உலகின் நடந்து செல்லக்கூடிய மிக..மிக... நீண்ட பாதை...!
உலகின் மிக நீண்ட நடந்து செல்ல கூடிய பாதை தென் ஆப்பிரிக்க நகரம் கேப் டவுனில் இருந்து ரஷ்ய நாட்டில் மகதன் (Magadan) வரை உள்ளது.;
டிவிக்களில் வெளியாகும் செருப்பு விளம்பரம் ஒன்றில் இரவில் ரசம் சோறு அதிகமாக சாப்பிட்ட இருவர், சாப்பிட்ட பின்னர் பேசிக்கொண்டே நடப்பார்கள். இப்படி நடப்பவர்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் இவர்கள் அண்டார்டிக் பனிப்பிரதேசம் வரை நடந்து செல்வார்கள். அங்கு உடலில் கவச உடை அணிந்து ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருக்கும், அறிவியல் நிபுணர்களை பார்த்ததும் நீண்ட துாரம் நடந்து விட்டோமோ... என பேசிக் கொண்டே திரும்ப நடப்பார்கள்.
இப்படி ஒரு சுவாரஸ்யமான விளம்பரம் வெளியாகி இருக்கும். இதனை பொதுமக்கள் ரசித்து பார்த்தனர். டிவிக்களில் ஹிட் அடித்த விளம்பரங்களில் இதுவும் ஒன்று. இந்த விளம்பரம் உண்மை தான் என்று நெட்டிசன்கள் தற்போது பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதில் உலகின் மிக நீண்ட நடந்து செல்ல கூடிய பாதை தென் ஆப்பிரிக்க நகரம் கேப் டவுனில் இருந்து ரஷ்ய நாட்டில் மகதன் (Magadan) என்ற நகரம் வரை செல்கிறது. இந்த பாதையில் நடந்த முழு தொலைவினையும் கடந்து விடலாம். இதனை கடக்க விமானங்கள் அல்லது படகுகள் தேவையில்லை, பாதையில் பாலங்கள் உள்ளன.
பாதையின் மொத்த தூரம் 22,387 கிமீ. பயண நேரம் 4492 மணிநேரம், இடைவிடாத நடைப்பயணம் சென்றால் 187 நாட்களில் இந்த துாரத்தை கடந்து விடலாம். தினமும் 8 மணி நேரம் மட்டுமே நடந்தால், இந்த துாரத்தை கடக்க 561 நாட்கள் வரை ஆகும். வழியில், 17 நாடுகள் உள்ளன.
மொத்தம் 6 நேர மண்டலங்களை நாம் கடந்து செல்வோம். இந்த ஒரு நடைபாதை பயணித்திலேயே ஒரு ஆண்டின் அனைத்து பருவ நிலைகளையும் பார்த்து அனுபவிக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். வாங்க.... மெல்ல நடப்போம். ஆனால் உண்மையில் நாம் சில நாட்கள் ஓய்வெடுத்து, தங்கி உறங்கி, சுற்றிப்பார்த்து நடக்க வேண்டியிருக்கும். அப்படி பயணித்தால் குறைந்தது இந்த பயண துாரத்தை நடந்து கடக்க மட்டும் 3 ஆண்டுகள் வரை ஆகும் என சுற்றுலா ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.