15000ம் பேரை அதிரடியாக நீக்கிய பிரபல நிறுவனம்!
15,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை இன்டெல் நிறுவனம் பணிநீக்கம் செய்கிறது. இதற்கான காரணம் என்ன?;
என்விடியா மற்றும் ஏஎம்டி போன்ற போட்டியாளர்களை சமாளித்து தனது வணிகத்தை மீட்டெடுக்கவும், செலவுகளைக் கட்டுப்படுத்தவும் உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் (Intel) தனது ஊழியர்களில் 15 சதவீதக்கும் அதிகமானோர், அதாவது ஏறத்தாழ 15,000க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து பணியாளர்களுக்கு இன்டெல் சிஇஓ பாட் கெல்சிங்கர் அனுப்பிய குறிப்பு ஒன்றில், “இதனைப் பகிர்ந்து கொள்வது எனக்கு கடினமானது. இதை வாசிப்பது உங்களுக்கும் மிகவும் கடினம் என்று என்பது எனக்குத் தெரியும். இது இன்டெல் நிறுவனத்துக்கும் மிகவும் கடினமான நாள். நிறுவனத்தின் வரலாற்றில் சில மாற்றங்களைச் செய்கிறோம்.
நிறுவனம் 2025-ல் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலரைச் சேமிக்கத் திட்டமிட்டிருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், நமது புதிய செயல்பாட்டு மாதிரியுடன் நமது செலவுக் கட்டமைப்பு மறுசீரமைக்க வேண்டும். மேலும், நாம் செயல்படும் அடிப்படையை மாற்ற வேண்டும். நாம் எதிர்பார்த்த அளவுக்கு நமது வருமானம் அதிகரிக்கவில்லை. அதேபோல் ஏஐ போன்ற வலிமையான போக்கில் இருந்து நாம் இன்னும் முழு பலன்களையும் பெறவில்லை. நமது விளிம்பு வருமானம் மிகவும் குறைவு. அடுத்த வாரம் தகுதியான ஊழியர்களுக்கு நிறுவனம் ஒரு மேம்படுத்தப்பட்ட ஊதிய சலுகையை அறிவிக்கும். விருப்பப்பட்டு வெளியேறும் திட்டத்துக்கான விண்ணப்பங்களையும் வழங்கும்.
இந்த முடிவு எனக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது. என்னுடயை பணியில் நான் செய்த மிகக் கடினமான விஷயம் இதுவாகும். இந்த மிகுதியான பணிநீக்கங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும். இந்த மாற்றங்களை நாங்கள் எவ்வாறு செய்கிறோம் என்பது மாற்றங்களைப் போலவே மிகவும் முக்கியமானது என்று நான் நம்புகிறேன். இந்த செயல்முறை முழுவதும் நாங்கள் இன்டெலின் மதிப்புகளை கடைபிடிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியாவை அடிப்படையாகக் கொண்ட சாண்டா கிளாரா நிறுவனமும், செலவைக் குறைக்கும் நோக்கத்தில் பங்குகளுக்கான டிவிடெண்ட் தொகையை நிறுத்தி வைத்துள்ளது. இன்டெல் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ஒரு சிறிய வருவாய் சரிவுடன் அதன் இழப்பினை அறிவித்தது. தனது மூன்றாவது காலாண்டின் வருவாயை சந்தையின் எதிர்பார்ப்பை விட குறைவாக முன்னறிவித்துள்ளது.
வர்த்தகத்துக்கு பின்னர் இன்டெலின் பங்குகள் 19 சதவீதம் சரிந்தது, வெள்ளிக்கிழமை சந்தை தொடங்கும்போது இன்டெல் அதன் சந்தை மதிப்பில் தோராயமாக 24 பில்லியன் டாலர் வரை இழக்கலாம் என்பதை குறித்தது. இன்டெல் நிறுவன் ஏப்ரல் - ஜூன் காலக்கட்டத்தில் 1.6 பில்லியன் இழப்பை பதிவு செய்தது. இது முந்தைய ஆண்டின் 1.5 பில்லியன் லாபத்தில் இருந்து குறைந்துள்ளது. வருவாய் 12.9 பில்லியன் டாலரில் இருந்து குறைந்து 12.8 பில்லியன் டாலராக உள்ளது.
“பணிநீக்கம் உட்பட செலவுகளைக் குறைப்பதற்கான இன்டெல் நிறுவனத்தின் அறிவிப்புகள் குறுகிய காலத்துக்கு அதன் வருவாயை உயர்த்துவதற்கு உதவலாம், என்றாலும் இந்த நடவடிக்கைகள் எல்லாம் வளர்ந்து வரும் சிப் சந்தையில் அதனை நிலை நிறுத்திக்கொள்வதற்கு போதுமானதாக இருக்காது உள்நாட்டு உற்பத்தியில் அமெரிக்க முதலீடு சர்தேச அளவில் ஏஐ சிப்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் சிப் உற்பத்தியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு நிறுவனம் ஒரு முக்கியமான காலக்கட்டத்தை எதிர்கொள்கிறது" என்று இ-சந்தை ஆய்வாளர் ஜேக்கப் பார்ன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.