பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா
ஆப்கனிஸ்தானில் ஐ.எஸ்.பயங்கரவாத முகாம் மீது அமெரிக்கா ட்ரோன் மூலம் இன்று தாக்குதலை நடத்தியது.
ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், வெளிநாட்டவர்களை காப்பாற்றும் விதமாக அமெரிக்க படையினர் காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுக்குள் வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அமெரிக்க படை வீரர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் அமெரிக்க அதிபர் ஆற்றிய உரையில் பயங்கரவாதிகளுக்கு அமெரிக்க ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் என தெரிவித்தார்.
இந்நிலையில் கிழக்கு ஆப்கன் பகுதியில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத முகாம்கள் குறி வைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. பயங்கரவாத தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அமெரிக்க ராணுவம் கூறுகையில், இஸ்லாமிய குழுவின் ஆப்கானிய கிளையின் முக்கிய நபர் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஆளில்லா விமானத் தாக்குதல் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் நடந்தது. பொதுமக்களின் உயிர் சேதம் எதுவும் இல்லை. அடுத்த 48 மணி நேரத்தில் வெளிநாட்டவர்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற ஏற்பாடு செய்து வருகிறோம். ஐஎஸ்-ன் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் காபூலுக்கு கிழக்கே உள்ள மாகாணத்தில் பதுங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. எனவே காபூல் விமான நிலையம் அருகே யாரும் வர வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளது