நைஜீரிய அரச குடும்பத்து மகனுக்கு கோலாகல திருமணம் :பிரமாண்ட ஏற்பாடுகள்

நைஜீரிய அரச குடும்பத்து வாரிசான யூசூப் புகாரிக்கும் சஹ்ரா நசீர் பேயரோவுக்கும் திருமணம் விமர்சையாக நடந்தது.;

Update: 2021-08-23 09:49 GMT

மணமக்கள் யூசூப் புகாரி, சஹ்ரா நசீர் பேயரோ

நைஜீரிய நாட்டு அரச குடும்பத்து  மகனுக்கும் அந்நாட்டு சமயத் தலைவரின் மகளுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் விமர்சையாகவும் ஆடம்பரமாகவும் நடந்ததால் உலகின் பலரின் பேசுபொருளாகியிருக்கிறது. பல நாடுகளின் தலைவர்களை அழைத்து வர தனி விமானங்கள் பல பிற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மணமக்கள் யூசூப் புகாரி, சஹ்ரா நசீர் பேயரோ

இந்த திருமணத்தை ஒட்டி, வடக்கு நைஜீரிய நகரமான கானோ விமான நிலையத்தின் ஓடுபாதையில் தனி விமானங்கள் வரிசைகட்டி நின்றன. நைஜீரியாவின் பெரும் பணக்காரர்களும், மேற்கு ஆப்பிரிக்க பகுதியை சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் இந்த திருமணத்துக்காக குடும்பத்தினருடன் வந்து சென்றனர்.

யூசூப் புகாரிக்கும் சஹ்ரா நசீர் பேயரோவுக்கும் நடந்த இந்த திருமணம் இந்த ஆண்டு நைஜீரியாவில் நிகழ்ந்த பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக பேசப்பட்டு வருகிறது. கானோ மாநிலத்தில் உள்ள பிச்சி நகர எமிர் அரண்மனையில் நடந்த இந்த திருமணத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

திருமணத்தின்போது.

அதிபர் குடும்பத்துக்கும், அரச குடும்பத்துக்கும் இடையே இப்படி ஒரு திருமண பந்தம் நடப்பது நைஜீரியாவில் முன்னெப்போதும் நடக்காத ஒன்றாகும் என்று அங்குள்ளவர்கள் பேசத்தொடங்கியுள்ளனர். முதன் முதலில் பிரிட்டனின் சர்ரே பல்கலைக்கழகத்தில்தான்  இந்த ஜோடி சந்தித்துக்கொண்டதாக தெரிகிறது.

சனிக்கிழமைதான் மணமகளின் தந்தை நசீர் அடோ பேயரோ பிச்சி நகரின் எமிராக அதிகாரபூர்வமாக முடிசூட்டிக்கொண்டார். அதனால், மணவிழா கொண்டாட்டம் சனிக்கிழமையும் தொடர்ந்தது. நைஜீரியாவின் முக்கியமான இஸ்லாமியத் தலைவர்களில் ஒருவரான நசீர் அடோ பேயரோவின் சகோதரர் கானோ நகரின் எமிராகவும் உள்ளார். ஆனால், புதிதாக திருமணமான ஜோடி அந்த முடிசூட்டு விழாவில் பங்கேற்கவில்லை.

திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள்.

மணமகன் குடும்பத்தார் மணமகள் குடும்பத்தாருக்கு 5 லட்சம் நைரா பணம் அதாவது 1,200 அமெரிக்க டாலருக்கு நிகரான பணத்தை சீர்வரிசையாக தந்தனர். இது வடக்கு நைஜீரியாவில் சராசரியாகத் தரப்படும் சீர்வரிசைப் பணத்தைப் போல 10 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

மணமக்கள் திருமணத்துக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் மணமகளின் தோள்பட்டை தெரிந்ததால் அது சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது மாதிரி ஆடை அணிவது முறையற்றது  என்று சிலர் வாதிட்டனர். வேறு சிலர் மணமகள் அப்படி ஆடை அணிந்ததை ஆதரித்தனர் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News