பிளஸ் – 1 சேர்க்கைக்கு நுழைவு தேர்வா ? அதிமுக கடும் கண்டனம்

பிளஸ் – 1 சேர்க்கைக்கு நுழைவு தேர்வா ? அதிமுக கடும் கண்டனம்
X

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., தமிழக முதல்வர் ஸ்டாலின், (பைல் படங்கள்)

தமிழகத்தில் பிளஸ்-1 சேர்க்கைக்கு நுழைவு தேர்வு நடத்தப்படுவதாக வந்துள்ள தகவல் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

'நீட் தேர்வு ரத்து' என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்து, ஆட்சிக்கு வந்த பின், 'பிளஸ் 1 சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு' என்ற உத்தரவை பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்து இருப்பதாக வந்திருக்கும் செய்தி, 'சொல்வது ஒன்று செய்வது ஒன்று' என்பதத்தான் நினைவுபடுத்துகிறது.

கொரோனா தாக்கம் கடுமையாக உள்ள இந்தக் காலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் தமிழ்நாடு உட்பட இந்திய நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில்,

முதலமைச்சர் அவர்களே நுழைவுத் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு என்ற

அறிவுரையை பள்ளிக் கல்வி ஆணையர் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்கியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது.

ஏனென்றால், வருமானத்தை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, அரசின் உதவிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில் நுழைவுத் தேர்வு எழுதும் மனநிலையில் மாணவ, மாணவியர் இல்லை.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பதினொன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்தால், அப்பிரிவுடன் தொடர்புடைய கீழ்நிலை வகுப்பு பாடங்களில் இருந்து 50 வினாக்கள் அடங்கிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிடுவது முன்னுக்குப்பின் முரணான செயல்.

இதுவும் ஆங்காங்கே கொரோனா பரவலுக்கு நிச்சயம் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி இந்த அறிவுரைகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், மாணவ, மாணவியர் நலன் கருதி, எவ்வளவு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றனவோ, அதற்கேற்ப கூடுதல் இடங்களை உருவாக்குவதுதான் சரியான வழிமுறை என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு,

'பிளஸ் 1 சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு' என்ற உத்தரவிற்கு எனது கடுமையான எதிர்ப்பினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இந்தப் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, நுழைவுத் தேர்வினை ரத்து செய்து,

விண்ணப்பங்களுக்கு ஏற்ப கூடுதலான இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்து, ஏழை, எளிய மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#இன்ஸ்டன்யூஸ் #பிளஸ் – 1 #சேர்க்கை #நுழைவுதேர்வு #அதிமுக #கண்டனம் #tamilnadu #instanews #AIADMK #plus-1 #11th #admission #entrance #exam #students #parents #class #condemnation #admission


Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil