35ம் ஆண்டில் ‘சத்யா’..! மொட்டைத்தலை, தாடி, கையில் காப்பு..! ஸ்டைல் காட்டிய கமல்..!

35ம் ஆண்டில் ‘சத்யா’..!  மொட்டைத்தலை, தாடி, கையில் காப்பு..! ஸ்டைல் காட்டிய கமல்..!
X

சத்யா திரைப்படத்தில் கமல் மற்றும் அமலா.

கமல் நடித்து வெளிவந்த சத்யா படம் வெளியாகி 35 ஆண்டுகளைக் கடந்துவிட்டன. இன்னும் வளையோசை கலகலகலவென...பாடல் நினைவில் நீங்கா இடம்பிடித்துள்ளது.

படித்துவிட்டு வேலை தேடி அலையும் இளைஞர்களின் அவமானங்களையும் வேதனைகளையும் மூலதனமாக வைத்துக் கொண்டு, அவர்களை ’யூஸ் அண்ட் த்ரோ’க்களாக உபயோகித்து தூக்கியெறிகிற அரசியல் அவலத்தை ஆக்ரோஷத்துடன் சொன்ன படம் தான் ‘சத்யா’.

இளைஞன் சத்யா படித்துவிட்டு வேலைக்கு அலைகிறான். அவனுக்கு அப்பா, தங்கைகள் உண்டு. அம்மா இல்லை. ஆனால், சித்தி உண்டு. சித்தியின் மாற்றாந்தாய் மனப்பான்மையும் சத்யாவின் வேலையில்லாத நிலையும் சேர்ந்துகொண்டு, சத்யாவை மேலும் காயப்படுத்துகிறது. சத்யாவுக்கு இருக்கிற ஆறுதல்... நண்பர்களும் அவர்களுடனான கேரம்போர்டு விளையாட்டும்தான்!

இயல்பாகவே சமூகத்தின் மீது அக்கறை கொண்ட சத்யாவுக்கு, சுற்றி நடக்கிற அத்துமீறல்கள் ஆவேசத்தை உண்டு பண்ணுகின்றன. ‘இளங்கன்று பயமறியாது’ என்பது போல், தெருவில் நடக்கும் ரவுடிகளின் அடாவடித்தனத்தைக் கண்டு, பொங்குகிறான் சத்யா. அனைவரையும் துவைத்தெடுத்துத் துரத்துகிறான்.


இந்த ரவுடிக்கூட்டத்துக்கு ஒரு தலைவன். அந்தத் தலைவனுக்கு இன்னொரு தலைவன். இரண்டு கூட்டமும் தேச விரோதச் செயல்களைச் செய்கிறது. இவர்களுக்கெல்லாம் அந்த ஊர் எம்எல்ஏ ஆதரவு. இவற்றையெல்லாம் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார் அந்த ஊரைச் சேர்ந்த அதே கட்சியைச் சேர்ந்த பிரமுகர்.

ரவுடிக்கூட்டத்துடன் மோதுகிற சத்யா மீது அவர்களின் தலைவன் கோபமாகிறான். அந்தக் கோபத்தை சத்யாவின் தங்கை மீது காட்டுகிறான். சத்யா அடுத்த போராட்டத்துக்குள் இறங்குகிறான். இன்னொரு தலைவனுக்கும் ஆத்திரம் வருகிறது. அவர்களையும் எதிர்க்கிறான். இந்தநிலையில் சத்யாவின் நண்பன், தெருவுக்கு நடுவே, மிகப்பெரிய கூட்டத்துக்கு மத்தியில் கொல்லப்படுகிறான். அதைப் பார்த்தவர்கள் பலநூறுபேர் இருந்தாலும் ஒருவர் கூட சாட்சிக்கு வரவில்லை. அவனுடைய கோபக்கங்கு நாளுக்குநாள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கிறது.

சத்யாவை சும்மாவே பிடிக்காத சித்திக்கு, இப்போது அவன் செய்யும் சண்டைகளும் வம்படிகளும் இன்னும் பிடிக்காமல் போக, வீட்டைவிட்டுத் துரத்துகிறார். வீடின்றி, ஆதரவின்றி தவிக்கும் சத்யாவுக்கு, அந்த அரசியல் பிரமுகர் அடைக்கலம் தருகிறார். சத்யாவைக் கொண்டு, தீயசக்திகளை ஒழிப்பதாகச் சொல்லி, எதிரிகளை பலமிழக்கச் செய்கிறார்.

சத்யாவுக்கு தங்குவதற்கான இடம், தேவைக்கான பணம், போக்குவரத்துக்கு கார் எல்லாம் கொடுக்கிறார். ‘சத்யா மாதிரி உண்மையானவன் உண்டா’ என்று வார்த்தைக்கு வார்த்தை, வார்த்தையாலேயே குளிப்பாட்டுகிறார்.

இந்தநிலையில், தேர்தல் நெருங்குகிறது. அட்டூழியம் செய்யும் எம்எல்ஏ செய்யும் ஊழல்களையும் ரகசிய பரிவர்த்தனைகளையும் காட்டிக் கொடுத்தால், நம் தலைவருக்கு சீட் கிடைக்கும் என்று சத்யாவிடம் தூபம் போடுகிறார்கள். அதன்படி, அதுகுறித்த ஆவணங்களையெல்லாம் எடுத்து வந்து கொடுக்கிறான் சத்யா. இதை பத்திரிகைகளில் கொடுத்து, எஎம் எல்ஏ-வை அம்பலப்படுத்துவாரெனப் பார்த்த சத்யாவுக்கு அதிர்ச்சி. இருவரும் இதைவைத்துக்கொண்டு பேரம் பேசுகிறார்கள். சமரசமாகிக் கொள்கிறார்கள். ‘’எனக்கு சீட் வேணும்’’ என்று அவர் கேட்க, வேறு வழியில்லாமல் விட்டுக்கொடுக்கிறார் எம்எல்ஏ.

இதற்கு நடுவே, கேரளத்தில் இருந்து தமிழகம் வந்து வேலை பார்க்கிற பெண்ணுக்கும் சத்யாவுக்கும் இடையே மலர்கிறது காதல். ஆனால், சத்யா ஏதோ தப்பு செய்கிறான் என்று உணர்ந்து, சத்யாவைப் புறக்கணிக்கிறாள் காதலி. ஒருபக்கம், வீடு ஒதுக்கியிருக்க, இன்னொரு பக்கம் காதலியும் நம்ப மறுக்க, முக்கியமாக, அரசியல்வாதியும் தன்னை வெகுவாக ஏமாற்ற, இயலாமையால் புழுங்கி, ரெளத்திரத்துடன் அரசியல் முதலைகளை எதிர்க்கிறான் சத்யா.

ஒருகட்டத்தில் அவனை அடித்து தூக்கிப் போடுகிறார்கள். அப்பா ஏற்கிறார். சித்தியும் மனம் மாறுகிறார். இந்த முறை தன் மகன் சத்யா எடுக்கும் போராட்ட யுத்தத்துக்கு அப்பாவும் ‘பெஸ்ட் ஆஃப் லக்’ சொல்ல, காதலியும் இணைந்துகொண்டு வாழ்த்த, அந்த அரசியல் பச்சோந்திகளை சத்யா என்ன செய்தான்? அதுதான் ‘சத்யா’வின் கதை!

படித்தாலும் வேலை இல்லை, பட்டதாரி இளைஞர்களை அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்த ‘சத்யா’ , தமிழ் சினிமாவின் ஆகப்பெரிய முத்திரை பதித்த படம்! 1985-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘அர்ஜூன்’ என்கிற படத்தின் உரிமையை வாங்கி, அதை தமிழுக்கும் தனக்கும் தகுந்தவாறு முழுவதுமாக மாற்றியமைத்து ‘சத்யா’வை உருவாக்கினார் கமல்ஹாசன்.

‘ஏக் துஜே கேலியே’ படத்தின் மூலம் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த சுரேஷ் கிருஷ்ணா, பின்னாளில், ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ வெல்லாம் எடுத்தார். ஆனால், அவரின் முதல் இயக்கம் கமலின் ‘சத்யா’தான்!

கமல்ஹாசன்

கமல்ஹாசன்சத்யா படத்தில்...

மொட்டைத்தலையில் லேசாக வளர்ந்த முடி, கன்னத்தின் தாடி, கழுத்தில் கயிறு, அரைக்கைச் சட்டையை இன்னும் மடித்துவிட்டு ‘புஷ்டி’ காட்டும்படியான உடல்வாகு, வெளுத்துப்போன ஜீன்ஸ் பேன்ட், சாதாரண செருப்பு, கையில் காப்பு என எண்பதுகளின் இறுதியில் இளைஞர்களுக்கு ஒரு புது அடையாளமாக ‘சத்யா’ கமல் திகழ்ந்தார். இந்தப் படம் வந்த பிறகு, காப்பு போட்டுக்கொண்ட இளைஞர்களும் தாடி வைத்துக் கொண்ட இளைஞர்களும் அதிகமானார்கள்.

நடிகர் ஜெயப்பிரகாஷ் (இப்போது பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிற தயாரிப்பாளரும் நடிகருமான ஜெயப்பிரகாஷ் அல்ல), நாசர், ராஜேஷ், கிட்டி, ஜனகராஜ், கவியூர் பொன்னம்மா, வடிவுக்கரசி, டிகேஎஸ்.நடராஜன், ஆர்.எஸ்.சிவாஜி, ஆனந்த், சுந்தர் எனப் பலரும் நடித்தார்கள். கமலுக்கு ஜோடியாக அமலா. இருவருக்கும் அப்படியொரு பாந்தம் அழகிலும் நடிப்பிலுமாக ஜொலித்தது.

கமலின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர் விக்ரம் தர்மாதான் இந்தப் படத்துக்கு மாஸ்டர். ‘விக்ரம்’ படத்தில் தனித்து அடையாளம் காணப்பட்டதால் விக்ரம் தர்மா என்றானார். ஆனால், ‘சத்யா’ படம்தான், அவர் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமான முதல் படம். படத்தின் கதை வலுவானது என்றால், ஒவ்வொரு சண்டைக் காட்சியும் அப்படியே யதார்த்த ரகம்.

கொட்டும் மழை. தியேட்டரில் இருந்து பஜார் வீதிக்குள் குடையுடன் வருகிற கூட்டம். அந்தக் கூட்டத்துக்கு நடுவே நடக்கிற கொலை, நமக்குள் பகீர் கிளப்பும். போலீஸ் ஸ்டேஷன் வாசலில், அந்த ரவுடிக் கூட்டத்தைப் பார்த்துவிட்டு அடிப்பதற்கு செங்கல் எடுப்பார் கமல். அப்போது சைக்கிள் கேரியரில் உருட்டுக்கட்டைகளுடன் செல்வார் யாரோ ஒருவர்.

அதிலிருந்து இரண்டு கட்டைகளை உருவி, ரவுடிகளைப் பந்தாடும் காட்சி, அந்தப் பகுதி மக்களுக்கு ஷூட்டிங் என்பது தெரியாமலேயே எடுக்கப்பட்டது. மாடியில் இருந்தும், காருக்குள்ளிருந்தும், லாரிக்குள்ளிருந்துமாக கேமராவை வைத்துக்கொண்டு எடுத்த காட்சிகளை இப்போது பார்த்தாலும், ஒரு தெருச்சண்டை எஃபெக்ட்டுடன் இருக்கும். சண்டைக்காட்சிகளில் அடி வாங்குகிற சத்தம், தமிழ் சினிமாவில் அதுவரை வந்திடாத, ஒலிச்சேர்ப்பு மாயங்கள் செய்த, யதார்த்த சத்தம்!

கவிஞர் வாலி, டெல்லி கணேஷ் முதலானோரும் நடித்தார்கள். இந்தியில் மிகப்பெரிய ஒளிப்பதிவாளர் எனப் பேரெடுத்த எஸ்.எம்.அன்வர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். ‘பாட்ஷா’ படத்தில் தெருவில் ரஜினி எல்லோரையும் அடித்துக் கொண்டே ‘உள்ளே போ’ என்று தங்கையைச் சொல்வார். அது இந்தப் படத்திலேயே வைக்கப்பட்டிருந்தது. அதேபோல், ‘சத்யா’ படத்தின் வீடு, மாடி, தெரு முதலான செட்டுகளும் ‘பாட்ஷா’ படத்தின் செட்டுகளும் ஓரளவுக்கு ஒரே சாயலில் பண்ணியிருந்தார் சுரேஷ் கிருஷ்ணா.

கமல்ஹாசன் தன்னுடைய குருவாகவே பாவிக்கும் அனந்து இந்தப் படத்துக்கான திரைக்கதைப் பங்களிப்பை கமலுடன் இணைந்து செய்திருந்தார். 1987-ம் ஆண்டு மணிரத்னத்துடன் இணைந்து ‘நாயகன்’ தீபாவளித் திருநாளில் உருவானது. அதன் பின்னர், மெளன மொழிப் படமாக சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில், அமலாவுடன் நடித்த ‘பேசும்படம்’ வெளியானது. இதையடுத்து 1988ம் ஆண்டு, ஜனவரி 29-ல், ’சத்யா’ வெளியானது. 1987 டிசம்பர் 24-ம் தேதிதான் எம்ஜிஆரின் மரணம் நிகழ்ந்தது. அதையடுத்து வெளியான கமலின் இந்தப் படத்தை, ‘எம்ஜிஆருக்கு சமர்ப்பணம்’ என்றே டைட்டிலில் எம்ஜிஆர் புகைப்படத்தைக் காட்டி பதிவிட்டார் கமல்.


ஆம்புலன்ஸில் எரிகிற லைட், ஆம்புலன்ஸ் சத்தத்தில் தொடங்கி, ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று, கமலின் முகத்தையும் காயங்களையும் காட்டி முடிக்க, அங்கிருந்து ஃப்ளாஷ்பேக் தொடங்கும். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிஜிஎம்மின் ராஜா என்பதை இசைஞானி இளையராஜா நிரூபித்திருப்பார். பாடல்களும் அப்படித்தான்!

இந்தப் படத்துக்காக லதா மங்கேஷ்கரும் எஸ்பி.பி-யும் பாடிய ‘வளையோசை கலகலகலவென’ பாடல் இன்றைக்கு எங்கே கேட்டாலும் அந்த நான்கு நிமிடத்துக்கு நின்று கேட்டுவிட்டுத்தான் நகருவோம். அதிலும் அந்த ஆரம்பப் புல்லாங்குழலின் ஜாலத்தை இளையராஜா விவரிக்க, புல்லாங்குழல் கலைஞரான நெப்போலியன் என்ற அருண்மொழி அதை வாசித்துக் காட்ட, அந்த வீடியோவை ஷேர் பண்ணி, லைக் பண்ணியவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.

வில்லன் கிட்டியின் நடிப்பு பிரமாதம். பசுத்தோல் போர்த்திய புலி என்பது போல் அவரின் செயல்களுக்கு அவ்வளவு கனிவும் கருணையுமாக எஸ்பி.பி-யின் குரல் அட்டகாசமாகப் பொருந்தியிருக்கும். ’வளையோசை’ பாடலும் பாடல் படமாக்கப்பட்ட விதமும் பிரமிப்பாகவும் கவிதையாகவும் இருந்தது.

அதேபோல், சண்டை போட்டுவிட்டு, அங்கே போய்க்கொண்டிருக்கும் பேருந்தில் கமலும் நண்பர்களும் தொற்றிக்கொள்ளும் காட்சியும் வியக்கவைத்தது. மலையாள நடிகர் பகதூர், கமலின் அப்பா கேரக்டருக்கு, முகம், கண்கள், உயரம் என அப்படிப் பொருந்தினார். வடிவுக்கரசியின் கோபமான அலட்சியமான நடிப்பு ரசிக்கவைத்தது. இந்துவும் ராசியும் சகோதரிகளாகவே நடித்தார்கள். சண்டைக்காட்சிகளில் வந்து தலைகாட்டிவிட்டு, அடிவாங்கிச் செல்லும் அழகு எனும் கலைஞருக்கு இந்தப் படம் வாழ்நாள் பெருமைக்கான படம்.

கமலின் ‘சத்யா’ ஏற்படுத்திய தாக்கம் தமிழக ரசிகர்களிடம் மிக மிக அதிகம். அதுமட்டுமா? திரையுலகில் உள்ள இன்றைக்கு இருக்கிற பல பிரமுகர்களையும் அன்றைக்கும் அசைத்துப் பார்த்தது ‘சத்யா’. இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், கையில் இப்போதும் காப்பு அணிந்திருக்கிறார். தவிர, அவரின் படங்களில் வருகிற நாயகர்களுக்கும் காப்பு அணிவித்துவிடுவார்.

‘’இதற்கெல்லாம் காரணம் ‘சத்யா’வும் கமல் சாரும் ஏற்படுத்திய தாக்கம்தான். நான் கமல் சாரின் தீவிர ரசிகன்’’ என்று அவரே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். சமீபத்தில் கமலின் தயாரிப்பில் கமலை வைத்து ’விக்ரம்’ எடுத்த லோகேஷ் கனகராஜும் ‘சத்யா’ படத்தையும் அந்தப் படத்தில் உள்ள காட்சிகளையும் சிலாகித்து பிரமிப்புடன் சொல்லியிருக்கிறார். இப்படி, திரையுலகில் இருப்பவர்களையே அசைத்து, ஈர்த்து, பாதிப்பை ஏற்படுத்தினான் ‘சத்யா’.

35 ஆண்டுகளானாலும், மொட்டைத்தலையும் தாடியும் கையில் காப்புமாக வந்து, அமலாவுடன் பஸ் படிக்கட்டில் ‘வளையோசை கலகலகலவென...’ என்று பாடியும் அரசியலைச் சாடியுமாக எடுத்த ‘சத்யா’வை இன்னும் மறக்கவில்லை ரசிகர்கள்!

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!