வாழ்வாதாரம் காக்க கையேந்துகிறேன் - பூச்சி. எஸ்.முருகன்.
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் உதவி - முன்னணி நட்சத்திரங்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி. எஸ்.முருகன் முன்னணி நடிக, நடிகைகளுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது, 'முன்னணி நடிக, நடிகைகளுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
வணக்கம்.
திரைத்துறையினருக்கு இது கடுமையான சோதனைக்காலம். கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு சுமார் 8 மாதங்கள் பணிகள் எதுவும் இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர்.
குறிப்பாக 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 80 சதவீதம் பேர் வறுமைகோட்டுக்கு கீழ் இருந்துக்கொண்டு அன்றாட வருமானத்தை நம்பி வாழ்பவர்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கம் ஃபெஃப்சியில் அங்கம் வகிக்கவில்லை. மேலும் வெறும் 10 சதவீத உறுப்பினர்களே அமைப்பு சாரா தொழிலாளர்கள் வரையறைக்குள் வருகிறார்கள். எனவே நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு எந்தவித உதவியோ நிவாரணமோ சரியாக கிடைப்பதில்லை. மேலும் நடிகர் சங்கத்துக்கு ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையும் சில நயவஞ்சகர்களால் தடைபட்டு இருக்கிறது. எனவே சங்கத்தின் மூலமாகவும் உதவ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவற்றைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக சிறப்பு அலுவலருக்கு கடிதம் வேண்டுகோள் வைத்ததோடு அதனை நானே தொடங்கி வைத்தேன். மேலும் முன்னணி நடிகர்களுக்கும் கோரிக்கை வைத்தேன். சிறப்பு அலுவலரும் வேண்டுகோள் வைத்தார். இவற்றின் விளைவாக சுமார் 42 லட்சம் ரூபாய்க்கு மேல் சேர்ந்து அதனை சிறப்பு அலுவலரே நேரடியாக உறுப்பினர்களுக்கு வழங்கினார். இப்போது கடந்த ஆண்டை விட மோசமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்த சூழலில் முன்னணி நடிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்... இந்த திடீர் முடக்கத்தால் திரைப்பட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களில் 90 சதவீதம் பேர் அன்றாட சம்பளத்துக்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தான். இவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நான் என்னால் முடிந்த அளவுக்கு தமிழ்நாடு முழுக்க இருக்கும் உறுப்பினர்களுக்கு நேரடியாகவும் அந்த அந்த பகுதிகளில் இருக்கும் நண்பர்கள் மூலமாகவும் உதவிகள் செய்துவருகிறேன். ஆனால் இந்த விஷயத்தில் தங்களது கரங்களும் கோர்த்தால் அவர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என்று நம்புகிறேன்.
அதனால் தான் இந்த கடிதத்தை அனைத்து நடிக, நடிகைகளுக்கும் ஒரு வேண்டுகோளாக எழுதுகிறேன். ஃபெஃப்சி அமைப்புக்கு தாங்கள் உதவிகள் செய்து வருகிறீர்கள். மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ஃபெஃப்சியில் நமது சங்கம் அங்கம் வகிக்கவில்லை.
அங்கம் வகித்து இருந்தால் நமது உறுப்பினர்களுக்கும் அந்த உதவிகள் கிடைத்திருக்கும். எனவே நடிகர் சங்க உறுப்பினர்களும் பயனடையும் வகையில் தனியாக உதவிகள் செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நடிகர் சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி அவர்கள் வீடுகளில் அடுப்பு எரிவதை உறுதிபடுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.
அவர்களது வாழ்வாதாரம் காக்க கையேந்துகிறேன்... உதவிக்கரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்... நன்றி'. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu