இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா மனம் மாறியதற்கு காரணம் என்ன?
தீவிரவாதத்தின் வலியை உணர்ந்ததால் தான் அமெரிக்கா, இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்தது.;
2001 செப்டம்பர் 11 என்பது உலகின் புதிய புதிய மாற்றங்களுக்கு வழிவகுத்தது. அதுவரை சொந்தமண்ணில் தீவிரவாதம் என்றால் என்ன? தாக்குதல் என்றால் என்ன? சொந்த மக்களை இழத்தல் என்றால் என்ன? என உணர்ந்திராத அமெரிக்கா இதன் பின்பே இனி உலகில் தீவிரவாதமும் அதை பயிற்றுவிக்கும் அரசுகளும் இருக்க கூடாது என தீர்மானித்தது.
உலகில் தீவிரவாதங்கள் பெருகியது 1950க்கு பின்பே. இங்கே ஒருபக்கம் அமெரிக்காவும் ஒரு பக்கம் சோவியத் ரஷ்யாவுமே இருந்தன. இவர்கள் இல்லாமல் உலகில் ஒரு தீவிரவாதமுமிலலை.
அப்படி தாலிபான்களை இதே அமெரிக்கா தான் 1980களில் சோவியத்துக்கு எதிராக ஏவிற்று. பின் சோவியத் உடைந்த பின்னும் அந்த குட்டிசாத்தான்கள் ஒழியாமல் உருவாக்கிய எஜமானரையே கடிக்கத் துவங்கின.
அதன் பின்பே அமெரிக்கா சுதாரித்தது. அமெரிக்க பாகிஸ்தான் உறவு கசந்தது. அரபு உலகில் அமெரிக்கா வலுவானது. சதாம் உசேன் ஒழிக்கப்பட்டார். இந்த செப்டம்பர் 11ம் நாள் தான் இந்த நூற்றாண்டின் திருப்பம் கொடுத்த நாள். இதிலிருந்து தான் உலக புவிசார் அரசியலே மாறியது, அவ்வகையில் இது ஒரு பெரும் அரசியல் மாற்றத்துக்கு வழிவகுத்த நாள்.
அந்த நாள் அன்று வழக்கம் போலத்தான் அமெரிக்காவில் விடிந்தது. அந்த 19 பேரும் காலை எழுந்து குளித்து பிரார்த்தித்து, டை எல்லாம் கட்டி ஏதோ பன்னாட்டு நிர்வாக கூட்டத்திற்கு செல்வது போலத்தான் சென்றார்கள்.
தமிழக பஸ்டாண்ட் மினிபஸ் போல அடிக்கடி பறக்கும் அமெரிக்க விமானங்களில் ஏறிக்கொண்டார்கள். காலை 8.30 மணிக்கு 4 விமானங்களில் குளறுபடி ஆரம்பித்தது, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தகவல் அறுந்தது.
திடீரென் 9 மணிவாக்கில் உலக வர்த்தக மைய கட்டத்தின் உச்சியில் தீ எழும்பியது ஏதோ விபத்தாக கருதி செய்தியாளர்களும் குவிந்தனர். மீட்பு மற்றும் தீயணைக்கும் படையும் விரைந்தது. அப்பொழுது தான் கண்டார்கள், ஒரு விமானம் மற்றொரு கட்டடத்தில் மோதியது, ஒரு கணம் திகைத்துதான் போனார்கள், புகை எழும்ப எழும்ப திகில் பரவிற்று, இதற்கிடையில் பெண்டகன் மீது ஒரு விமானம் மோதிற்று. உலக மாபெரும் ராணுவத்தின் தலைமையகம், தாங்குமா?
மொத்த தேசமும் முதல்முறையாக கலங்கிற்று. இன்னொரு விமானம் காணவில்லை, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஏதோ புரிந்தது, டெக்ஸாசில் இருந்த அதிபர் புஷ்ஷை அவரசமாக அலாக்காக பிரத்யோக விமானத்தில் ஏற்றி 40,000 அடி உயரத்தில் நிறுத்தினார்கள்.
அதை தவிர எல்லா விமானமும் தரை இறக்கப்பட்டன. நியூ யார்க் முழுக்க புகை. 3000 பேர் உயிரிழந்தனர். அவை உயிர்கள் என்று சொல்வதை விட பொருளாதார மூளைகள். உலகின் பல பாகங்களில் இருந்தும் அமெரிக்கா வாங்கியிருந்த சொத்துக்கள்.
4வது விமானம் எங்கும் தாக்காமல் தரையில் விழுந்தது, அதன் இலக்கு வெள்ளை மாளிகை அல்லது சி.ஐ.ஏ அலுவலகமாக இருக்கலாம். கொஞ்சம் அமைதி திரும்பியது மற்றபடி மகா பீதி, பெரும் பயம். உலகப்போர் முதல் உலகமூலை போர் வரை நடத்திய நாடுதான் அமெரிக்கா. உலகம் முழுவதும் ஆபத்தை ஏற்படுத்திய நாடு தான் அமெரிக்கா.
முதன் முறையாக கலங்கிப்போய் செய்வதறியாது திகைத்து நின்றது. அமெரிக்காவின் முப்படைகளும் முழு வீச்சில் தயாராயின. 40க்கும் மேலான செயற்கை கோள் அமெரிக்காவை கண்காணித்தது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் பத்திரமாக தரையிறக்கப்பட்டார். ஆனால் இந்த கொடூரத்தினை செய்தது யார் என்பது மட்டும் குழப்பம்.
காரணம் உலகிலே அமெரிக்காவிற்கு எதிரிகள் அதிகம். அணுகுண்டு தாக்குதலுக்கு ஜப்பானின் பதிலடி, வடகொரியா திட்டம், இல்லை. இது ஈரானின் கைங்கரியம் , ரஷ்யாவின் பயிற்சி என எல்லா எதிரிகளையும் போட்டு 2 நாள் குழம்பினார்கள்.
ஆனால் எப்பொழுது ஒருவருக்கொருவர் முறைக்கும் சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ ஆகிய இரு அமைப்புக்களும் ஒன்றாக களத்தில் குதித்தன. சத்தியமிட்டு சொன்னது இது அல்கய்தாவின் தாக்குதல், அவர்கள் தான் செய்தார்கள். விடமாட்டோம். ஆனால் அவர்கள் மனதில் ரகசியமாக இருந்த பெயர் இமாத் முக்கினியே.
அந்த ஹிஸ்புல்லா நபர் சாதாரணமானவர் அல்ல, 1980களில் பல இடங்களில் அமெரிக்க விமானங்களை கடத்தி, பல கைதிகளை விடுவித்த சாகசக்காரர். ஜிகாதிகளிட, பெரும் பெயர் பெற்றிருந்தவர். விமானம் கடத்தப்பட்டு தாக்குதல் என்றவுடன் அமெரிக்காவிற்கு ஹிஸ்புல்லாவின் அந்த முகம்தான் அமெரிக்க மேஜையில் விவாதத்திற்கு வந்தது. அவனை கொண்டு தான் விசாரணை தொடங்கினார்கள்.
ஒரு விஷயம் பாராட்டதக்கது. பின்பற்றதக்கதும் கூட அவ்வளவு பெரிய இழப்பிலும் அமெரிக்கர்கள் அமைதி காத்தனர். ஒருவர் கூட ஜார்ஜ்புஷ்ஷை பதவி விலகு என்றோ, ஓடிப்போ என்றோ முணகல் கூட எழுப்பவில்லை. எதிர்கட்சி தலைவர் கிளிண்டன் ஓடி வந்து சொன்னார் ஓசாமாவினை கொல்ல தவறியது நான் தான், மக்களே மன்னித்துக் கொள்ளுங்கள். ஒரு பத்திரிகை கூட , ஒரு மீடியா கூட தவறாக ஒருவார்த்தை எழுதவில்லை. தேச ஒற்றுமை என்றால் என்ன என்பதை அட்டகாசமாக உலகிற்குக் காட்டினார்கள்.
இம்மாதிரி காலங்களில் வதந்தி இறக்கை கட்டி பறக்கும். நல்ல வேளை அப்போது வாட்சாப், பேஸ்புக் உள்ளிட்ட தற்போது உள்ள எந்த சமூக ஊடகமும் இல்லை. பத்திரிகையில் மாய்ந்து மாய்ந்து எழுதுவார்கள்.
ஆனால் அமெரிக்க ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொண்டன. அல்கய்தாவின் பெயர் வந்த பொழுதும் ஒரு கலவரம் கூட நடக்கவில்லை. நிறைய இஸ்லாமியர் வாழும் நாடு தான். ஆனால் அமைதி, அமைதி, சர்வ அமைதி, ஆனால் அடுத்து செய்ய வேண்டிய அவசரவேலைகள் அத்தனையும் செய்தார்கள்.
யானைக்கும் அடிசறுக்கும், கழுகுக்கும் குறி தவறும், நிச்சயமாக பெருத்த அடிதான். ஆனால் கொஞ்சம் கூட அசரவில்லை அமெரிக்கா. பொதுவாக அமெரிக்க அதிபர் உலக விவகாரங்களைத் தானே கவனிப்பார். அவருக்காக பெரும் அறிக்கை தயாரிக்கப்பட்டது, உள்துறை உளவுதுறை எல்லா துறைகளும் சேர்ந்து தயாரித்த ரிப்போர்ட் அது, நன்கு ஆலோசித்து கவனமாக பேசினார் ஜார்ஜ்புஷ்.
தீவிரவாதத்திற்கெதிரான பெரும் போர் தொடங்கி விட்டது. இந்த கொடுமைக்கு காரணமானவர்களுக்கு அமெரிக்க நீதி என்றால் என்ன என்பதை காட்டுவோம். அமெரிக்கா இப்படி கிளம்பும் என்று ஓசாமாவுக்கு தெரியாதா? நிச்சயமாக தெரியும், போர் என்பது பெரும் செலவு பிடிப்பது.
போர் என்ற சகதிக்குள் அமெரிக்க யானையை இழுத்து விடவேண்டும். அதிலே சிக்கி சிக்கி அந்த யானை மடங்கு மட்டும் அடிக்க வேண்டும், ஒரு கட்டத்தில் அரபு அரசியலை விட்டே அமெரிக்கா ஓடவேண்டும். அமெரிக்காவே ஓடிவிட்டால் வேறு யார் எதிரி?
ஆப்கனை விட்டு வெளியேறிய ஓசாமாவினை உலகம் வலைவீசி தேடியது. தனது வீட்டில் வைத்துக் கொண்டே பாகிஸ்தானும் தேடியது. பாகிஸ்தான் வேறு எங்கு தேடும்? இந்திய காஷ்மீரில் இருப்பதாக கதைவிட்டு இந்திய அமைதியை வழக்கம் போல கெடுக்க நினைத்தது. ஆனால் அமெரிக்காவிற்கோ செலவு அதிகமாகிறது.
அல்கய்தா உலகெங்கும் பரவிய இயக்கம், எங்கும் எப்படியும் தாக்கும் வல்லமை கொண்டது. லண்டன், ஸ்பெயின் ரயில் நிலையத்தை தாக்கினார்கள், அமைதியான கிழக்காசியாவின் பாலிதீவில் தாக்கினார்கள், ஆனால் அமெரிக்காவோ ஈராக்கை துவைத்து காயப்போட்டது, ஓசாமவை விட அவர்கள் இன்னொருவரை தேடினார்கள் அது இமாத் முக்னியே,
அமெரிக்க கூற்றுபடி அவர் ஓசாமாவினை விட ஆபத்தானவர், கொடூரமானவர் செப்டம்பர் தாக்குதலுக்கு அவரே மூலம். முந்திகொண்டது மொசாத் ஒரு கார் குண்டுவெடிப்பில் முக்னியே முக்தி அடைந்தார்.
பின்னர் சதாமுக்கு தூக்கு, ஒரு வழியாக பாகிஸ்தானில் ஓசாமாவை கண்டுபிடித்து இரவோடு இரவாக பாகிஸ்தானுக்கு தெரியாமல் தூக்கினாலும் ஐ.எஸ்.ஐ க்கு தெரியாமல் சாத்தியமில்லை.
ரஷ்யாவை அடக்க ஓசாமாவினை வளர்த்து, மாபெரும் பொருட்செலவில் அவரை அழித்து, பின்னாளிலாவது அமெரிக்கா திருந்தியதா என்றால் இல்லை. திருந்தமாட்டார்கள் அதே ஆப்கன் தவறை சிரியாவில் செய்தார்கள்.
எல்லா பெரியநாடுகளும் தீவிரவாதத்தினை வளர்த்து கையை சுட்டுக் கொண்டவைகள் தான். பிந்திரன்வாலே முதல் ஈழபோராளிகள் வரை அப்படித்தான் உருவாக்கபட்டார்கள், அவர்கள் அடியாளாக இருக்கும் வரை பிரச்சினை இல்லை, நாங்களும் ஆளப்போகிறோம் என்பதில்தான் பிரச்சினை தொடங்கி பற்றி எரியும்.
உப்பை தின்றால் தண்ணீரை குடிக்கவேண்டும், பெட்ரோலாக குடித்தால் எப்படி? எரியத்தான் செய்யும். மறுபடியும் அலறுகின்றார்கள். இந்த 2017 செப்டம்பரில் உலகம் பெரும் அச்சத்துடன் நோக்கிய ஐஎஸ்ஐஎஸ் சின் மூலம் யார்?, யாருமல்ல சாட்சாத அமெரிக்காவே தான்
அவர்கள் ஒரு காலமும் திருந்த மாட்டார்கள். திருந்தினால் வல்லரசாக இருக்கவும் மாட்டார்கள். வல்லரசுகளின் ஜாதகம் அப்படி. சதாம் இல்லை, தாலிபான்களும் அட்டகாசமில்லை அரேபியாவில் இனி தீவிரவாதமில்லை என்றபோது ஐ.எஸ் என ஒன்றை உருவாக்கி அதை காட்டி அமர்ந்து கொண்டார்கள்.
பின் ஈரான் ஹமாஸ், ஹவுதி, ஹெஸ்புல்லா என இயக்குவதை சொல்லி நாங்கள் இல்லாவிட்டால் அங்கே அவ்வளவு தான் என அமர்ந்து எண்ணெய் உறிஞ்சுகின்றார்கள், அதுதான் அமெரிக்கா.
செப்டம்பர் 11 சம்பவத்தாலும், ஓசாமாவினை தேடி திரிந்ததாலும் அமெரிக்கா இழந்தது அதிகம். ஆனால் பெற்றது, பெற்றுக் கொண்டிருப்பது மிக அதிகம். அவர்கள் இழந்தது கொஞ்சம், நிச்சயம் பேர்ல் ஹார்பர் தாக்குதலுக்கு பின் சொந்தமண்ணில் சொந்த மக்களை இழந்தது அதில்தான், பெரும் அடிதான்.
ஆனால் ஒவ்வொரு அடிக்கும் பல மில்லியன் டாலர் என திரும்ப எடுத்து விட்டார்கள், இன்னும் எடுப்பார்கள். எல்லாவற்றிலும் வியாபார கணக்கிடும் அமெரிக்கா செப்டம்பர் 11 விவகாரத்திலும் அதை மிக கச்சிதமாக செய்தது. ஒரு விவகாரத்தில் அமெரிக்கா கில்லாடி. 2001 செப்டம்பர் 11க்கு பின்பு இன்றோடு 18 ஆண்டுகள் ஆகிவிட்டது, அதன் பின் ஒரு ஓலைபட்டாசு கூட அமெரிக்காவில் தீவிரவாதிகளால் வெடிக்க வைக்க முடியவில்லை.
அதன் பின் ஈராக், ஆப்கன், லிபியா, சிரியா என பெரும் போரினை அமெரிக்கா நடத்தினாலும் அதை தொட்டுப் பார்க்க யாராலும் முடியவில்லை. அவர்களின் பாதுகாப்பு அப்படி வலுவாக அமைக்கப்பட்டிருகின்றது என்பதுதான் விஷயம்.
இதன் பின்பு தான் அமெரிக்காவின் பார்வை மாறிற்று. இனி இந்தியா போன்ற நாடுகளுடன் நல்லுறவு இல்லாமல் இன்னும் பாக்கிஸ்தானை ஆதரித்து அரசியல் செய்தால் ஆபத்து என உணர்ந்தார்கள். இதன் பின்பே காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக நகர்ந்த அமெரிக்கா இனி இந்தியா ஏதும் செய்யட்டும் என ஒதுங்கிற்று. இதில் தான் காஷ்மீர் இந்தியா வசம் வரவும், வழி பிறந்தது. இந்த இடத்தில் இருந்து தான் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதங்கள் எல்லாம் சரிய தொடங்கின.
இந்தியாவுக்கு எதிராக அவர்கள் ஏவிய சக்திவாய்ந்த ஆயுதம் அவர்களையே திருப்பிதாக்கி பின் இந்தியாவிடம் அவர்கள் மவுனமாக நெருங்கிவந்து தலைகுனிந்து உறவாட வழிவகுத்த நாள் இது. தர்மம் தன்னை மீட்டுகொண்ட தினம் இது. அன்று அமெரிக்கா தாக்கப்பட்டபோது உலகின் முதல் குரலாக வாஜ்பாய் குரல் தான் ஒலித்தது "அமெரிக்காவுக்கு தோள் கொடுப்போம்" என்ற அந்த முதல் குரல்தான் அமெரிக்கர்களை நன்றியோடு நோக்கவைத்தது.
எவ்வளவோ தடைகளை குழப்பங்களை இந்தியாவுக்கு அமெரிக்கா செய்திருந்தாலும் தீவிரவாதம் என்பது நன்றி கெட்ட அர்த்தமில்லா வெறிகொண்ட குட்டிசாத்தான் அது மனிதகுலத்துக்கே கேடு என இந்தியாவின் வாஜ்பாய் சொன்ன போது அத்தேசம் வாஜ்பாயை நோக்கி, நன்றியோடு கரம் குவித்தது.
அந்த புள்ளியில் இருந்து தான் இன்று இந்திய அமெரிக்க உறவுகள் வேறுபரிணாமம் பெற்றிருக்கின்றன, உலகில் எது நடந்தாலும் அது இந்தியாவின் நலனுக்கு, இந்த தர்ம பூமியின் நலனுக்கு என்பது இதுதான். காரணம் இது ஞானகர்ம பூமி, அதை அழிக்க நினைப்பவர்கள் அழிவார்கள், குழப்ப நினைப்பவர்கள் குழம்புவார்கள், அந்த மகா சக்தி இத்தேசத்தை மீண்டும் மீண்டும் ஆச்சரியமாக மீட்டெடுக்கும் என சொன்ன நாளும் இதுதான்.