சினிமாவும் நானும் – பாலுமகேந்திரா பிறந்த நாள் ஸ்பெஷல் ரிமைண்டர்.
பாலுமகேந்திரா (கோப்புபடம்)
சத்தங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில் மௌனத்தை மொழியாக்கியவர் பாலுமகேந்திராவுக்கு இன்று பிறந்தநாள்.
1939 மே 20 ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், மகேந்திரா. அவரது தந்தை பாலநாதன் ஒரு சிறந்த கணித ஆசிரியர், கல்லூரி அதிபர்.தனது ஆரம்ப கல்வியை புனித மிக்கேல் கல்லூரியில் பயின்றார்.லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1969 ல் தங்கப்பதக்கம் பெற்றார்.
தான் பாடசாலையில் படித்த போது பார்த்த பதேர் பாஞ்சாலி திரைப்படம் தனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறுகின்றார். பின்னர் ப்ரிட்ஜ் ஒப் ரிவெர் க்வாய்( Bridge of river kwai ) திரைப்படத்தின் ஒரு பகுதி இலங்கையில் படமாக்கப்படும் போது பாலகன் பாலுமகேந்திரா அதனை காண நேர்கின்றது. அந்த தாக்கமே அவரை திரைப்படத்துறையில் ஈடுபாடுடையவராக்குகின்றது.
கோலிவுட் என்றழைக்கப்படும் நம்ம தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி முழுக்க நாயகர்களின் பிம்பத்தின் பின்னால் மட்டும் ஒளிவீச்சை பீய்ச்சி பிழைப்பை ஓட்டினாலும் அவ்வப்போது சில கேப்டன்ஷிப் என்றழைக்கப்படும் இயக்குநர்கள் வந்து அந்த மாயையை உடைத்து தங்களின் சேருக்கு பின்னால் சினிமாவை புதைத்து வைத்து பாதுகாத்துக் கொள்வார்கள். ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன் என நீளும் அந்த பட்டியலில் பாலுமகேந்திராவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அவர் இருந்தபோது தமிழ் சினிமா, கதாநாயகர்களின் பிம்பத்தில் இருந்தாலும் தனது படங்கள் வெளியானபோதெல்லாம் அதனை உடைத்துப் பாதுகாத்தவர் தான் பாலு.
அவர் உச்சத்தில் இருந்தபோதே அப்படி என்றால் 90 களிலும், 2000 க்குப் பிறகும் தமிழ் சினிமா ஒட்டுமொத்தமாக கதாநாயகர்களின் வசம் போனதென்னவோ நெசந்தான். ஆனால் அவற்றை மறுபடியும் உடைத்து தமிழ் சினிமாவின் உண்மையான கதாநாயகர்கள் எப்போதும் இயக்குநர்கள்தான்-யா என்று உரத்தக் குரலில் கோலிவுட்டுக்கு உணர்த்திக் கொண்டே இருப்போர். இதே பாலுமகேந்திரா பிள்ளைகளின் வரவு, (பாலா, ராம், வெற்றி மாறன், சீனு ராமசாமி, விக்ரம் சுகுமாறன்).
ஆனாலும் எந்த சிஷ்யரும் அந்த ஜாம்பவான் சாதனையை டச் கூட பண்ண முயலவில்லை என்பது சோகம்தான்., காரணம் பாலுமகேந்திரா வழக்கமான இயக்குநர் கிடையாது. சத்தங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில் மௌனத்தை மொழியாக்கியவர். அதீத உணர்ச்சி பெருக்குகளில், கண்ணீர் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த திரைக்கதையை மீட்ட மீட்பர் அவர். தான் இயக்கிய அனைத்து படங்களுக்கும் தானே ஒளிப்பதிவாளராகவும் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றிய ஒரே படைப்பாளி இந்திய சினிமாவிலேயே வேறு யாரும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
திரைப்படம், தொலைக்காட்சிப் படங்கள் ஆகியவற்றைப் படைப்பதோடு திரைப்பட மாணவர்களுக்குப் பாடமெடுக்கும் ஆசிரியராகவும் செயல்பட்டிருக்கிறார். 'சினிமா பட்டறை' என்னும் பெயரில் திரைப்படப் பள்ளி ஒன்றை சென்னையில் நடத்திவந்தார்.இப்படித் தரத்திலும் படைப்பு நேர்மையிலும் சமரசம் செய்துகொள்ளாத அரிதான படைப்பாளியாகவும் தலைசிறந்த ஒளிப்பதிவாள ராகவும் தேர்ந்த வாசகராகவும் சினிமாவை நேசிப்பவராகவும் இலக்கியத்தையும் சினிமாவையும் இணைக்கும் புள்ளியாகவும் தனக்கு பிந்தைய தலைமுறைகள் பயனடையப் பல சிறந்த படைப்பாளுமைகளை உருவாக்கிச் சென்ற ஆலமரமாகவும் விளங்கிய பாலு மகேந்திரா ஒரு முறை அவர் பகிர்ந்ததை இப்போது சொல்லி அன்னாருக்கு வாழ்த்தை பகிர்வோம்
நண்பர்களே…என்னுடைய வாழ்க்கையை சுயசரிதையாக நான் பதிவு செய்ய வேண்டும் என்று எனது மாணவர்களும், நலம் விரும்பிகளும் மற்றும் என்னை ரொம்பவும் மதிப்பவர்களும் அவ்வப்போது என்னிடம் கேட்டுக் கொண்டிருக் கிறார்கள். சுயசரிதம் எழுதும் அளவிற்கு நான் அப்படியொன்றும் சாதனையாளனல்ல. நான் ஒரு சாமன்யன். இன்னும் சொல்லப்போனால் நான் ஒரு சேறு நிறைந்த சாக்கடை. இந்த இடத்தில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். லட்சுமி அமர்ந்திருப்பதாக சொல்லப்படும் செந்தாமரையும் சரஸ்வதி வீற்றிருப்பதாக சொல்லப்படும் வெண்தாமரையும் சேற்றில் தானே மலர்கின்றன.பாலுமகேந்திரா என்ற சேற்றில் இருந்து தான் கோகிலா, அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, மறுபடியும், சதிலீலாவதி, ஜூலி கணபதி, அது ஒரு கனாக்காலம், போன்ற செந்தாமரைகளும், வீடு, சந்தியா ராகம், போன்ற வெண்தாமரைகளும் மலர்ந்தன.
எனது வாழ்க்கை சொல்லிக் கொள்ளும்படியானதோ அல்லது எழுதிக் கொள்ளும்படியானதோ அல்ல…நான் வணங்கும் பிரபஞ்ச சக்தி, சினிமா என்னும் மிகப் பெரிய ஆற்றலை எனக்குத் தந்துள்ளது. என்னிடமிருந்து சினிமாவைப் பிரித்துவிட்டால்,எஞ்சுவது பூஜ்யம் என்பது எனக்குத் தெரியும். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். எனது வாழ்க்கையை நான் பதிவு செய்வதாக இருந்தால், அதில் நடந்த நல்லது கெட்டது எல்லாவற்றையும் நான் எழுதவேண்டும். அப்படி எழுத முற்படும் பொழுது, எனது வாழ்க்கையோடு நேரடியாக சம்பந்தப்பட்ட சிலருக்கு அது வேண்டாத ஒரு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும்.எனவே எனது வாழ்க்கையில் நடந்த பல முக்கியமான சம்பவங்களையும், உறவுகளையும் நான் தவிர்க்க வேண்டி வரும்.அவையெல்லாம் இல்லாத எனது சுயசரிதை, குறைபட்ட சுயசரிதையாகவே இருக்கும்.
தோழமையுடன், பாலுமகேந்திரா.💐
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu