இந்தியாவின் பாதுகாப்பே முக்கியம் இலங்கை அரசு திட்ட வட்டம்
சீனா ஆய்வு கப்பல் ஒன்று இலங்கைக்கு வர உள்ளது குறித்து அந்நாட்டு அரசிடம் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.;
சீனாவின் ஷி- யான் 6 என்ற ஆய்வு கப்பல் அடுத்த மாதம் இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்திற்கு வர உள்ளதாகவும் அங்கு சில நாட்கள் ஆய்வுகளை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த கப்பல் பிற நாடுகளை குறிப்பாக இந்தியாவை உளவு பார்க்க பயன்படுத்தப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. இலங்கையில் நிறுத்தப்பட உள்ள சீன ஆய்வு கப்பல் குறித்து இந்தியா தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், ஐ.நா.பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் விக்டோரியா நோலன் சீன உளவு கப்பல் குறித்து கவலை தெரிவித்து இருக்கிறார்.
அப்போது வெளிநாட்டு கப்பல்கள் இலங்கையில் எந்த ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதில் பின்பற்றப்பட வேண்டிய நிலையான செயல்பாட்டு நடைமுறையை அரசு வகுத்துள்ளதாக விக்டோரியாவிடம் அலி சப்ரி விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர்.
சீன உளவு கப்பல் குறித்து இலங்கை விளக்கம் அளித்த போதும் இந்த விவகாரத்தில் இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சீன ஆய்வு கப்பலை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை என்று இலங்கை அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு குறித்து இந்தியாவின் கவலை இலங்கைக்கு முக்கியமானது என்று வெளியுறவு அமைச்சர் சப்ரி தெரிவித்துள்ளார்.