இஸ்ரேல் நகரை காப்பாற்றிய இந்திய ராணுவம்

இஸ்ரேல் நகரை காப்பாற்ற போரிட்டு பல நுாறு இந்திய ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2023-10-11 17:15 GMT

பைல் படம்

நுாற்றுக்கணக்கான இந்திய ராணுவவீரர்கள் தங்களது உயிரை கொடுத்து இஸ்ரேல் நகரை காப்பாற்றி உள்ளனர்.

பிற்காலத்தில் எதிரியாவான் என தெரிந்தால் அவனை கருவிலேயே அழித்து விடும் மொஸாட் (Mossad) முறை கொண்ட ராணுவம். உலகுக்கே விஞ்ஞானத்தைக் கற்றுக்கொடுத்த நாடு. பாலைவன நாடாக இருந்தாலும் ஆச்சர்யப்படும் விதத்தில் விவசாயத்தில் தன்னிறைவு பெற்ற நாடு. சுற்றிலும் இஸ்லாமிய நாடுகள் இருந்தாலும் 'தனி ஒருவன்'. தனது நாட்டைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டால் 1 க்கு 9 பேரைக் கொல்லும் அதிரடிக்கு பெயர் போன நாடு.

அமெரிக்கா போலவே சர்வவல்லமை பொருந்திய, பலம் வாய்ந்த நாடாக இருந்தாலும் சில விஷயங்களில் அந்த அமெரிக்கா கூட வைத்திராத நுண்ணிய ராணுவ தொழில் நுட்பமும், அணு ஆயுத பலமும் கொண்ட நாடுதான் இந்த இஸ்ரேல்.

இஸ்ரேலில் பிறக்கும் குழந்தை ஆணோ பெண்ணோ அனைவருக்கும் ராணுவப் பயிற்சி கட்டாயம். கரு உருவானாலே இஸ்ரேலிய தாய் குறிப்பிடத்தக்க விதிகளைப் பின்பற்ற ஆரம்பித்து விட வேண்டும். அப்படிப் பின் பற்றினால் தான் அக் குழந்தைகள் அறிவாளியாகவும் பலசாலியாகவும் பிறக்கும் என்று இஸ்ரேலிய மக்கள் நம்புகிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு நாட்டின் குழந்தைகள், நமது இந்திய ராணுவ வீரர்கள் பற்றி பாடம் படிக்கிறார்கள் என்றால் ஆச்சர்யம்தானே! இதன் பின்னணி சுவாரஸ்யம் நிறைந்தது.

100 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய இஸ்ரேலில் உள்ள ஒரு முக்கிய நகரம் தான் ஹைஃபா நகரம். துருக்கியின் ஆட்சியாளர்களின் பிடியில் இருந்தது. ஜெர்மனியின் ஆதரவுடன் துருக்கி ஆட்சியாளர்கள் ஹைஃபா நகரில் கொடுங்கோல் ஆட்சி புரிந்தனர்.

ஹைஃபா மக்கள், துருக்கியிடம் இருந்து விடுதலைப் பெற போராடிக் கொண்டிருந்தனர். 1918-ம் ஆண்டு முதலாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த காலம் அது. ஜெர்மனிக்கு ஆதரவாக இருப்பதால், துருக்கிக்கு பாடம் புகட்ட பிரிட்டனும் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தது.

அப்போது நமது இந்தியாவை ஆண்ட பிரிட்டன் 15-வது காவல்ரி பிரிகேட் குழு படையை ஹைஃபா நகருக்கு அனுப்பி வைக்க தேர்ந்தெடுத்தது. ஹைதராபாத், மைசூர், ஜோத்பூர் நகரங்களை சேர்ந்த இந்திய ராணுவ வீரர்கள் இணைந்த குழு இது. குதிரையில் சென்று அம்பு, நீண்ட கத்தி, ஈட்டி போன்ற பிரத்தியேகப் போர் கருவியைக் கொண்டு போரிடுவதில் வல்லவர்கள்.

1918-ம் ஆண்டு இந்திய காவல்ரி படை மேஜர் தல்பாத்சிங் தலைமையில் ஹைஃபா நகருக்கு அனுப்பப்பட இறங்கிய வேகத்தில் கூட்டு அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். துருக்கி மற்றும் ஜெர்மனிப் படை வீரர்கள் இந்த அதிரடித் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. இத்தனைக்கும் அவர்களிடம் நவீன துப்பாக்கிகள் இருந்தன.

போர்க்களத் திட்டமிடல், பயமின்றி மூர்க்கத்தனமாக தாக்கும் இந்தியப் படையினர் முன் நிற்க முடியாமல் துருக்கி, ஜெர்மனி படைகள் தோற்று ஓடியது. போரின் முடிவில் ஹைஃபா நகருக்கு விடுதலைக் கிடைத்தது. களத்தில் நிறைய இந்திய வீரர்கள் பலியாகினர். இவர்களின் உடல்கள் இஸ்ரேல் முழுவதும் பல்வேறு பகுதிகளில் எல்லை சாமிகள் போல் புதைக்கப்பட்டன.

இந்திய வீரர்களின் வீரத்தைப் பறைசாற்றும்விதமாக ஹைஃபா நகரில் போர் நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தில் ஹைஃபா நகர மேயர் தலைமையில் மக்கள் இங்குக் கூடி இந்திய வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவது இன்றும் வழக்கம்.

இஸ்ரேலிய குழந்தைகள் இந்திய வீரர்களின் தியாக வரலாறு பற்றித் தெரிந்துகொள்ளும் வகையில் வரலாற்றுப் பாடத்தில் இந்திய ராணுவ வீரர்களின் ஹைஃபா வெற்றி பற்றிய பாடமும் இடம் பெற்றுள்ளது. ஹைஃபா நகர மேயர் யோனா யாகவ், 'மேஜர் தல்பாத் சிங் எங்களுக்கு மட்டும் சுதந்திரம் வாங்கித் தரவில்லை. இந்த மத்திய கிழக்குப் பகுதியின் தலையெழுத்தையும் மாற்றியிருக்கிறார்.

இந்திய ராணுவ வீரர்கள், அந்நிய தேசத்துக்காக தங்கள் உயிரைக் கொடுத்துள்ளனர். அவர்களின் தியாகம் என்றும் போற்றப்படக் கூடியது. அதனால் தான் 3 முதல் 5-ம் வகுப்பு வரையிலான எங்கள் பள்ளிப் பாடங்களில் இந்திய ராணுவ வீரர்கள் பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளது என்கிறார்.

Tags:    

Similar News