சூப்பர் செமி கண்டெக்டர்ஸ்...கோர்த்த இந்தியா- அமெரிக்கா
பிரதமர் மோடி அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு செனட் சபையில் பேசிய போதே பலத்த ஆரவாரம் எழுந்தது
பிரதமரின் அமெரிக்க பயணத்தின்போது ராணுவ சாதனங்கள் விமான வர்த்தக வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பு சம்மந்தமான வரையறைகள் என பலதுறைகளிலும் இரு தரப்பினரும் கையெழுத்து இட்டனர்.
அதில் மிக முக்கியமானது பாகிஸ்தான் தொடர்பானது என்கிறார்கள். கிட்டதட்ட முப்பத்தைந்து ஆண்டு கால வரலாற்று பின்னணி கொண்ட சமாச்சாரம் இது. பிரதமராக இருந்த இந்திரா காந்தி தலைமையில் நம் இந்திய அரசின் போது ஏற்பட்ட ராஜாங்க சிக்கலை தீர்க்க இந்த நகர்வும் ஒப்பந்தம் எல்லாம் உதவப்போகிறது என்கிறார்கள். ஆசிய துணைக் கண்டத்தில் மிகப் பெரிய சக்தியாக உள்ள நம் இந்திய தேசத்தின் மீது அமெரிக்காவிற்கு எப்போதும் ஒரு கண் உண்டு.
அமெரிக்கா உடனான வர்த்தக உறவு நம் இந்திய தேசத்தினை இந்த பிராந்தியத்தில் பலப்படுத்தும். வளப்படுத்தும். அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கான உலக இயக்கம். வர்த்தகம். அனைத்துமே இந்த பிராந்தியத்தை சார்ந்தே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதை நோக்கி இந்தியா வேகமாக நகர ஆரம்பித்திருக்கிறது. சூசகமாக நம் இந்திய பிரதமரும் இதனை அடிக்கோடுடிட்டு காட்டினார் AI என்று. அமெரிக்கா -- இந்தியா என அரசியல் அரசாங்க ரீதியில் அறியப்பட்டாலும் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்ப பண்புகளை பகிர்ந்து கொள்ள கட்டமைக்கப்பட்ட சிக்கலான நானோ டெக்னாலஜி பண்புகளைக் கொண்ட சூப்பர் செமி கண்டக்டர்ஸ் உற்பத்தியில் கை கோர்த்து இருக்கிறார்கள். அமெரிக்கா ஏற்கெனவே சிப் ஃப்போர் நாடுகளை இனங்கண்டு கூட்டணி அமைத்து இயங்கிக் கொண்டு இருக்கிறது.
அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான், மற்றும் தைவான் என நாடுகளுடன் கூட்டணி அமைத்து இயங்கிய நிலையில் இன்று தைவான் இடத்தில் இந்தியாவை வைத்துப் பார்க்க பிரம்ம பிரயத்தனங்களை செய்து கொண்டு வருகிறார்கள். இதன் பொருட்டே தைவான் விஷயத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அங்கு போய் அறிவித்து விட்டு வந்தார் ஆன்டனி பிளிக்கன். அமெரிக்கா சீனாவை தொழில்நுட்ப ரீதியாக வெற்றி கொள்ள அசுரத்தனமான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது. சீனா அவர்களை பதம் பார்த்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை அவர்களால்.
சரி இந்த அமெரிக்க சுற்றுப்பயணத்தில் நமக்கு பெரிய அளவில் லாபம் இல்லையா என்றால் அதன் பின்னணியில் மிகப் பெரிய சூட்சுமமான சமாச்சாரம் இருக்கிறது. அமெரிக்காவிற்கு எப்படி சீனாவை வெற்றி கொள்ள வேண்டும் என்கிற நிர்பந்தம் இருக்கிறதோ அதுபோலவே நமக்கு அரசியல் ரீதியாக பாகிஸ்தான் பிரச்சினையை தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது.
பாகிஸ்தானை திரை மறைவில் பலப்படுத்தி வந்த நாடுகளில் முதன்மையான இடத்தில் இருப்பது அமெரிக்கா. ராணுவ ஆயுத தளவாடங்களை தங்கு தடையின்றி வழங்கி கொம்பு சீவிக் கொண்டே வந்திருக்கிறார்கள். அவர்கள் நோக்கம் நம் இந்தியா மட்டுமே அல்லவா? தெற்காசிய நாடுகளில் தங்கள் இருப்பை நிலை நிறுத்தவும், ரஷ்யாவிற்கு தங்கள் பலத்தை நிரூபிக்கவும் அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் தேவைப்பட்டது, தேவைப்படுகிறது.
இந்த இடத்தில் தான் இந்தியா தனது ராஜதந்திர நகர்வுகளை வெகு நுட்பமாக செய்திருக்கிறது. அமெரிக்கா உடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்தி பாகிஸ்தான் விஷயத்தில் இருந்து முழுதாக அவர்களை அந்த பிராந்தியத்தில் இருந்து அகற்றப் பார்க்கிறது. கிட்டத்தட்ட அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் நம்மவர்கள். போதாக்குறைக்கு அரபு உலக தேசங்களில் தங்களின் நிலைப்பாட்டை எடுத்துச் சொன்னவர்கள் இன்று இஸ்லாமிய தேசங்களிலும் இது குறித்து விரிவாக விளக்கிச் சொல்லியிருக்கிறார்கள்.
நாளையே பாகிஸ்தானுக்கு ஒன்று என்றால் இவர்கள் யாரும் வரமாட்டார்கள் என்பது எத்தனை பெரிய சமாச்சாரம்? எத்தனை சூட்சுமமான அரசியல் சதுரங்க காய் நகர்த்தல். முஷ்டித் தட்டி சீனா வந்தால் அதன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என அனைத்தும் தயார் நிலையில் நம் இந்திய தேசம் வைத்திருக்கிறது. எத்தனை தூரம் சாதுர்யமானது என்கிறார்கள்.
பாகிஸ்தான் வசம் உள்ள அணு ஆயுதங்களுக்கு அமெரிக்கா பொறுப்பு என்பது போன்ற திட்ட வரையறை இருப்பதாகவும் அதன் அடிப்படையிலேயே நம் இந்திய பிரதமர் அமெரிக்க சுற்றுப்பயண நேரத்தில் ஆண்டனி பிளிக்கன் பெய்ஜிங் வந்து தைவான் சமாச்சாரத்தை சொல்லி விட்டு சென்றதாக இந்த முடிச்சை அவிழ்க்கிறார்கள். கிட்டத்தட்ட இவை அனைத்தும் பிரமாதமாக பொருந்திப் போகிறது என்கிறார்கள்.
கடனில் மூழ்கி தத்தளிக்கும் பாகிஸ்தானுக்கு சாப விமோசனம் அளித்து நீண்ட கால அரசியல் தீர்வை நோக்கி இந்தியா நகர்த்த இருக்கிறது. எகத்தாளம் பேசி சீனா வருவதற்கு வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஏகடியம் பேசிக் கொண்டு இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களும் பாகிஸ்தானுக்கு ஆதரவு கரம் நீட்டிடப் போவதில்லை,இம்முறை. காரணம் மக்கள் அங்கு பட்டினியில் மடிந்து கொண்டு இருக்கிறார்கள்.
சீனாவிற்கு இது செலவு பிடிக்கும் வேலை. பாகிஸ்தானை பிடித்துத் தொங்கிக் கொண்டு இருப்பது. இரண்டாவது அமெரிக்க சீண்டல்கள் தன் பிராந்தியத்தில் தற்போதைக்கு இருக்காது என்பது ஒரு ஆறுதல். அமெரிக்காவிற்கு ஆசிய கண்டத்தில் மிகப் பெரிய சக்தியாக வளர்ந்து வரும் இந்தியாவின் துணை அதற்கு முக்கியமானதாக இருக்கும். ரஷ்யா மீதான அக்கறையை சிறிது காலத்திற்கு தள்ளிப் போடலாம். பாகிஸ்தானுக்குப் படி அளந்து காபந்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தனது வலுவிழந்த பொருளாதார நிலை அதற்கு இடம் கொடுக்காது என்பதை அமெரிக்கா நன்றாக உணர்ந்து இருக்கிறது.
நம் இந்திய தேசத்திற்கு மிகப்பெரிய அளவிலான சதுரங்க அரசியல் சமாச்சாரம் இது. தனது சாதுர்யமான காய் நகர்த்தல் மூலம் நீண்ட காலமாக தொடர்ந்து வரும் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும். பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் காஷ்மீர் மட்டுமல்ல ஒட்டுமொத்த அந்த பிராந்தியத்திற்கும் தீர்வு காண முடியும் என்கிறார்கள். ஒரு வேளை சீனா தனது இல்லாத மூக்கை உள்ளே நுழைத்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பது இது வரை இதனை படித்து வந்தவர்களுக்கு மிக நன்றாகவே புரிந்திருக்கும்.
பாகிஸ்தானை முன்னிட்டு மட்டுமே நாம் ரஷ்யாவை விட்டு நகர்ந்து அமெரிக்கா பக்கம் சாய்ந்தது போன்ற தோற்றத்தை இது உண்டு பண்ணினாலும் இந்தியா தனது ராஜதந்திர நகர்வுகள் மூலம் இலங்கை மற்றும் தனது வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் ஊடாக மியான்மர் வரை அரசியல் தீர்வு காண முயல்கிறது.
அமெரிக்கா உடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்தி அதன் பின்புலத்தில் சீனாவை எதிர் கொள்ள முயலுகிறது. சீனாவை வெற்றி கொண்டே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்து திரிந்து வேலை பார்த்து வரும் அமெரிக்காவிற்கு அவர்கள் எதிர்ப்பார்ப்பதை இந்தியா பூர்த்தி செய்யும் வகையிலும் அதே சமயத்தில் இந்த பிராந்தியத்தில் இருந்து முழுதாக அகற்றிடவும் வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறார்கள் நம்மவர்கள்.
This is an era for diplomatic move and not for a war என்று வெறும் வாயில் நம் இந்திய பிரதமர் அமெரிக்க செனட் சபையில் உரையாற்றிடவில்லை. அதன் அர்த்தம் இப்போது புரிய ஆரம்பித்திருக்கும். அந்த சொல்லாடலில் அர்த்தம் சாதாரணமாக தோன்றினாலும் அதன் ஆழம், மிகப்பெரியது. மதி நுட்பம் வாய்ந்தது. சாணக்கிய தேசம் என்பதை நாளை இந்த நகர்வு எடுத்துச் சொல்லும்.