் வைரலாடவன் இல்லடா வைரலா விட்டு ஆட்றவன் " போன்ற வரிகளை பேசிய பையனை விட இது நிச்சயமாக சிறந்தது .

Tags

Next Story
ஜலதோஷத்துக்குலாமா டாக்டர் கிட்ட போறீங்களா..? இனிமே இத பண்ணுங்க..!