மகிந்தா ராஜபக்ச எங்கே? இருப்பிடத்தை மாற்றியதால் பரபரப்பு
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, திரிகோணமலை கடற்படை முகாமில் இருந்து வெளியேறிவிட்டதாக, இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.;
அண்டை நாடான இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகள், பொருளுதவியும் நிதியுதவியும் அளித்து வந்த போதும், சிக்கல் இன்னமும் தீரவில்லை. விண்ணை முட்டும் விலைவாசி காரணமாக, வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.
கடும் எதிர்ப்பலைகள் கிளம்பியதால், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். எனினும், ஆவேசத்தில் போராட்டக்காரர்கள், முக்கிய பிரமுகர்களின் இல்லங்களுக்கு தீ வைக்க தொடங்கினர். இதையடுத்து, தனது அதிகாரபூர்வ மாளிகையில் இருந்து வெளியேறி, குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரில், ராஜபக்ச தப்பிச் சென்றார். மகிந்த ராஜபக்ச, இலங்கையின் திருகோணமலை கடற்படை முகாமில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இச்சூழலில், திரிகோணமலை கடற்படை முகாமில் இருந்து ராஜபக்ச தற்போது வெளியேறிவிட்டதாகவும், இருப்பிடத்தை மாற்றிவிட்ட அவர், கொழும்புக்கு அருகில் தங்கி உள்ளதாகவும் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் நோக்கில் கொழும்பு பகுதியில் ராஜபக்ச மறைந்துள்ளாரா என்று, சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.