விலையில் விண்ணை தொட்டது வெள்ளைத்தங்கம்: இந்திய விவசாயிகளுக்கு ஜாக்பாட்

விலையில் விண்ணை தொட்டது வெள்ளைத்தங்கம்:  இந்திய விவசாயிகளுக்கு ஜாக்பாட்
X

தேனி மாவட்ட வியாபாரிகள் சங்க தலைவர் கே.எஸ்.கே.,நடேசன்

இந்திய மார்க்கெட்டிலும், உலக மார்க்கெட்டிலும் வெள்ளைத்தங்கம் என வர்ணிக்கப்படும் பருத்திக்கு இதுவரை இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒரு குவிண்டால் (100 கிலோ) பருத்தி விலை 8500 ரூபாயில் இருந்து 9000 ரூபாய் வரையும், டி.சி.ஹைச்., எனப்படும் நீண்ட இழை பருத்தி ஒரு குவிண்டால் 12,500 ரூபாய் வரையும் விலை உயர்ந்துள்ளது. உலக மார்க்கெட்டிலும், இந்திய மார்க்கெட்டிலும் விலை உயர்ந்துள்ளதால் பருத்தி விவசாயிகளுக்கு இது ஒரு பொற்காலம் என பருத்தி வியாபாரிகள் வர்ணிக்கின்றனர்.

வெள்ளைத்தங்கம் என அழைக்கப்படும் பருத்தி இந்தியாவில் ஆண்டுக்கு 3 கோடியே 50 லட்சம் பேல்கள் (ஒரு பேல் 170 கிலோ) விளைகிறது. உள்நாட்டு தேவை ஆண்டுக்கு 2 கோடியே 75 லட்சம் பேல்கள் மட்டுமே. மீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பருத்தியை பொறுத்தவரை இதுவரை அதிகபட்சம் ஒரு குவிண்டால் 5000ம் ரூபாய் வரை விலை உயர்ந்திருக்கிறது.

இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு கட்டாது என்பதால், மத்திய அரசின் காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மினிமம் சப்போர்ட் பிரைஸ் அதாவது குறைந்தபட்ச ஆதார விலை 6500 ரூபாய் என நிர்ணயித்து இருந்தது. தமிழகம் தவிர பிற மாநிலங்களில் மத்திய அரசின் காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூலம் விவசாயிகளிடம் இருந்து பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையே போதாது என விவசாயிகள் மத்திய அரசிடம் கூறி குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக பருத்தி விலை உலக வரலாற்றிலும், இந்திய வரலாற்றிலும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது ஒரு குவிண்டால் பருத்தி விலை 8500 ரூபாயில் இருந்து 9000ம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் டி.சி.ஹைச்., எனப்படும் நீண்ட இழை பருத்தி விலை குவிண்டால் 12500 ரூபாயினை எட்டி உள்ளது. ஒரு கண்டி(355 கிலோ) பஞ்சு விலை 58 ஆயிரம் ரூபாய் ஆகவும், நீண்ட இழை பஞ்சு விலை ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் ஆகவும் உயர்ந்துள்ளது. (செடியில் இருந்து எடுக்கப்பட்டு கொட்டையுடன் இருப்பது பருத்தி, கொட்டை நீக்கப்பட்டது பஞ்சு)

நீண்ட இழை பருத்தி இந்தியாவில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் அதுவும் மிகவும் குறைந்த அளவே விளைகிறது. ஆனால் பருத்தி விளைச்சல் பரவலாக உள்ளது. தற்போது பருத்திக்கு விலை உயர்ந்துள்ளது தான், விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தேனி மாவட்ட வியாபாரிகள் சங்க தலைவர் கே.எஸ்.கே.,நடேசன் கூறியதாவது: பருத்திக்கு தற்போது கிடைத்துள்ள விலை போல் இந்திய வரலாற்றிலும், உலக வரலாற்றிலும் இதற்கு முன்னர் விலை கிடைத்தது இல்லை. கொரோனா காலத்திற்கு பிந்தையை சூழலில் உலகம் முழுவதும் ஸ்பின்னிங், ஜின்னிங் மில்கள் திறக்கப்பட்டதும், உலகில் உற்பத்தி குறைந்ததும் தான் முக்கிய காரணம். மில்கள் திறக்கப்பட்டதால் தேவை கடுமையாக அதிகரித்துள்ளது. தேவைக்கு ஏற்ப உலக அளவில் உற்பத்தி இல்லை. ஆனால் இந்தியாவில் பருத்தி விளைச்சல் வழக்கம் போல் சீராகவே உள்ளது. இந்த ஆண்டும் 3 கோடியே 50 லட்சம் பேல்கள் பருத்தி விளையும் என மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது.

தற்போது உள்ள விலை நிலவரப்படி இந்திய பருத்தி விவசாயிகளுக்கு வழக்கமான கிடைக்கும் வருவாயினை விட இந்த ஆண்டு இருமடங்கு வருவாய் கிடைக்கும். தற்போது இந்தியாவில் பருத்தி சீசன் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. பிப்ரவரி வரை இந்த சீசன் நீடிக்கும். இருப்பினும் தற்போது கிடைக்கும் விலை குறைய வாய்ப்பு இல்லை. சீசன் நேரம் விலை குறைந்தாலும், மிக, மிக குறைந்த அளவு தான் விலை குறையும் என நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். எனவே பருத்தி விவசாயிகளுக்கு நிச்சயம் ஜாக்பாட் காலம் என்றே நாங்கள் உறுதியாக கூறுகிறோம். ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 குவிண்டால் பருத்தி விலையும். அந்த கணக்குப்படி ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அரசு பருத்தி விவசாயத்தை தமிழகத்தில் ஊக்குவிக்க வேண்டும்.

காரணம் இந்தியாவில் உள்ள மொத்த ஸ்பின்னிங் மில்களின் எண்ணிக்கையில் ஒப்பிடும் போது தமிழகத்தில் தான் 60 சதவீத மில்கள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் பருத்தி விலைச்சல் வெறும் 5 லட்சம் பேல்கள் மட்டுமே. தமிழக ஸ்பின்னிங் மில்களுக்கு தேவையான பருத்தியை குஜராத், மத்திய பிரதசேதம், உத்திரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தே வாங்கி வருகின்றனர். ஒரு லாரியில் அதிகபட்சம் 100 குவிண்டால் கொண்டு வர முடியும். இதனை கொண்டு வர லாரி வாடகை மட்டும் ஒரு லட்சம் ரூபாய் ஆகி விடுகிறது.

ஏற்கனவே பருத்தி விலை உயர்ந்துள்ள நிலையில், போக்குவரத்து செலவுகளும் உயர்ந்து ஸ்பின்னிங் மில்களுக்கு கடும் கொள்முதல் உயர்வு நெருக்கடியினை கொடுத்து வருகின்றன. தற்போது உலக மார்க்கெட்டில் நுால் விலையும் உயர்ந்துள்ளது ஸ்பின்னிங் மில்களுக்கு ஆறுதலாக உள்ளது. தவிர ஜவுளி விலையும் உலக அளவில் உயர்ந்துள்ளது. தமிழக மில்களுக்கு தேவையான பருத்தியில் குறிப்பிட்ட அளவு தமிழகத்தில் விளைவிக்க வேண்டும். இனிமேல் பருத்தி விலை நிச்சயம் குறைய வாய்ப்புகள் இல்லை. எனவே விவசாயிகள் மிகவும் உறுதியான நம்பிக்கையோடு பருத்தி சாகுபடி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்