இன்று உலக அகதிகள் தினம்

உலகில் போர், வன்முறை, வறுமை, வேலை இழப்பால் உடமைகள், உரிமைகள், உறவுகள், இருப்பிடம் இழந்தவர்கள் அகதிகளாகின்றனர்.;

Update: 2023-06-20 03:45 GMT

பைல் படம்

உலகில் போர், வன்முறை, வறுமை, வேலை இழப்பால் உடமைகள், உரிமைகள், உறவுகள், இருப்பிடம் இழந்தவர்கள் அகதிகளாகின்றனர் இவ்வாறு பாதிக்கப்பட்டு, அச்சுறுத்தலில் வாழ்ந்து வரும், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் ஜூன் 20ம் தேதி, உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவர்களுக்கு உள்ள உரிமைகளை, திரும்ப அவர்களுக்கு வழங்க வேண்டும். அவர்களும் சமூகத்தில் மற்றவர்களைப் போல நடத்தப்பட வேண்டும் என்பதை அகதிகள்தினம் வலியுறுத்துகிறது.

2011ம் ஆண்டு கணக்கின் படி, உலகளவில் 1 கோடியே 52 லட்சம் பேர் அகதிகளாக வாழ்கின்றனர் என, யூ.என்.எச்.ஆர்.சி., ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டவர்கள் பலர். இவ்வாறு அகதிகளாக உள்ளவர்களுக்கு, அந்தந்த நாடுகள் சிறப்பு திட்டங்கள் மூலம், மறுவாழ்வு அளிக்க வேண்டும். அகதிகள் சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என யூ.என்.எச்.ஆர்.சி., வலியுறுத்துகிறது.

ஒவ்வொரு முறை நாம் கண் சிமிட்டும் போதும் அதாவது 4.1 செகண்டுகளுக்கு ஒருமுறை ஒரு அகதி தற்போது உருவாகி வருவதாகத் திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகில் அதிக அகதிகளைத் தோற்றுவிக்கும் நாடாக கடந்த 32 வருடங்களாக ஆப்கானிஸ்தான் விளங்கி வருகின்றது. இதில் 95% வீதமான ஆப்கான் அகதிகள் ஈரானிலும் பாகிஸ்தானிலும் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

பிறந்து வளர்ந்த தேசத்தை விட்டு, பஞ்சத்தில் அடிபட்டு, தஞ்சம் அடைய இடம் தேடி, அகதிகள் என்ற முத்திரையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அவலம். முகாம்களில், முகம் தெரியாமல், முகவரி தொலைத்து ஏங்கி தவிக்கும் உள்ளங்கள். வேற்று நாட்டவர்கள் என்ற கட்டுப்பாட்டில், திறந்த வெளியில் கைதிகளாக சிறைப்படுத்தப்படும் கொடுமை.

துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்ததால் நிம்மதி இழந்த இவர்கள், நாடு கடத்தப்பட்டவர்கள் அல்ல. நலம் நாடி வந்தவர்கள். வன்முறையால் விரட்டப்பட்டவர்கள். போரில் உயிர் பிழைத்து, சொந்த நாட்டில் இருண்ட வாழ்க்கை வாழ்ந்து, அகதியாய் வந்த நாட்டிலும் உரிமைகள் இல்லை. என்றாவது ஒரு நாள் விடியும் என்ற நம்பிக்கையில் இவர்களது வாழ்க்கை, காலத்தின் போக்கில் கரைந்து கொண்டிருக்கிறது.

Tags:    

Similar News