அமெரிக்க ஆயுதங்களால் திணறிவரும் ரஷ்யா..!
உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா கொடுத்த நவீனரக ஆயுதங்கள் ரஷ்ய ராணுவத்தை சிதறடித்து வருகின்றன.;
உக்ரைன் யுத்தம் இரு பக்கமும் இழப்புத்தான் சந்தேகமில்லை. உயிரழப்புக்கள் அதிகம். ஆனால் அங்கே நடக்கும் ஆயுத பரிமாற்றங்கள் அமெரிக்கா எனும் தேசம் எந்த அளவு ஆயுத தயாரிப்பில் முன்னேறி இருக்கின்றது. ரஷ்யா எந்த அளவு பின்னடைந்திருக்கின்றது என்பதை காட்டுகின்றது. இயற்கை வளங்கள் நிரம்பியிருந்தால் விஞ்ஞானத்தால் பெரும் பணம் சாத்தியம் என கண்டு கொண்ட நாடு அமெரிக்கா. அதுவும் ஆயுத உற்பத்தி பெரும் லாபம் என முதலில் சொன்னவர்கள் அமெரிக்கர்கள் தான்.
அவர்களின் போட்டியாக எழுந்த நாடுகள் 1940களில் ஜெர்மனி, ஜப்பான் போன்றவை அதனை முடக்கி தங்கள் காலடியில் வைத்து கொண்டார்கள். அதன்பின் பெரும் சவாலாக எழுந்த நாடு சோவியத் யூனியன். ஜெர்மானிய விஞ்ஞானிகளை பங்குபோட்ட இந்த இரு நாடுகளும் மிகபெரிய ஆயுதங்களை வகை வகையாக செய்தன. 1950 முதல் 1980 வரை சோவியத்தின் ஆயுதங்கள் வலுவாக இருந்தன. அமெரிக்காவினை விட அவர்களிடம் தான் ஆயுதமும் பலமும் அன்று அதிகம்.
இதனால் கடைசிவரை அவர்களுடன் நேருக்கு நேர் அமெரிக்கா போரிடவில்லை. மாறாக அரேபியாவில் இஸ்ரேல் ஊடாக தங்கள் ஆயுதங்களை பரிசீலித்தார்கள், வியட்நாமில் இன்னும் பல இடங்களில் பரிசீலித்தார்கள். பல திருத்தங்களை செய்தார்கள். 1980க்கு பின் சோவியத்தின் பொருளாதாரம் தள்ளாட ஆரம்பித்தது ரஷ்யர்கள் ஆயுத மேம்பாட்டில் கொஞ்சம் பின் தங்கினார்கள். எனினும் பழைய தொழில்நுட்பம் இருந்தது.
இந்த இடத்தில் தான் போர் உத்திகளையே மாற்றியது அமெரிக்கா. பெரும் படையும் பெரும் ஆயுதம் தான் வெற்றி கொடுக்கும் என்பது தான் சோவியத் ராணுவத்தின் வியூகமாக இருந்தது. ஆனால் அமெரிக்கா அதை தலைகீழாக்கியது. மிகச்சிறிய குழு நவீன ஆயுதம் மூலம் பெரும் படைகளை விரட்டுவது சாத்தியம் என்று நிரூபித்தது. அதைத்தான் ஆப்கனில் செய்தார்கள் ஏராளமான தீவிரவாத குழுக்களை உருவாக்கி ஆப்கானில் கால்வைத்த ரஷ்யாவினை ஓட அடித்தார்கள்.
அதேதான் இலங்கையில் நடந்தது, ரஷ்ய ஆயுதங்களோடு இலங்கையில் கால்வைத்த இந்திய ராணுவம் மிகச்சிறிய இயக்கத்திடம் அடிவாங்கியது. இந்திய ராணுவத்திடம் இல்லாத பல நவீன தொடர்பு சாதனம் தாக்குதல் சாதனம் அப்போது விடுதலைப்புலிகளிடம் இருந்தது. இதை அறிந்து இந்திய ராணுவமே திகைத்தது, அவர்கள் ஆயுதம் மிக நவீனமானது என அலறியது. இந்தியா ரஷ்யாவின் முகாமில் இருந்து கொண்டு சென்ற ஆயுதங்கள் அங்கு தோற்றன. இதன்பின் சோவியத் உடைந்து ரஷ்யா உருவானது. பின் ஏகப்பட்ட குழப்பம் வந்தது. ரஷ்யர்கள் பின்னடைவை சந்தித்தார்கள்.
இந்த இடைப்பட்ட காலத்தில் அமெரிக்கா பல போர்களை நடத்தியது. வளைகுடா உள்ளிட்ட இடங்களில் ஆப்கனில் தன் பல சோதனைகளை செய்து வகை வகையாக சோதித்து எல்லா ரக ஆயுதங்களிலும் உச்சம் தொட்டது. ரஷ்யா இங்கே சறுக்கியது. அமெரிக்கா 2011ல் பெரும் இடத்துக்கு வந்தபோது ரஷ்யா 1980களிலே நின்று கொண்டது. ரஷ்யாவின் எல்லா நுட்பங்களும் தோற்க தொடங்கின, அணுசக்தி நீர்மூழ்கி குர்ஸ்க் 150 வீரர்களுடன் கடலில் சமாதியான போது ரஷ்ய பராமரிப்பு சரியில்லை எனும் செய்திகள் வரத்தொடங்கின.
2011ம் ஆண்டு வாக்கில் அதிபர் புட்டின் ரஷ்ய ராணுவத்தை பலமாக்கினார், அவர்களின் ஏவுகனை சாதனம் எஸ் 400 என வந்தது. ஹைப்பர் சோனிக் ஏவுகணை வந்தது. இன்னும் பல ஆயுதங்கள் வந்தன. ஆனால் இவற்றின் பாகங்கள் பல ரஷ்ய உற்பத்தி அல்ல இறக்குமதி செய்தது என்பதுதான் பலவீனம். ரஷ்யா 2011க்குபின் பழைய தொழில்நுட்பங்களை மேம்படுத்தியது. ஆனால் பல நுணுக்கமான விஷயங்களில் கோட்டை விட்டது. போரையே தொழிலாக கொண்ட அமெரிக்கா அப்படி அல்ல. அது மிக கவனமாக பல நுணுக்கமான ஆயுதங்களை செய்தது. அதுதான் இப்போது உக்ரைன் யுத்த களத்தில் நின்று பேசுகின்றது.
ரஷ்யா பெற்ற முதல் அதிர்ச்சி அமெரிக்க ஜாவலின் ஏவுகணைகள், ஆயிரகணக்கான ரஷ்ய டாங்கிகளின் அணிவகுப்பை சுமார் 100 பேர் கொண்ட உக்ரைன்படை தோளில் வைத்து இயக்கும் அந்த ஜாவலின் ரக ஏவுகணைகளால் தடுத்து சிதறடித்த போது ரஷ்யா திகைத்தது.
அந்த ஆயுதங்கள் கவனம் பெற்றன. ரஷ்ய டாங்கிபடை பின்வாங்கிற்று. அடுத்து ஹைமாஸ் எனும் பலகுழல் ராக்கெட்டுகளை அமெரிக்கா கொடுத்தது, ஏகபட்ட ஏவுகணைகளை துல்லியமாக வீசும் அவைதான் கெர்சானில் இருந்து ரஷ்யாவினை விரட்டின.
அமெரிக்கா கொடுத்த இன்னொரு முக்கிய ஆயுதம் வழிகாட்டும் கருவி. ஒரு விமானத்தில் இருந்து குண்டை கீழே சட்டென வீசுவதற்கும் இந்த கருவினையினை பொருத்தி வீசுவதற்கும் வித்தியாசம் உண்டு. இது சரியாக செல்லும் வழிகாட்டி சென்று வெடிக்கும்.
இன்னும் ஆளில்லா விமானம், ஆளில்லா படகு என சாகசம் செய்தன அமெரிக்க ஆயுதங்கள். ரஷ்யா இவ்வகை ஆயுதங்கள் இல்லாமல் ஈரானிடம் கையேந்தியது. ரஷ்யா யானைக்கு யானை எனும் வகையில் விமானம் ஏவுகணை என வைத்திருந்த நாடு. ஆனால் செந்நாய் கூட்டம் யானை காலுக்குள் ஓடி, தேனீ கூட்டம் காதுக்குள் நுழைந்தால் யானை காலி எனும் வகையில், சிறிய ஆனால் வலுவான ஆயுதங்களால் அமெரிக்கா திணறடிக்கின்றது.
இந்த வரிசையில் இப்போது ரிமோட் கன்னிவெடி சாதனங்களை கொடுத்திருக்கின்றது. இதுதான் இப்போது ரஷ்யாவிற்கு பெரும் மிரட்டலாக உள்ளது. இந்த ஆயுதத்தை ராக்கெட்டாக வீசினால் அது எதிரியின் தலைக்கு மேல் விழுந்து பின்னால் சென்று வீழும்.
இதனால் என்ன ஆபத்து என்றால் அப்போது ராக்கெட்டில் இருக்கும் கன்னிவெடிகள் நிலத்தில் புதையும் இப்போது எதிரி படைக்கு உணவு, எரிபொருள் ஆயுத சப்ளைக்கு வரும் வாகனம் கன்னிவெடியில் சிக்கி சிதறும். அப்படியே எதிரிபடை பின்வாங்கினால் அவர்களும் கன்னி வெடியில் சிக்கி மடிவார்கள்.
இந்த வியூகத்தில் இப்போது ரஷ்யபடை சில இடங்களில் சிக்கியிருக்கின்றது, முதலில் உக்ரைனிய வீரர்கள் இப்படி ராக்கெட் வீசியபோது "குறி தவறி சுடுகின்றார்கள், நம் தலைக்கு மேல் எல்லாம் பறக்கின்றது" என தமாஷ் செய்த ரஷ்ய ராணுவம் இப்போது விபரீதம் கண்டு திகைக்கின்றது
அவர்களின் மூன்று பக்கம் இப்படி கண்ணிவெடி நடுவில் ரஷ்ய ராணுவம் என சிக்கி கொண்டுவிட்டார்கள், இவர்களுக்கு எந்த வழங்கலுமில்லை,ஒரே தீர்வு உக்ரைன் ராணுவத்திடம் சரணடைவது மட்டுமே. இவர்களை மீட்க ரஷ்ய படைகள் வந்தாலும் கன்னிவெடியில் சிக்கும்.
இப்படி ரஷ்ய படைகளை முடக்கி பின் தங்கள் பிரத்யோக கருவிமூலம் கண்ணிவெடிகளை அகற்றி மெல்ல மெல்ல முன்னேறுகின்றது உக்ரைன் படை. இங்கே அமெரிக்கா தன் எப் 35 விமானங்களை இறக்கவில்லை. தன் நவீன ஏவுகணை டாங்கி என எதனையும் இறக்கவில்லை. கொடுத்ததெல்லாம் சிறிய ஆயுதங்கள். ஆனால் அசரவைக்கும் பலமும் ,மிக நுணுக்கமான பொறிமுறையும் கொண்ட ஆயுதங்கள். அமெரிக்க ஆயுதங்கள் நினைத்து பார்க்க முடியாத படி வளர்ந்து நிற்கின்றது, சாதிக்கின்றது. ரஷ்யா காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ற ஆயுதம் செய்யாமல் தடுமாறுகின்றது
அங்கே யுத்தம் என காட்டபடுவது பெரும் ஆயுத விளம்பரம். அதில் அமெரிக்காவின் கை ஓங்கியிருக்கின்றது. இங்கே ஒரே ஒரு நாடு, "இப்படியெல்லாம் ஆயுதம் உண்டா? இப்படியெல்லாம் செய்யுமா, நம்மையும் இப்படி ஒழிப்பார்களா?" என நோட்டும் பேனாவுமாக குறிப்பெடுக்கின்றது அதன் பெயர் சீனா.