இரானுக்கு கடும் பதிலடி தொடங்கி விட்டதா இஸ்ரேல்..??
இரான் மீது இஸ்ரேல் சைபர்தாக்குதல் நடத்தி உள்ளது.;
இரான் நடத்திய பல்வேறு ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் பதிலடி விரைவில் தொடங்கும் எனத் தோன்றுகிறது. முன்பு, இரானின் நெருங்கிய கூட்டாளிகளாகிய ஹெஸ்பொலா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவையும், ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவையும் இஸ்ரேல் கொலை செய்ததற்கான பதிலடியாகவே இரான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறுகிறது.
இஸ்ரேலின் பதிலடி "துல்லியமானதாகவும் மரண அடியாகவும்" இருக்கும் என்றும், இரான் எதிர்பார்க்காத தருணத்தில் பதிலடி விழும் என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட் கூறினார். வளைகுடாவில் இருக்கும் சில அரபு நாடுகள், இஸ்ரேலுடன் முழு அளவிலான ராஜ்ஜீய உறவுகளைக் கொண்டுள்ளன. அவை, இரான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் தங்கள் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று இரான் எச்சரித்துள்ளது.
இரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு உதவி செய்யும் எந்த நாடும் தனது பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் இரான் கூறியுள்ளது. இஸ்ரேலின் திட்டமிட்ட தாக்குதல் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆலோசனை நடத்தும் இந்த நேரத்தில் கீழ்க்காணும் காரணிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இரானின் அணு ஆயுத கட்டமைப்புகள் மீதான எந்தவொரு தாக்குதல் நடவடிக்கைக்கும் அமெரிக்கா தனது எதிர்ப்பை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.
எண்ணெய் உற்பத்தியகங்கள் மீதான தாக்குதல் எரிபொருள் விலைகளை உயர்த்தும். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு நான்கு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், வெள்ளை மாளிகை அந்த வகையான தாக்குதல்களை வரவேற்காது. அதோடு, மத்திய கிழக்கு மற்றொரு போரில் சிக்கிக் கொள்வதை வெள்ளை மாளிகை விரும்பாது.
கடந்த ஏப்ரல் மாதம் இதுபோன்ற ஒரு நெருக்கடி ஏற்பட்டபோது, இஸ்ரேலின் நட்பு நாடுகளால் முன்னெடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கான வாய்ப்புகள் இந்த முறை குறைவாகவே உள்ளது.
லெபனான், காஸா, ஏமன், சிரியா ஆகிய அனைத்து எதிரிகளையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள இஸ்ரேல் தீர்மானித்துள்ளது. இந்தச் சூழலில் நெதன்யாகுவின் அரசுக்கு பின்வாங்கும் மனநிலை கொஞ்சம்கூட இல்லை எனத் தெரிகிறது.
அமெரிக்க உளவுத்துறையின் செயற்கைக்கோள் உதவியுடனும், இரானில் உள்ள மொசாட் (இஸ்ரேலின் வெளிநாட்டு உளவு முகமை) உளவாளிகளின் உதவியுடனும், பல விதமான இலக்குகளை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (ஐடிஎஃப்) தேர்வு செய்ய வாய்ப்புண்டு. அவற்றைப் பொதுவாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:
1. பாரம்பரிய ராணுவ வழிமுறை: இரான் தன்னுடைய ஏவுகணைகளை ஏவிய தளங்கள், இஸ்ரேலின் உடனடியான இலக்காக இருக்கும். ஏவுதளங்கள், கட்டுப்பாட்டு மையங்கள், எரிபொருள் நிரப்பும் தொட்டிகள், சேமிப்பு பங்கர்கள் ஆகியவற்றை அவர்கள் தாக்கலாம். மேலும், ஐஆர்ஜிசி-க்கு சொந்தமான தளங்கள், வான் பாதுகாப்பு மற்றும் பிற ஏவுகணை பீரங்கிகள் மீதும் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. இரானின் ஏவுகணைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய நபர்களைக் கொலை செய்திடவும் இஸ்ரேல் முயற்சி எடுக்கலாம்.
2. பொருளாதார முனை: இரானுக்கு கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில், இரானுடைய பெட்ரோகெமிக்கல் ஆலைகள், மின் உற்பத்தி மற்றும் சாத்தியமான கப்பல் போக்குவரத்து தளங்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்படலாம். எனினும், இந்தத் தாக்குதலால் ராணுவத்தைவிட சாதாரண மக்களின் வாழ்க்கையே அதிகம் பாதிக்கப்படும் என்பதால் இரான் மக்களிடம் எதிர்ப்பை உருவாக்கும் நடவடிக்கையாக இது இருக்கும்.
3. அணு சக்தி தளங்கள்: இஸ்ரேல் முன் உள்ள வாய்ப்புகளில் இதுவே மிகப்பெரியது. மக்களின் அணுசக்தி தேவைக்கான 20%க்கும் அதிகமாக அளவு யுரேனியத்தை இரான் வளப்படுத்துகிறது என்பது ஐஏஇஏ என்ற ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பால் நிறுவப்பட்டுள்ளது. எனவே, இரான் மிகக் குறுகிய காலத்திற்குள் அணுகுண்டு தயாரிக்கும் திறனை அடையும் "பிரேக்-அவுட்" புள்ளியை எட்டிவிட முயல்கிறதோ என்று இஸ்ரேல் சந்தேகிக்கிறது. எனவே, இஸ்ரேலின் சாத்தியமான இலக்குப் பட்டியலில் இரானின் ராணுவ அணுசக்தித் திட்டத்தின் மையமாக உள்ள பர்சின், தெஹ்ரான், போனாப், ராம்சரில் உள்ள ஆராய்ச்சி உலைகள், புஷர், நதான்ஸ், இஸ்பகான், பெர்டோ ஆகிய இடங்களில் உள்ள பெரிய வசதிகள் ஆகியவை அடங்கியுள்ளன.
அவ்வாறு தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலின் மீது இரானின் பதிலடி எவ்வாறு இருக்கும் என்று ஊகித்து அதை எப்படித் தணிப்பது என்பது குறித்தும் திட்டமிடப்படுகின்றன. இஸ்ரேலின் ராணுவ இலக்குகள் எனக் கூறப்படும் இடங்களில் இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் மூலம் இப்போது கணக்கு சரிசமமாகி விட்டது என்பதே இரானின் நிலைப்பாடு. ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் அது திரும்பத் தாக்கும் என்று எச்சரிக்கிறது. "இது எங்கள் திறன்களின் ஒரு துளி மட்டுமே," என்று இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறினார்.
"சியோனிச ஆட்சி இரானின் நடவடிக்கைகளுக்குப் பதிலளித்தால், பின்னர் அது கொடூரமான் தாக்குதல்களை எதிர்கொள்ளும்," என்று ஐஆர்ஜிசி கூறியது.
ராணுவரீதியாக இரானால் இஸ்ரேலை வெல்ல முடியாது. அதன் விமானப் படை பழையது, சீரற்றது, அதன் வான் பாதுகாப்பில் பல ஓட்டைகள் உள்ளன. மேற்கத்திய நாடுகளின் தடைகளையும் பல ஆண்டுகளாக எதிர்கொண்டுள்ளது.
ஆனால் அதனிடம் இன்னும் ஏராளமான பாலிஸ்டிக் ஏவுகணைகளும் பிற ஏவுகணைகளும், வெடிபொருள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானங்களும் உள்ளன. மேலும், இவற்றோடு சேர்த்து மத்திய கிழக்கில் பல்வேறு நாடுகளில் உள்ள பல ஆயுதக்குழுக்களும் இரானுக்கு ஆதரவாக இருக்கின்றன.
இரானின் அடுத்த பதிலடியில், அது ஏவும் ஏவுகணைகள் இஸ்ரேலின் ராணுவ தளங்களுக்குப் பதிலாக குடியிருப்புப் பகுதிகளை இலக்காகக் கொண்டிருக்கலாம். கடந்த 2019இல் இரான் ஆதரவு ஆயுதக்குழு ஒன்று சௌதி அரேபியாவின் எண்ணெய் வசதிகளைத் தாக்கியது. இரானின் அண்டை நாடுகளை அதனால் எவ்வளவு எளிதில் தாக்க முடியும் என்பதை அந்த நிகழ்வு எடுத்துக் காட்டியது.
வளைகுடாவில் செயல்படும் ஐஆர்ஜிசி கடற்படையிடம், சிறிய, வேகமான ஏவுகணைத் தாக்குதல் படகுகளைக் கொண்ட பெரிய கப்பல் படை உள்ளது. இவை திரள் தாக்குதல் வழியாக அமெரிக்க கடற்படையின் 5வது கப்பல் படைக்குச் சொந்தமான போர்க்கப்பலின் பாதுகாப்புக்கு சவாலாக அமையும்.
உத்தரவு கிடைத்தால், உலகின் தினசரி எண்ணெய் ஏற்றுமதியில் 20% வரை பாதிக்கும் வகையில் ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணி வெடிகளை வைக்க இரான் முயலக்கூடும். இது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
குவைத் முதல் ஓமன் வரை அரேபிய நிலத்தில் அமெரிக்க ராணுவ தளங்கள் பரவலாக உள்ளன. இரான் தாக்கப்பட்டால் அது இஸ்ரேலை மட்டுமின்றி, அந்தத் தாக்குதலுக்கு ஆதரவு அளிப்பதாகக் கருதும் எந்த நாட்டையும் தாக்கும் என்று இரான் எச்சரித்துள்ளது.
இஸ்ரேலிலும், அமெரிக்காவிலும் உள்ள ராணுவ வல்லுநர்கள் தற்போது இந்தச் சூழ்நிலைகளைப் பரிசீலித்து வருகிறார்கள். இதற்கிடையில் இரான் மீது இஸ்ரேல் சைபர் தாக்குதல் நடத்தி உள்ளது. இரானின் அணு உலைகள், பெட்ரோல் உற்பத்தி மையங்கள், பொருளாதார நிலைகள், முக்கிய ராணுவநிலைகளில் உள்ள எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் பொருட்கள் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரானின் ரகசியங்கள் திருடப்பட்டுள்ளன. ஈரானின் முக்கிய கம்ப்யூட்டர்கள் செயல் இழக்க செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில் மொபைல் போன் தவிர வேறு எந்த எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் பொருட்களை (குறிப்பாக பேஜர், வாக்கி டாக்கி) விமான பயணத்தின் போது எடுத்துச் செல்லக்கூடாது என ஈரான் அறிவித்துள்ளது.