அமெரிக்க அதிபர் தேர்தல் : கமலாஹாரிஸ் முன்னிலை..!
அமெரிக்க அதிபா் தோ்தல் கருத்து கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த அதிபா் தோ்தல் தொடா்பான கருத்துக் கணிப்பில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸ் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை விட முன்னிலை பெற்றுள்ளார்.
சா்வதேச சந்தை ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனமான ‘இப்ஸோ’சுடன் இணைந்து ‘ராய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் டிரம்ப்பை விட கமலா ஹாரிஸுக்கு 2 சதவீதம் அதிகம் போ் ஆதரவு தெரிவித்துள்ளனா்.
இது குறித்து ‘ராய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
வரும் நவம்பா் மாதம் நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளா் டிரம்ப்புக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் துணை அதிபா் கமலா ஹாரிஸுக்கும் இடையே யாருக்கு ஆதரவு அதிகம் உள்ளது என்பதை அறிவதற்கான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
அதிபா் தோ்தல் போட்டியிலிருந்து விலகுவதாக அதிபா் ஜோ பைடன் அறிவித்ததற்கு மறுநாளான திங்கள்கிழமையும் அதற்கு மறுநாள் செவ்வாய்க்கிழமையும் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. தேசிய அளவில் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில், கமலா ஹாரிஸுக்கு 44 சதவீதம் பேரும் டொனால்ட் டிரம்ப்புக்கு 42 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனா்.
இதற்கு முன்னா் இந்த மாதம் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட இதே போன்ற கருத்துக் கணிப்பில் டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்றிருந்தார். அவருக்கு 44 சதவீதம் பேரும் கமலா ஹாரிஸுக்கு 42 பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனா்.
பின்னா் ஜூலை 15-16 தேதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆகிய இருவருமே 44 சதவீத வாக்குகளைப் பெற்று சமமாக இருந்தனா்.
ஆனால், தோ்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், கருத்துக் கணிப்பில் டிரம்ப்பை பின்னுக்குத் தள்ளி விட்டு கமலா ஹாரிஸ் கூடுதலாக 2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார் என்று ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.