இந்திய-ரஷ்ய உறவை கண்டு அலறும் அமெரிக்கா?
இந்தியாவின் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளும் இன்று உலகில் கூர்ந்து கவனிக்கப்படும் விஷயமாகிறது.;
ஒரு நாட்டின் பிரதமர் அல்லது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் செல்லும் முதல் நாட்டு பயணம் என்பது அந்த நாட்டின் வருங்கால மூலோபாயம் (strategy) என்று காலகாலமாக உலக அரசியலில் உறுதியாக நம்பப்படும் ஒரு விஷயம்.
அந்த சூழலில், சமீபத்தில் ரஷ்யாவிற்கு அரசு முறை சுற்றுப்பயணமாக இந்திய பிரதமர் மோடி, மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்த பின் சென்ற முதல் நாடு ரஷ்யாவாகும்.
ரஷ்யா சென்றவுடன் அந்த நாட்டின் துணை பிரதமரே நேரில் விமான நிலையம் வந்து ஒரே காரில் அமர்ந்து, மோடியை அழைத்து சென்றது என்பது அந்த நாட்டின் சரித்திரத்தில் அத்தி பூத்தாற்போல நடக்கும் அபூர்வ நிகழ்வு. அடுத்ததாக மோடிக்கு கொடுக்கப்பட்ட ராஜமரியாதை மற்றும் உபசரிப்பு மிக உயர்ந்தது. அது அவருக்கு கொடுக்கப்பட்டது.என்பதை விட இதன் மூலம் மேற்கத்திய நாடுகளுக்கு உணர்த்தப்பட்டது என்பதே சரி.
மேலாக புடின், மோடிக்கு கொடுத்த தனிப்பட்ட விருந்து ஒன்றில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக இருவரும் தனியாக பேசிக்கொண்டது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமல்ல, சீனாவின் வயிற்றிலும் கறைக்கப்பட்ட புளி என்பதை அந்த நாடுகளின் மீடியாக்கள் சொல்லாமல் சொன்னது.
அடுத்த நாள் மிகவும் ரகசியமான அணு ஆராய்ச்சி கூடத்திற்கு மோடியை புடின் அந்த எலெக்ட்ரிக் காரின் சாரதியாக அமர்ந்து அழைத்துச் சென்றது ஒரு மிகப்பெரிய விஷயம். ஏனெனில் எந்த ஒரு நாட்டின் மக்களும் அதை தங்கள் நாட்டின் மரியாதை குறைவாக பார்க்கப்படும் என்பது அரசியல் பார்வையில் அறி(புரி)ந்து கொள்ளப்பட்ட விஷயம் என்பதால். சரி, ஏன் அமெரிக்காவிற்கு அவ்வளவு பயம்.
உக்ரைனின் மீது ரஷ்யா தொடுத்த போர் என்பது நேட்டோ நாடுகளால் அதன் மீது திணிக்கப்பட்ட ஒன்று. அதன் மூலம் மேற்கத்திய நாடுகளை போரில் வீழ்த்தி விடலாம் என்று ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த போரை நீண்ட நாட்கள் இழுத்து, ரஷ்யாவின் பொருளாதாரத்தை வீழ்த்தி, USSR போல ரஷ்யாவை உடைக்கவே சதி செய்தார்கள்.
அதற்காக பல தடைகளையும், அதன் உச்ச பட்சமாக ரஷ்யாவின் வங்கி கணக்குகளையும், அதன் டாலர் வர்த்தகத்தையும் தடை செய்தது அமெரிக்கா. ஆனால் ரஷ்யாவிற்கு அது விரித்த வலையில் தானே வீழ்வோம் என்று எதிர்பார்க்கவில்லை.
ரஷ்யாவின் மிக முக்கிய ஏற்றுமதி என்பது ராணுவ தளவாடங்கள் அல்ல. கச்சா எண்ணெய் மற்றும் மினரல்கள். அதன் பெருமளவு ஏற்றுமதி என்பது ஐரோப்பிய நாடுகளுக்குத்தான் இருந்தது. கச்சா எண்ணெய் ஏற்றுமதி என்பது ராட்சஷ பைப் லைன் மூலம் நடந்தது. இன்னும் சொல்லப்போனால் ஜெர்மனி உற்பட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் எரிசக்திக்காக ரஷ்யாவையே சார்ந்திருந்தது.
ரஷ்யாவிற்கு ஆசிய, ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அது ஆர்டிக் கடலைத் தான் நம்பி இருந்தது. அந்த கடல் பெரும்பாலான காலங்களில் பனியால் உறைந்து கிடப்பதால் அதனால் வியாபார போக்குவரத்து செய்ய முடியாது என்பதால், அதை பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகள் குறைவான விலையில் எரிபொருளை வாங்கி வந்தது.
அதனால் ரஷ்யாவின் எரிபொருள் ஏற்றுமதியை தடை செய்து விட்டால் அதன் வருமானம் படுத்து விடும். நீண்ட உக்ரைன் போரின் மூலம் அதன் பொருளாதாரத்தை எளிதில் சீரழித்து விடலாம் என்று கணக்கு போட்டது. அதன் படி ரஷ்யாவின் எரிபொருள் தடையை மட்டுமல்ல, அமெரிக்க வங்கிகள் மூலம் நடந்த டாலர் வர்த்தகத்தையும், அமெரிக்க வங்கிகளில் இருந்த அதன் 400+ பில்லியன் டாலரையும் முடக்கியது.
மேலும் அந்த நாட்டோடு வர்த்தகம் செய்யும் எந்த நாட்டின் மீதும் பொருளாதார தடை விதிப்பதாக அறிவித்தது. இந்த சூழலில் சீனா உற்பட எல்லா நாடுகளும் அமெரிக்காவுடன் பெரிய வர்த்தகம் செய்வதாலும், அதன் பெருமளவு முதலீடுகள் அமெரிக்காவில் இருந்ததாலும், அதனால் கூட மீற முடியாது என்று உறுதியாக நம்பியது அமெரிக்கா.
மேலும் அதன் மூலம் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை தொடும், அதனால் டாலரை தன் இஷ்டத்திற்கு பிரிண்ட் செய்து கொள்ளவும், ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா தன் நாட்டில் இருந்து அல்லது தனது நாட்டின் கம்பெனிகள் மூலம் மிடில் ஈஸ்டில் இருந்து ஏற்றுமதி செய்வதன் மூலம் கொள்ளை லாபம் பார்க்க திட்டமிட்டது.
அதே சமயம் தனக்கு போட்டியாக உருவெடுத்து வரும் ஐரோப்பிய கூட்டமைப்பின் பொருளாதாரத்தை வீழ்த்துவது என்று ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கத் திட்டமிட்டிருந்தது.
திட்டமிட்டப் படி உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை உலகில் மீண்டும் உயர்ந்தது. உலக பொருளாதாரம் ஸ்தம்பித்தது. இந்தியா உற்பட வளரும் நாடுகளும், ஏழை நாடுகளும் ஏற்கனவே கொரானாவில் இருந்தே மீள முடியாத நிலையில் பெரியளவில் பாதிக்கப்பட்டது.
ஆனால் அப்போது யாரும் எதிர்பாரத வகையில் அமெரிக்காவிற்கு கிடைத்த பெரிய முதல் அடி இந்தியாவிடம் இருந்து வரும் என்று அது சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க ஒரு பெரிய ஒப்பந்தம் போட்ட பின்பு, சீனாவும் நேரடியாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கத் தொடங்கியது. அதுவும் டாலரில் அல்ல, இந்திய ரூபாய் அல்லது யுவான் அல்லது ரூபிளில்.
அதனால் அமெரிக்கா இந்தியா மீது தடை போடுவேன் என்று மிரட்டியது, முடிந்தால் செய்து பார் என்று இந்தியாவிடம் இருந்து பதில் வர, ஆடித்தான் போனது அமெரிக்கா. அதற்கு இன்னொரு காரணம், சீனாவின் எதேச்சிகாரத்தை கட்டுப்படுத்த இந்தியாவால் மட்டுமே முடியும் என்றும், அதனால் இந்தியாவின் உதவி அமெரிக்காவிற்கு அவசியம் என்ற இடியாப்ப சிக்கலும் காரணம்.
இரண்டாம் உலக போருக்கு பிறகு, குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவின் பெரியண்ணனின் பொருளாதார தடை முதல் முதலாக பிசுபிசுத்தது.
இந்த சூழலில் BRICS நாடுகள் டாலருக்கு மாற்று ஒன்றை முன்வைக்க, சவூதி அரேபியா, அமெரிக்காவுடன் கொண்டிருந்த 60 வருட பெட்ரோ டாலர் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. அதனால் ஒவ்வொரு நாடாக உலக வர்த்தகத்திற்கு தங்கள் நாடுகளின் கரன்ஸியை நேரடியாக பயன்படுத்த தொடங்கியது. அதுவே ரஷ்யா-இந்திய வர்த்தகத்திலும் நடந்தது.
அதற்கு இன்னொரு முக்கிய காரணம், ரஷ்யாவின் 400 பில்லியன் டாலரை அமெரிக்கா முடக்கியது போல நமக்கும் நாளை நடக்கலாம் என்று பிற நாடுகள் நம்ப தொடங்கியதால், அதன் டாலர் இருப்புகளை தங்கத்திற்கு மாற்ற துவங்கியது.
ஆனால் இந்திய-ரஷ்ய வர்த்தகத்தில் ரூபாயை பயன்படுத்திய போது, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கும் பொருட்களில் 10% கூட ரஷ்யா இந்தியாவிடம் இருந்த வாங்காததால், ரஷ்யாவிடம் இந்திய ரூபாய்கள் பெருமளவில் முடங்கியது. அதனால் இந்தியாவிடம் இருந்து இறக்குமதியை அதிரிக்கவும், புதிய முதலீடுகளை இந்தியாவில் ரஷ்யா பெருமளவில் செய்யவும் முன்வந்தது.
அதன் பெரிய முதலீடுகள் கச்சா எண்ணெய் சார்ந்தே தொடங்கியது. இன்று எங்கே பார்த்தாலும் NAYARA என்ற பெட்ரோல் பங்க் இருப்பதை பார்க்கலாம். அது ரஷ்ய நிறுவனமான Roseneft மற்றும் இன்னொரு ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து பெரியளவில் முதலீட்டை இந்தியாவில் தொடங்கியது.
அத்தோடு அது நிறுத்திக் கொள்ளவில்லை, வெனிசூலா மீது பல தடைகளை அமெரிக்கா விதித்துள்ளதால், அதனால் எந்த நாடும் கச்சா எண்ணெய் வாங்க முடியாததால், ஏற்கனவே ரஷ்யா அந்த நாட்டுக்கு கொடுத்த கடனுக்கும், இந்த ரஷ்ய நிறுவனங்கள் எண்ணெய்யை இறக்குமதி செய்து நயாரா மூலம் இந்தியாவிலும், வெளி நாடுகளிடமும் விற்க தொடங்கியது.
அதை இந்த அமெரிக்காவின் வர்த்தக தடையால் எதுவும் செய்ய முடியவில்லை. அதாவது ரஷ்யாவின் கடனும் வசூல் மூலம் குறைந்தது, அதே நேரம் ரஷ்யாவின் நிறுவனங்கள் வருமானம் உயந்து அதன் வியாபாரம் மூலம் வளர தொடங்கியது. நாம் வாங்கிய பின்னர் சீனா, மற்ற நாடுகளுக்கும் ரஷ்யா மூலம் வெனிசூலாவிடம் வாங்க தொடங்கியுள்ளது கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில் இந்தியாவின் ராணுவ தேவைகளை நாம் பெருமளவில் ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறோம். அதில் பல முக்கிய ஆயுதங்களின் உற்பத்தியை இந்தியாவில் செய்ய துவங்கி உள்ளது. அதாவது AK 47 துப்பாக்கியின் இந்தியாவின் உடனடி தேவை 6.5 லட்சம் துப்பாக்கிகள். அதன் ஒரு யூனிட்டின் விலை $1100 என்றால், கிட்டத்தட்ட 75 மில்லியன் டாலர் வர்த்தகம்.
உக்ரைன் போரால் ரஷ்யா உற்பத்தி செய்ய முடியவில்லை. இந்தியாவில், அமேதி தொகுதியில், அந்த தொழிற்சாலை தொடங்கி அதன் மேம்பட்ட துப்பாக்கி வகையான AK 203 ஐ குறுகிய காலத்தில் 36000 துப்பாக்கிகளை உற்பத்தி செய்துள்ளது. இன்னும் இரண்டே ஆண்டுகளில் 6.5 லட்சம் துப்பாக்கிகளை இந்திய ராணுவம் பெற்று விடும்.
அது தவிர உலக அளவில் அதற்கான தேவை 2.6 கோடி துப்பாக்கிகளையும் இந்தியாவில் இருந்து அடுத்த ஐந்தாண்டுகளில் உற்பத்தி செய்யவிருக்கிறது. அதன் மூலம் இந்தியாவிற்கு 3 பில்லியன் அன்னிய செலவாணி கிடைக்கும்.
அது தவிர ரஷ்யாவுடன் இணைந்து மேங்கோ எனும் பீரங்கியை துளைக்கும் குண்டுகளை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. இதில் இந்த பீரங்கியில் குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள் போன்றவை போர் வந்தால் திடீரென அதன் உற்பத்தியை பெருக்க வேண்டும், மற்ற காலங்களில் தேவை இருக்காது. அதுபோன்ற மாஸ் உற்பத்தியை சீனா, இந்தியா நாடுகள் செய்யவே அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கவும், உற்பத்தி செய்யவும் முடியும்.
ஆத்ம நிர்பார் மூலம் நடக்கும் இந்த உற்பத்தியால் இந்தியாவிற்கு பெரிய வேலை வாய்ப்பும், ரஷ்யாவிற்கு அதற்கான லைசென்ஸ் காசும் கிடைத்து விடும். முன்பு ரஷ்யா அதுபோன்ற டெக்னாலஜியை கொடுக்க தயங்கிய வேலையில், பிரான்ஸ் நமக்கு கொடுக்க தொடங்கியது. இப்போது உக்ரைன் போரால், ரஷ்யாவும் இந்தியாவிற்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே T90 டேங்குகள், மிக் மற்றும் சுகோய் ரக விமானங்கள், பிரம்மோஸ் ஏவுகணை உற்பட பல முக்கிய ஆயுதங்களை கூட்டு உற்பத்தி மூலம் பெரியளவில் நடக்கிற வேளையில், பெரியளவில் டெக்னாலஜி ட்ரான்ஸ்பர் செய்ய ரஷ்யா இப்போது முன் வந்துள்ளது. அடுத்து S400 கூட்டு உற்பத்தி தொடங்கவும், 6 புதிய அணு நிலையங்களை அமைக்கவும் ஒப்பந்தம் நிறைவேறவுள்ளது.
இந்த சூழலில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் கருங்கடல், சூயஸ் கால்வாய் வழியாக, இந்தியா வந்து சேர 56 நாட்கள் ஆனது. இந்த நிலையில் தஜிகிஸ்தான், கஜக்கிஸ்தான், ஈரான் வழியாக ரயில் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு வந்து, ஈரானில் இந்தியா கட்டமைத்த சபஹர் துறைமுகம் வழியாக இந்திய கொண்டுவர 30+ நட்களே ஆகிறது. இதன் மூலம் 30% போக்குவரத்து செலவும், கால விரயமும் பெருமளவில் குறைகிறது.
அது தவிர கிழக்கு ரஷ்யாவில். பசிபிக் பெருங்கடலில் உள்ள விலாடிவாஸ்டாக் துறைமுகம் வழியாக சென்னைக்கு கச்சா எண்ணெய் கொண்டவர ஒரு பாதை உருவாக்கவும், விலாடிவாட்டாக்கில், இந்திய நிறுவனங்கள் அமைக்க ஒரு பெரியளவிலான நிலப்பரப்பை இந்தியாவிற்கு ஒதுக்கவும் முயற்சிகள் நடக்கிறது.
அதனால் இந்திய நிறுவனங்கள் அங்கேயே கச்சா எண்ணெய்யை ப்ராசஸ் செய்து பெட்ரோல், டீசலாக இந்தியாவிற்கும், நேரடியாக மற்ற நாடுகளுக்கும் இந்த நயாரா, மற்றும் இதர நிறுவனங்கள் மூலம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதை செய்யும்போது, அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனங்களின் உற்பத்தி விலையைவிட இது குறைவாக இருப்பதால், அமெரிக்க நிறுவனங்களே இந்தியா மூலம் ரஷ்ய எண்ணெயயை வாங்க வேண்டிய நிலை வருவதற்கு அதிக காலம் ஆகாது.
அது மட்டுமல்ல, இன்று ரஷ்யாவிடம் இருந்த ஒரு கப்பலில் பொருட்களை கொண்டுவர அமெரிக்க இன்சூரன்ஸ் கம்பெனிகள் அனுமதிப்பதில்லை. பெரிய கப்பல்களை கொண்டிருக்கும் கம்பெனிகள் முன் வருவதில்லை. அதனால் இந்திய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதை முன்னெடுக்கவும், அதற்கான பெரிய கப்பல்களை இந்தியாவில் கட்டவும் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்ய இருக்கிறார்கள். அதன் காரணமாக Cochin Shipyard கம்பெனியின் பங்குகள் ₹1000 சில நாட்களில் உயர்ந்துள்ளது.
மேலும், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் செய்ய வேண்டுமென்றால், டாலர் மூலமே செய்ய முடியும். அதுவும் அமெரிக்காவின் SWIFT மூலம்தான் அது நடக்கும். இப்போது இந்தியாவின் RUPAY மூலம் அதை இந்திய வங்கிகள் முன்னெடுக்கிறது. அதனால் வருங்காலத்தில் டாலர் மூலம் நடக்கின்ற வர்த்தகம் பெரிய சரிவையும், இந்தியாவின் ரூபே வளர்ச்சியையும் சந்திக்கும்.
இத்தனை விஷயங்கள் நடக்கிறது என்பதால்தாம் மேற்கத்திய நாடுகளின் மீடியாக்கள் மோடியும், புடினும் இரண்டு மணி நேரம் சந்திப்பதை கண்டு அலறுகிறது. அதற்கு இதையெல்லாம் காரணமாக காட்ட முடியுமா? வெளியே சொல்ல முடியுமா?
அதனால் உக்ரைன் பிரதமர் செலன்ஸ்கி மூலம் ரத்தக்காட்டேறி புடினை பிரதமர் மோடி கட்டித்ழுவலாமா என்று எமோஷனல் நாடகங்கள் நடக்கிறது. ஆனால் அந்த ஜோக்கர் நடிகனை பிரதமர் ஆக்கியதே அமெரிக்காதான் என்பதை உக்ரைன் மக்கள் புரிந்து கொள்ளாததால், அந்த நாடு போரால் ஏற்பட்ட அழிவின் மூலமும், ஆயுதம் வாங்கிய கடன்கள் மூலமும், 30 ஆண்டுகள் அதன் பொருளாதாரம் பின்னோக்கி போய் விட்டது.
அதற்காக வரும் காலங்களில் உக்ரைன் தன் நாட்டு மக்களுக்கு கோதுமை கொடுக்காவிட்டாலும், கடன் கட்ட அமெரிக்காவிற்கு கொடுத்தாக வேண்டும் என்பதுதான் அதன் தலைவிதி. இப்போது உங்களுக்கு புரியும் மோடி- புடின் சந்திப்பு என்பது அமெரிக்க நாடுகளின் பொருளாதார ஆதிக்கத்திற்கு கொடுத்த சம்மட்டி அடி என்பது..