எனது ஆசிரியர்களுக்கு நன்றியையும் பணிவையும் காணிக்கையாக்குகிறேன்: நடிகர் ராஜ்கிரண்
தயாரிப்பாளராக இருந்து நாயகனாக மாறியவர்களில் ராஜ்கிரண் முக்கியமானவர். தனக்கு எந்தப் பாத்திரம் பொருந்துமோ அதில் மட்டும் நடித்து தற்போது வரை ரசிகர்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது, தான் நாயகனாக நடிக்கவில்லை என்றாலும், தனது கதாபாத்திரம் நாயகனுக்கு இணையாக இருந்தால் மட்டுமே நடிப்பார், இல்லையென்றால் வேண்டாம் என்று சொல்லிவிட்டு கடந்துவிடுவார். தொண்ணூறுகளில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் வெள்ளிவிழாப் படங்கள் என்பதுதான் எல்லோரையும் வியக்க வைத்த விஷயம்.
இந்தநிலையில் நடிகர் ராஜ்கிரண், இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நெகிழ்வான பதிவொன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தனக்கு கல்வியைக் கற்றுக்கொடுத்த அனைத்து ஆசிரியர்களின் பெயரையும் நினைவில் வைத்து நன்றியையும் தனது மன மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், ஆசிரியர் தின நன்னாளில் எனக்கு கல்விப்பிச்சை அளித்த ஆசிரியப் பெருந்தகையினர் அனைவரையும் நினைத்து மகிழ்கிறேன். 1955 முதல் 1966 வரையிலான காலகட்டம். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா ஆரம்பப் பள்ளியின் முதல் வகுப்பு ஆசிரியர் மோஸஸ் ஐயா அவர்களுக்கும், இரண்டாம் வகுப்பு ஆசிரியர் குமார் ஐயா அவர்களுக்கும், மூன்றாம் வகுப்பு ஆசிரியை ஆசீர்வாதம் அம்மா அவர்களுக்கும், நான்காம் வகுப்பு ஆசிரியை செல்லம் அம்மா அவர்களுக்கும், ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் மாதவன் ஐயா அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளியின் ஆறாம் வகுப்பு ஆசிரியர் சுப்பிரமணியம் ஐயா அவர்களுக்கும், ஏழாம் வகுப்பு ஆசிரியர் நைனார் முஹம்மது ஐயா அவர்களுக்கும், சிறப்பு தமிழாசிரியர் நடராஜன் ஐயா அவர்களுக்கும், எட்டாம் வகுப்பு ஆசிரியர் கேசவன் ஐயா அவர்களுக்கும், ஹமீதியா மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் ஜனார்த்தனன் ஐயா அவர்களுக்கும், பத்தாம் வகுப்பு ஆசிரியர் ராஜு ஐயா அவர்களுக்கும், பதினொன்றாம் வகுப்பு ஆசிரியர் ஜெகந்நாதன் ஐயா அவர்களுக்கும், சதக்கத்துன் ஜாரியா பள்ளிகளின் தலைமை ஆசிரியராய் இருந்த,செல்வம் ஐயா அவர்களுக்கும், ஹமீதியா மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராய் இருந்த, ஜார்ஜ் ஐயா அவர்களுக்கும், என் பணிவையும் நன்றிகளையும் காணிக்கையாக்குகிறேன். அவர்களெல்லாம், இப்பொழுது எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாவிடினும், அவர்கள் மனச்சாந்தியுடனும், சமாதானத்துடனும், நிறைவோடு வாழ, எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
நடிகர் ராஜ்கிரணின் இந்த ஆசிரியர் தினப் பதிவு சமூக வலைத்தளமெங்கும் வைரலாகியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu