உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நவராத்தி திருவிழா

இந்துக்களின் நவராத்திரி திருவிழா உலகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.;

Update: 2024-10-04 05:40 GMT

இந்துமதம் உலகம் முழுக்க பரவியிருந்த மதம் என்பதற்கு சான்றுகள் ஏராளமாக உள்ளன. இந்து மத ஆலயங்கள் இன்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் உண்டு. வியட்நாம் முதல் தென் அமெரிக்கா வரை அடிக்கடி பூமிக்கடியில் இருந்து சிவலிங்கம் மீட்கபடுவதும் உண்டு. இந்தோனேஷியாவில் இன்றும் விநாயகர் வழிபாடும் ஆலயங்களும் பிரதானமானவையாக இருக்கின்றன. போலந்து நாட்டில் ஒரு சக்தி பீடம் உண்டு என்பதும் இன்று வரை அவ்விடம் பாதுகாக்கபடுகின்றது என்பதும் ஆச்சர்யமூட்டும் கூடுதல் தகவல்.

கிறிஸ்துவத்துக்கு முந்தைய ஐரோப்பாவிலும், இஸ்லாமிய எழுச்சிக்கு முன்பான அரேபியாவிலும் இந்து தடங்கள் இருந்தன. பின் அவை மாற்றபட்டன. யூதர்களின் வழிபாட்டில் முருகபெருமானின் பல தடங்கள் இருப்பதை கூர்ந்து கவனித்தால் அறியலாம். இன்றும் எகிப்தில் உள்ள மனிதனும் சிம்மமும் கலந்த அந்த பிரதான சிலை நரசிம்ம அவதார குறியீடு என சொல்லும் ஆய்வுகள் சொல்கின்றன.

மேற்குலகில் காலமாற்றத்தாலும் பல வகையான இறுக்கத்தாலும் இந்துமதம் காணாமல் போனாலும் அதன் சுவடுகள் உண்டு, ஆனால் கிழக்காசியாவில் இன்றும் இந்துமத சாயல் அப்படியே உண்டு. கிழக்காசியா முழுக்க பரவி இருந்த இந்துமதம் புத்தனின் காலத்தில் சோதனையினை சந்தித்த பொழுதும் முழுவதும் அழிக்கப்படவில்லை. அதன் வேர்கள் அப்படியே இருந்தன. தூங்கும் ரங்கநாதரின் சிலையின் தலையில் புத்தனை பொருத்தி உறங்கும் புத்தன் என்றார்கள், பிரம்மனின் தலையில் புத்தனை பொருத்தி நான்கு தலை புத்தன் என்றார்கள், இந்த அட்டகாசம் கிழக்காசியா முழுக்க இருந்து வருகிறது. இதெல்லாம் இந்துக்களின் உருவங்களை அவர்கள் புத்தனாக மாற்றியதை சொல்லும் முறைகள். புத்தமதத்துக்கு இப்படி இந்துக்களை மாற்றினார்களே ஒழிய இந்துக்களின் பண்டிகைகளை அவர்களால் மாற்றமுடியவில்லை. அவ்வகையில் இந்துக்களின் எல்லா பண்டிகையும் ஏதோ ஒரு வடிவில் கிழக்காசியாவில் உண்டு.

தாய்லாந்தில் திருப்பாவை படிப்பதும் அப்படித்தான். ஜப்பான் பக்கம் அவர்களின் சரஸ்வதிக்கு விழா நடப்பதும் அப்படித்தான். அவ்வகையில் சீனர்களின் ஒரு பிரிவினர் கொண்டாடும் ஒன்பது ராஜாக்கள் பண்டிகை இப்பொழுது நடக்கின்றது. ஆம், இது அப்படியே நவராத்திரி சாயல் இந்துக்களின் நவராத்திரியின் சாயல் அவர்களிடம் 9 அரச தெய்வங்களாக மாறி கொண்டாடப்படுகின்றது.

இந்துக்களின் நவராத்திரி கொண்டாட்டத்தின் அனைத்து சடங்கு சம்பிரதாயங்களையும் இந்த 9 நாட்களில் சீனர்களும் பின்பற்றுகின்றார்கள். இந்த 9 அரசர்களும் பல வகை அருளை வழங்குவதாக அவர்கள் கொண்டாட்டத்தில் சொல்லப்படுகின்றது. இந்த கொண்டாட்டத்தில் இந்துக்களின் சாயலான விரதமிருத்தல், அலகு குத்துதல் , தீ மிதித்தல் என எல்லாமும் உண்டு. சீனர்களின் ட்ராகன் கூட இந்துக்களின் நாகவழிபாடு தான்.

இந்தியாவில் நவராத்திரி கொண்டாடபடும் நேரம் கிழக்காசியாவில் இந்த 9 ராஜாக்கள் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. அப்படியே ஜப்பானின் சரஸ்வதியான பென்சாய்டானுக்கும் பூஜைகள் நடக்கின்றன. இப்பொழுது இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்திக்கலாம்

கத்தோலிக்க கிறிஸ்தவ மரபில் கன்னிமேரிக்கு "நவநாள்" என விழா கொண்டாடுவார்கள், ஆங்கிலத்தில் கூட அதன் பெயர் "நவனா" அல்லது "நோவனா". நவம் என்றால் ஒன்பது என பொருள், 9 நாட்கள் கன்னிமேரிக்கு நடக்கும் விழா இது.

இந்த விழாதான் தென்னிந்தியாவில் கிறிஸ்தவம் பரவியபொழுது கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நவநாள் என தொடங்கி திருவிழா என்றானது. நவராத்திரியின் வடிவில் தான் அவர்கள் கொண்டாட்டமும் உண்டு. கிறிஸ்தவர்களை மதம் மாற்றினார்களே தவிர சம்பிரதயங்களை, கலாச்சார கொண்டாட்டங்களை அவர்களால் மாற்றமுடியவில்லை. இதனால் அந்த கலாச்சாரப்படி கொண்டாட விட்டு தெய்வத்தை மட்டும் மாற்றிக்கொண்டார்கள். மேல்நாட்டில் ஒரு காலத்தில் அன்னை சக்திக்கு நடந்த நவநாள் விழாவே ரோம் மற்று கிரேக்க மதங்களின் சாயலுக்குள் சென்று பின் கிறிஸ்தவம் மேலோங்கும் பொழுது கன்னிமேரிக்கான நவநாளாக மாறிற்று.

உலகம் முழுக்க இந்துமதம் இருந்தது என்பதற்கும் இந்துக்களின் பண்டிகைகள் எப்படியெல்லாம் திசைமாறி அல்லது மாற்றி கொண்டாடபடுகின்றன என்பதற்கு இவை எல்லாம் சாட்சி. பாரத இந்துமக்கள் நவராத்திரி சிறப்பிக்கும் வேளையில் சீனர்களும் இதர கிழக்காசிய மக்களும் 9 அரசர் திருவிழாவினை கொண்டாடுகின்றார்கள். சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் பாரம்பரியமான தொடர்புகள் உண்டு. தென்னாடுடைய சிவனே போற்றி என கையிலாய மலைக்கு தெற்கே நாம் சொல்லும்பொழுது வடநாட்டுடைய சிவனே போற்றி என அவர்கள் சொல்லிகொண்டேதான் இருந்தார்கள்.

புத்தனின் காலத்தில் குழப்பம் வந்தாலும் பாரம்பரிய ரீதியாக ஒரே பண்டிகையினை இருவரும் வெவ்வேறு பெயரில் கொண்டாடினார்கள். இந்து தெய்வங்கள் அங்கு சிரிக்கும் புத்தா முதல் பல வகைகளுக்கு மாறின. பின்னாளில் கம்யூனிச புரட்சி வந்தாலும் பாரம்பரிய கொண்டாட்டங்களுக்கு அங்கு அனுமதி உண்டு, அப்படித்தான் இந்த 9 ராஜா விழாவும் நடக்கின்றது. எதற்கெடுத்தாலும் ரஷ்யாவை பார், சீனாவை பார் என சொல்லுபவர்கள் சீனாவின் இந்த இந்திய தொடர்பு பாரம்பரியம் பற்றி பேசவே மாட்டார்கள்.

இப்பொழுது தகவல்தொடர்பு பெருகிவிட்ட காலங்களில் இவையெல்லாம் எளிதாக உணரபடுகின்றது. கல்வி, செல்வம் வீரம் என இந்துக்கள் இங்கு முப்பெரும் தேவியிடம் வேண்டிகொண்டிருக்க, கிழக்காசிய மக்கள் கல்வி செல்வம் வீரம் இவற்றின் உட்பிரிவான படிப்பு கலை தொழில் செல்வம் தங்கம் லாபம் வீரம் வியூகம் உடல்நலம் உள்ளிட்ட ஒன்பது வகையான நலனுக்கு வேண்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒன்பது ராஜாக்களுக்கான பீடமும் அலங்காரமும் நவராத்திரி கொலுவினை அப்படியே கண்முன் காட்டுகின்றது. இந்துக்களின் கொலு 9 படிகளை கொண்டதாக அமைந்திருக்கும் அதே படிநிலைதான் அங்கும் அமையபெற்று அந்த கொலுவின் சாயலில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகின்றது. அதே மேடை, அதே பொம்மை, முக்கியமாக அதே மங்களகரமான குங்கும நிற அடையாளம். இந்த உலகம் இந்துமதத்தாலே உருவானது, இந்துமதத்திலே வாழ்ந்தது, ஆங்காங்கே அது காலத்தால் சரிவை கண்டாலும் அதன் சுவடுகளும் அடையாளங்களும் எல்லா இடத்திலும் கலந்திருக்கின்றன, அம்மதமே உலகில் ஆதிமதமாகவும் இன்றும் இந்தியாவின் சொந்தமதமாகவும் விளங்குகின்றது. இந்த மதத்தை காக்கவும் வளர்க்கவும் உலகில் ஒரு நாடும் இல்லை. அதன் சொந்த நாடான இந்தியாவும் இந்து நாடாக இல்லை. இந்தியாவை தவிர அதனை காத்து வளர்க்க இந்த பூமிபந்தில் எந்த இடமும் தகுதியானதுமில்லை. இந்நாடுதான் இந்த பாரம்பரியத்தை மூல மதத்தை பொன்னென்னவும் கண்ணெனவும் தன் சொத்தெனவும் பொக்கிஷமெனவும் காத்துவர கடமை கொண்ட நாடு, உரிமை கொண்ட நாடு. அதனை ஒவ்வொரு இந்துவும் உணர்ந்து பெருமையுடனும் கம்பீரத்துடனும் நவராத்திரியினை கொண்டாடட்டும். 

Tags:    

Similar News