காலிஸ்தான் தீவிரவாதத்தை பொறுத்துக் கொள்ள மாட்டேன் : பிரதமர் ரிஷி சுனக் உறுதி
இந்தியா வந்த இங்கிலாந்து பிரதமர் காலிஸ்தான் தீவிரவாதத்தை இந்தியாவுடன் இணைந்து முறியடிப்போம் என்று உறுதி அளித்துள்ளார்.;
இங்கிலாந்தில் காலிஸ்தான் தீவிரவாத செயல்பாடுகளை பொறுத்துக் கொள்ள மாட்டேன், என்றும், காலிஸ்தான் ஆதரவாளர்களை சமாளிக்க இந்திய அரசுடன் இணைந்து செயல்படுவதாகவும் அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த மார்ச் மாதம் தாக்குதல் நடத்தி தேசியக் கொடியை பறித்தனர். இச்சம்பவம் தொடர்பாக இங்கிலாந்திடம் கண்டனம் தெரிவித்த இந்தியா, காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது.
இந்நிலையில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனது மனைவி அக் ஷதா மூர்த்தியுடன் டெல்லி வந்தார். அவரிடம் காலிஸ்தான் ஆதரவாளர்களின் செயல் பாடு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த ரிஷி சுனக் கூறியதாவது:
இங்கிலாந்தில் தீவிரவாத செயல்பாடுகள் அல்லது வன்முறையை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால்தான் காலிஸ்தான் ஆதரவாளர்களை சமாளிக்க நாங்கள் இந்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறோம்.
காலிஸ்தான் ஆதரவாளர்களின் செயல்கள் சரியல்ல. இது தொடர்பாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சர், இந்தியா வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். காலிஸ்தான் தீவிரவாதத்தை ஒழிக்க நாங்கள் உளவுத் தகவல்களை பகிர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இங்கிலாந்தில் தீவிரவாத செயலை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். இவ்வாறு ரிஷி சுனக் கூறினார்.